PUBLISHED ON : மே 08, 2011

இதுவரை: விமான பணிப்பெண்ணான கவிதாவின் குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக, ஆஸ்திரேலியாவில் இருந்த மதுரிமாவிடம் விசாரித்தது ஆஸ்திரேலிய போலீஸ். இதில் கொஞ்சம் டென்ஷனான மதுரிமா மயக்க மடைந்தாள். குழந்தை காணாமல் போன விஷயத்தை ஆண்டர்சனிடம் கூற வேண்டும் என்றான் நரேன். அதற்கு, கவிதா முதலில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், பிறகு, ஆண்டர்சனிடம் தகவல் தெரிவித்தாள். குழந்தை, நரேன் விட்டில் இருப்பதாக ஆண்டர்சன் கூறியதைக் கேட்ட கவிதா நிலை குலைந்தாள் —
ஆண்டர்சன் போனில் சொன்ன தகவல், கவிதாவைக் குழப்பம் அடைய வைத்தது.
'இது எப்படி சாத்தியம்? என் குழந்தையைக் கொண்டு போய், நரேன் வீட்டில் விட்டது யார்? இதனால், யாருக்கு என்ன லாபம்? எதற்காக இப்படி ஒரு விளையாட்டு?
'நிச்சயமாக இந்த வேலையை நரேன் செய்திருக்க மாட்டார். அவரே, என் குழந்தையைக் கடத்திட்டுப் போய், அவர் வீட்டில் வைத்துக் கொண்டு, ஒன்றும் அறியாதவரைப் போல் என்னுடன் சேர்ந்து, குழந்தையைத் தேடுவாரா? நோ... நிச்சயமாக நரேன் அப்படிப்பட்ட ஆளில்லை.
'அப்படியானால்... வேறு யார் இதைச் செய்திருக்கக் கூடும். என் குழந்தை இருக்கும் இடத்தை, இப்போது என்னிடம் சொன்ன என் மாஜி கணவன் ஆண்டர்சனின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்.
'ஆண்டர்சன், எதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க வேண்டும். இதன் மூலம், அவன் அடைய நினைப்பது என்ன? இதுபோன்ற கடத்தல்களில் இருக்கும் வழக்கமான எதிர்ப்பார்ப்புகளான பணம், பொருள், எதற்கோ சம்மதிக்க வைத்தல் போன்ற விஷயங்கள் இந்தக் கடத்தலில் இல்லை.
'அப்படியானால், இந்தக் கடத்தலின் மூலம் ஆண்டர்சன் எதிர்ப்பார்ப்பது என்ன?
'ஒரு வேளை, அவனது மனோவியல் மூளை, இந்தக் குழந்தையைக் கொண்டு போய், நரேன் வீட்டில் விட்டிருப்பதன் மூலமாக, வேறு எதையோ நிகழ்த்தி பார்க்க விரும்புகிறதோ?'
ஆண்டர்சனிடம் போனில் பேசிய கவிதா, எதற்காக இத்தனை யோசிக்கிறாள் என்ற கேள்வி நரேனுக்குள் எழுந்தது.
''ஆண்டர்சன் என்ன சொல்கிறார் கவிதா?''
'நரேன் வீட்டில்தான் என் குழந்தை இருக்கிறது என்ற உண்மையை, இப்போதைக்கு இவரிடம் சொல்ல வேண்டாம்!'
சட்டென்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள் கவிதா.
''நரேன்... நான்தான் சொன்னேனே... குழந்தை காணாமல் போயிருப்பதை அவர் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை.''
''சே... என்ன மனிதர் அவர். நீ அந்தக் குழந்தைக்கு அம்மா என்றால், அவர் அப்பா. சரி... என்னதான் சொன்னார்?''
''விடுங்க நரேன்... 'யார் கடத்தி இருப்பாங்க...'ன்னு என்னையே கேட்கிறார். 'உடனே போலீசுக்குப் போயிடாதே... கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாரு...'ன்னு, 'அட்வைஸ்' வேற!''
அவள் மனமறிந்து பொய் சொன்னாள். இதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல், அவளைப் பற்றிக் கொண்டது.
