தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக.... (23)

உயிரே உனக்காக.... (23)

உயிரே உனக்காக.... (23)


PUBLISHED ON : மே 15, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: நரேன் வீட்டில்தான், தன் குழந்தை இருக்கிறது என்று தெரிந்த பின்னும், அந்த விஷயத்தை நரேனிடம் கூறாமல் மறைத்தாள் கவிதா. ஆண்டர்சனுடன் சேர்ந்து, குழந்தையை தேடலாம் என்று நரேன் யோசனை கூறியதையும் நிராகரித்தாள். சிட்னி விமான நிலையத்திலிருந்து, நரேனிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டாள் மதுரிமா; ஆனால், அது, 'பிசி'யாக இருக்கவே, வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டாள். வீட்டிலிருந்து ஜெசிகா பேசும் போது, குழந்தை ஒன்று அங்கு இருப்பதை அறிந்து, குழம்பினாள்
மதுரிமா —


நரேனின் மனசுக்குள் பலவிதமான சிந்தனைகள் ஒன்றன் பின் ஒன்றாய் தோன்றுவதும், மறைவதுமாய் அவனை அலைக்கழித்தன. மதுரிமாவைப் பற்றி, கவிதாவைப் பற்றி, காணாமல் போயிருக்கும் கவிதாவின் குழந்தையைப் பற்றி, அதைத் தொடர்ந்து ஆண்டர்சன், வைத்தீஸ்வரன் என எண்ணங்கள் வரிசைகட்டி, சுழன்றடித்து அவனை அமைதியற்றவனாக மாற்றி இருந்தன. அதிலிருந்து விடுபட, கலிபோர்னியாவின் பார் ஒன்றில் அமர்ந்து பீர் குடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவன் குடித்த மதுவின் மயக்கம், அவனது கவலையை மறக்கச் செய்யாமல், அவனை மேலும் கவலைப்படும் விதமாகவே மாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். கடிகாரத்தைப் பார்த்தான்; இரவு, 10:00 மணி.

பில்லை செட்டில் செய்துவிட்டு, வெளியே வந்தவன், காரில் ஏறி,வீட்டிற்கு கிளம்பினான்.

கார் வீட்டிற்குள் நுழையும் போது, அவனது வீட்டில் விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. போர்டிகோவில் காரை நிறுத்தும் போது, வீட்டின் கதவு திறந்தே இருப்பது அவனை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

'ஜெசிகா இன்னும் வீட்டிற்குப் போகவில்லையா? மாலை, 6:00 மணிக்கே சமையலை முடித்து, வீட்டுக்குப் புறப்பட்டு விடுவாளே...' என்ற யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன், ஹால் சோபாவில் அமர்ந்தபடி, ஜெசிகா, 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், ''ஜெசிகா... இன்னுமா நீ வீட்டுக்கு போகலை? மணி, 10:00 ஆயிருச்சே... ஏதாவது பிரச்னையா?''

''ஆமாம் சார்... அங்கே தான் இருக்கு பிரச்னை,'' என்று, படுக்கை அறையை நோக்கி கையை காட்டினாள்.

அவசர, அவசரமாக அவனது படுக்கை அறைக்குள் நுழைந்தான் நரேன்.

அறையினுள் அவனது கட்டிலில், கவிதாவின் குழந்தை நிம்மதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியாமல், தலையை ஒரு உலுக்கு உலுக்கி, மறுபடியும் உற்றுப் பார்த்தான்.

'சந்தேகமில்லை... காணாமல் போன கவிதாவின் குழந்தைதான்!'

''ஜெசிகா... இந்தக் குழந்தை எப்படி இங்கே வந்தது?''

''தெரியல சார்... காலைல நீங்க புறப்பட்டு போனதுக்கப்புறம் நான் கிச்சன்ல வேலையா இருந்தேன். திடீர்ன்னு குழந்தை அழற சப்தம் கேட்டது. வந்து பார்த்தா, இந்த குழந்தை உங்க படுக்கை அறையில் இருந்து அழுதுகிட்டே வெளில வந்தது.''

''நிஜமாவா... ஏன் உடனே எனக்கு போன் பண்ணல?''

''அது வந்து... இந்த குழந்தையை நீங்கதான் கொண்டு வந்திருக்கறதா நெனச்சேன்; அதான், உங்களுக்குப் போன் பண்ணல.''

''நான் எதுக்கு குழந்தையை கொண்டு வரணும்... இது யார் குழந்தைன்னு உனக்குத் தெரியுமா?''

''தெரியாது சார்... அப்போ இந்தக் குழந்தைய நீங்க கொண்டு வரலையா... இந்தக் குழந்தை எப்படி சார் நம்ம வீட்டுக்குள்ள வந்திருக்கும்?''

''தெரியல.... சரி... நேரமாயிடுச்சு; நீ புறப்படு.''

''சார்... இந்தக் குழந்தை...''

''அதான் நான் வந்துட்டேனில்ல. நான் பாத்துக்குறேன்; நீ புறப்படு.''

ஒருவிதமான சந்தேகத்துடனும், தயக்கத்துடனும் நரேனுக்கு, 'குட்நைட்' சொல்லி விட்டு புறப்பட்டாள்.

'யார் இந்த குழந்தையை இங்கே கொண்டு வந்து விட்டிருப்பர்? போதாக்குறைக்கு குழந்தையைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள் கவிதா. அதற்கும் மேலாக, நாளைக்கு மதுரிமா ஆஸ்திரேலியாவிலிருந்து வீட்டிற்கு வரப