ஆனால், நரேன் மனநிலை அப்படி யில்லை; குழந்தை காணவில்லை என்பதில், உண்மையிலேயே பதற்றத்துடன் இருந்தான் அவன்.
''கவிதா... நான் வேணும்ன்னா ஆண்டர்சனை சந்திச்சு, பேசி பார்க்கட்டுமா?''
''எதுக்கு?''
''ரெண்டு பேருமா சேர்ந்து தேடறதுக்குத்தான்!''
''வேணாம்... என் குழந்தையைத் தேடுவதற்கு நீங்க, அவரோட சேருவது நமக்கு வேறு ஏதாவது பிரச்னையைப் புதிதாய் கொண்டு வரலாம்.''
அவள் சொல்வதில் உள்ள யதார்த்தம், அவனுக்குப் புரிந்தது.
''ஓ.கே., அடுத்து என்ன செய்யலாம்?''
''ஆண்டர்சன் சொன்ன மாதிரியே வெயிட் செய்து பார்ப்போம். இப்போதைக்கு வேற வழி எதுவும் தெரியல.''
''அப்போ... நான் புறப்படட்டுமா?''
''ம்... ரொம்ப தேங்க்ஸ்... நான் உங்கள சிரமப்படுத்திட்டேன்... சாரி!''
''அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எந்த உதவியா இருந்தாலும், தயங்காதே; உடனே போன் பண்ணு.''
''ஒரு நிமிஷம்... இப்ப நேரா நீங்க வீட்டுக்குப் போறீங்களா, இல்ல...''
இழுத்தவாறு நிறுத்தினாள்.
நரேன் வீட்டுக்குப் போகும் பட்சத்தில், அங்கிருக்கும் தன் குழந்தையை பார்க்க நேரிடும். ஏனோ கவிதாவின் உள் மனது, அதை, உடனே நிகழ்த்த விரும்பவில்லை.
இக்குழந்தைக் கடத்தல் நாடகத்தில் இன்னும் சில காட்சி மாற்றங்களை காண விரும்பினாள்.
''இல்லை... நான் வீட்டிற்குப் போகல... வேற ஒரு வேலை இருக்கு; அதை முடிச்சுட்டுப் போகலாம்ன்னு இருக்கேன்.''
''ஓ.கே., உங்க வேலை முடிஞ்சதும், நீங்க வீட்டுக்குப் போறதுக்கு முன், எனக்கு ஒரு போன் செய்யுங்க... ப்ளீஸ்!''
''நிச்சயமாக... அப்ப நான் கிளம்பறேன்.''
நரேன் காரில் ஏறிப் புறப்படுவதை பார்த்தபடியே நின்றிந்தாள்.
நரேனின் கார், பார்வையிலிருந்து மறைந்த பின், அவள் மனதில், சட்டென்று வேறு ஒரு எண்ணம் தோன்றியது.
'என் குழந்தையை நரேனின் வீட்டில் பார்த்ததாக ஆண்டர்சன் சொன்னது உண்மையாக இருக்குமா? ஒரு வேளை, ஏதோ ஒரு காரணத்திற்காக, ஆண்டர்சன் வேண்டுமென்றே பொய் சொல்லி இருந்தால்...'
குழந்தையைப் பற்றிய கவலையும், பயமும் மீண்டும் அவளைத் தொற்றிக் கொண்டது.
'குழந்தை, நரேனின் வீட்டில்தான் இருக்கிறதா என்பதை, எப்படி தெரிந்து கொள்வது? நரேனின் வீடு தெரிந்த ஒன்றுதான். டாக்சி பிடித்தால், ஒரு மணி நேரத்தில், வீட்டிற்கு போய் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்; ஆனால், நான் அங்கே போகும் போது, எதிர்பாராதவிதமாக நரேன் வீடு திரும்பி விட்டால்...
'நரேனுக்கு, என் மீதே சந்தேகம் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த யோசனையும், வழியும் வேண்டாம்... வேறு என்ன வழி?'
யோசித்துக் கொண்டிருந்தாள் கவிதா.
அதே நேரத்தில், சிட்னி விமான நிலையத்துக்கு மதுரிமாவும், அவள் அம்மாவும் காரில் வந்து இறங்கினர். பின்னால் வந்த இன்னொரு காரிலிருந்து, சபா செக்ரட்டரியும், அவரோடு வந்தவர்களும் இறங்கினர். அனைவரும் விமான நிலையத்திற்குள் பிரவேசித்தனர்.
விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.
''மன்னிக்கணும் சார்... இப்படி நடக்கும்ன்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல... அடுத்த முறை வரும் போது, இதற்கு, ஈடு பண்ணிடலாம். இந்த தடவை பெரிய மனசு வெச்சு, என்னை மன்னிக்கணும்.''
சபா செகரட்டரியிடமும், மற்றவர்களிடமும் நிகழ்ச்சியை ரத்து செய்ததற்காக மன்னிப்புக் கேட்டாள் மதுரிமா.
''பரவாயில்லம்மா... நீ வேணும்ன்னா ரத்து பண்ணிருக்கே... உடம்புக்கு முடியலேன்னா, உன்னால் எப்படி நடனம் ஆட முடியும்? உன் நிலைமைல வேற யாரு இருந்தாலும், இதைத்தான் செஞ்சிருப்பாங்க. உடம்பை பாத்துக்கம்மா... எந்தக் கலைஞரா இருந்தாலும், சுவர் இருந்தாத்தான் சித்திரம்.''
''நன்றி சார்... இனிமே நாங்க பாத்துக்கறோம்; நீங்க புறப்படுங்க.''
அவர்கள் விடை பெற்று கொண்டனர்.
தன்னுடைய உடைமைகளை கஸ்டம்சில் சோதனைக்கு அனுப்பிவிட்டு, அவள் அம்மாவுடன் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தபடி, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அம்மா... எத்தனை சந்தோஷமாக, எனக்கும், நரேனுக்கும் பிறக்க போகும் குழந்தையைப் பற்றி, என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்... நான் தாயாக வேண்டும் என்பதில், என்னுடைய தாயான இவளுக்குத் தான் எத்தனை சந்தோஷம், எதிர்பார்ப்பு, கனவுகள்!'
அவளையும் மீறி எழுந்த ஒரு உணர்வில், அவளது வலது கரத்தால் அடிவயிற்றை மெல்லத் தொட்டுப் பார்த்தாள். அந்த நினைவே ஒரு சங்கீதமாக இனித்தது.
''என்ன மது... எதையோ யோசிக்கற மாதிரி தோணுது?''
''ஒண்ணுமில்லம்மா... நீ சொன்னதைப் பற்றி யோசிச்சுப் பாத்தேன்.''
''நான் என்ன சொன்னேன்?''
''அமெரிக்காவுக்குப் போனதும், டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீயே... அதப்பத்தி யோசிச்சேன்.''
அந்தத் தாய்க்கு, மகள் சொல்வது புரிந்து விட்டது.
''மது... குழந்தையைப் பற்றி மாப்பிள்ளை உங்கிட்ட எப்பவாச்சும் பேசி இருக்காரா?''
''இதுவரைக்கும் பேசல... இனிமே பேசலாம்!''
''நிச்சயம் பேசுவார்... அவரா வாயைத் திறந்து கேட்கறதுக்கு முன், நீயே அந்த சந்தோஷத்தை அவருக்குக் கொடுத்துடணும்.''
''அம்மா... ஒரு சந்தேகம்!''
''என்ன?''
''குழந்தை பிறந்ததுக்கப்புறம் அவரோட பிரியம் குறைஞ்சு போயிடுமா?''
''இதென்ன கேள்வி... 'குழந்தை பிறந்தா புருஷனோட பிரியம் குறைஞ்சு போயிடும்...'ன்னு உனக்கு யார் சொன்னது? உம்மேல பிரியம் இல்லாமப் போயிடுமா? அசடு மாதிரி பேசாதே; அதுக்கப்புறமா தான் உம்மேல பிரியம் அதிகமாகும்.''
''அதுக்கில்லம்மா... 'குழந்தைங்கறது கணவன் - மனைவிங்கற உறவுல இடைவெளியை கொண்டு வர்ற விஷயம்...'ன்னு சொல்றாங்களே... அதுக்காகக் கேட்டேன்.''
''நீ சொல்ற இடைவெளி நிச்சயம் வரும்; ஆனா, அது வெறும் உடல் ரீதியான இடைவெளி... மனசு இடைவெளியே இல்லாம ரொம்பவும் இறுக்கமாயிடும். இதெல்லாம் அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கற விஷயம். பின்னாடி உனக்கே புரியும்!''
''சரிம்மா... 'இப்போதைக்கு குழந்தை வேணாம்...'ன்னு அவர் சொல்லிட்டா?''
''அவர் சொல்லிட்டார்ன்னு, நீ பாட்டுக்கு, 'சரி'ன்னு தலையை ஆட்டிடாதே... 'எனக்கு வேணும்...'ன்னு அடம்பிடிச்சு, சாதிக்கப் பாரு; அதுதான் உனக்கு நல்லது.''
''சரிம்மா... நாம விமான நிலையத்துக்கு வந்துட்ட விஷயத்தை அவர்கிட்ட சொல்றேன்.''
நரேனை மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சித்தாள்; நரேனின் மொபைல், அவள் முயற்சிக்கும் போதெல்லாம், 'பிசி'யாகவே இருந்தது.
''சே... இவ்வளவு நேரமா யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு?''
- அவளுக்குள் வந்த கோபத்தை, வாய்விட்டு வார்த்தைகளாக்கினாள்...
''வேற யார்கிட்ட... அந்த சண்டாளி கவிதாகிட்டத்தான் பேசிக்கிட்டிருப்பாரு. மது... பேசாம வீட்டு லைனுக்கு முயற்சி பண்ணு... அது, ப்ரீயாத்தானே இருக்கும்?''
அமெரிக்காவிலுள்ள அவளது வீட்டு நம்பருக்கு தொடர்பு கொண்டாள்; டெலிபோன் ஒலிக்கும் ஓசை கேட்டது.
''ஹலோ... யார் பேசுறது''
''ஜெசிகா... நான் மது பேசறேன்.''
''ஹலோ மேடம்... எப்படி இருக்கீங்க... எப்போ இங்கு வருவீங்க?''
''ஜெசி... நான் புறப்பட்டுட்டேன்... சார் இல்லையா?''
''சார் இன்னும் வீட்டுக்கு வரல.''
ஜெசிகா, ஆங்கிலமும், அரைகுறைத் தமிழும் கலந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அதுவரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த கவிதாவின் குழந்தை, எதையோ நினைத்து, அழ ஆரம்பித்தது. ஒரு வினாடி நிறுத்தி, குழந்தையிடம், ''அழாதே... கொஞ்சம் இரு... நான் வந்துடறேன்,'' என்றாள் ஜெசிகா.
மதுரிமாவிற்கு, திடீரென ஜெசிகா பேசுவது ஒன்றும் புரியாமல், ''ஜெசிகா... என்ன பேசற நீ?''
''மேடம்... குழந்தை அழுவுது... பரவாயில்லை. நீங்க சொல்லுங்க.''
ஜெசிகா சொன்னதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தாள் மதுரிமா.
''ஜெசி... நீ என்ன சொல்ற? குழந்தை அழுவுதா... எந்த குழந்தை, யாரோட குழந்தை?''
'' மன்னிக்கணும்... இது யாரோட குழந்தைன்னே எனக்குத் தெரியல... இது எப்படி நம்ம வீட்டுக்குள்ள வந்ததுன்னும் தெரியல... சார் வந்த பின்தான் கேட்கணும்.''
கவிதாவின் குழந்தையைக் காணவில்லை என்று, ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் அவளிடம் விசாரித்தது, மதுரிமாவின் நினைவில் தோன்ற, 'அப்படியென்றால், நம் வீட்டில் இருப்பது கவிதாவின் குழந்தையா?' இந்த எண்ணமே மதுரிமாவுக்கு மறுபடியும் மயக்கத்தைக் கொண்டு வருவதை போல் உணர்ந்த அவள், சுதாரித்து, தொடர்ந்தாள்.
''ஜெசி... யாருக்கும் தெரியாமல், யாரோ ஒருத்தரோட குழந்தை நம்ம வீட்டுக்குள்ள எப்படி வர முடியும்?''
''புரியல மேடம்... உண்மையிலேயே ஆச்சரியமாயிருக்கு; சார் கிட்டத்தான் கேட்கணும்.''
ஜெசிகாவே தொடர்ந்தாள்...
''மேடம்... இன்னைக்கு நான் வழக்கம் போல வீட்டுக்கு வந்தேன். நான் வந்த பிறகு, சார் ஆபிசுக்குப் புறப்பட்டுப் போனாரு... நான் சமையல் அறையில் வேலையா இருந்தப்போ... வீட்டுக்குள்ள குழந்தை அழற சப்தம் கேட்டது. நான் கிச்சன்ல இருந்து ஹாலுக்கு வந்து பார்த்தா... சாரோட பெட்ரூம்ல இருந்து இந்த குழந்தை அழுதுகிட்டே வெளில வந்தது...''
சொல்ல வந்ததை முடிக்காமல், இழுத்து நிறுத்தினாள் ஜெசிகா.
''மேடம்... நான் இப்ப சாருக்கு போன் பண்ணி கேட்கவா?''
''வேணாம்... நீ அந்தக் குழந்தையைப் பத்திரமா பாத்துக்க... சார் கிட்ட நான் பேசிக்கிறேன். நாளைக்கு காலைல நான் வந்துடுவேன்.''
ஜெசிகாவுடன் பேசுவதை அத்துடன் துண்டித்துவிட்டு, சில விநாடிகளுக்கு இரு கண்களையும் மூடியபடி மவுனமாக இருந்தாள் மதுரிமா.
''மது... ஜெசிகா என்ன சொல்றா? எனக்கு பயமா இருக்கு.''
''அம்மா... கொஞ்ச நேரம் பேசாம இரும்மா... பயத்துல நீ பாட்டுக்கு எதையாவது சொல்லி, என்னையும் பயமுறுத்திடாதே.''
'சே... என்ன வாழ்க்கை இது... அடுத்த நிமிடம் எப்படி மாறப் போகிறது என்பது தெரியாமல், நம்மை எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி புரட்டிப் போட்டு அலைக்கழிக்கிறது!' என நினைத்தாள்.
''இல்ல மது... நீ எங்கிட்ட சொல்லியே ஆகணும். அங்கே என்னமோ நடந்துகிட்டிருக்கு. சொல்லு... என்ன நடக்குது?''
அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவளாக, விசும்பி அழுதாள்; மதுவின் தாய் மனம் பதறியது.
''சொல்லிவிட்டு அழு... இல்லேன்னா என்னால தாங்கிக்க முடியாது; நானும் அழுதுடுவேன்.''
''அம்மா... நம்ம வீட்ல என்னோட குழந்தை துள்ளி விளையாடணும்ன்னு நீயும், நானும் ஆசைப்பட்டோம் இல்ல? இப்போ...''
''சொல்லு... இப்போ என்ன?''
''இப்போ... நம்ம வீட்ல அந்த கவிதாவோட குழந்தை துள்ளி விளையாடிக்கிட்டிருக்கு. ஆமாம்மா... அந்த கவிதாவையும், அவளோட குழந்தையையும் அவர் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டார்.''
அதற்கு மேல் பேச முடியாதவளாக, தன் இரு கைகளாலும் முகத்தை மூடி, குலுங்கி அழுதாள்.
மகளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாதவளாய் விக்கித்து நின்றாள் மதுரிமாவின் தாய்.
வாழ்க்கையின் மாற்றங்கள் தெரிவதில்லை என, மதுரிமா கொஞ்ச நேரத்திற்கு முன்பு வருத்தப்பட்டாள். வாழ்க்கையில் நிகழும் உண்மைகளும், சில நேரங்களில் அப்படித்தான் அமைகின்றன. உண்மை, தன்னை உடனே வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிற்கிறது. வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே எத்தனையோ சுவாரசியமான நிகழ்வுகள் சம்பவித்து விடுகின்றன.
கவிதாவின் குழந்தை தன் வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தது என்ற உண்மை அறியாதவளாய், கவிதா - நரேன் பற்றிய தன்னுடைய யூகத்தில் கலங்கி நின்றாள் மதுரிமா.
ஒலி பெருக்கியில் இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்படப் போவதாக பயணிகளுக்கான அறிவிப்பு ஒலிபரப்பானது.
— தொடரும்.
-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்
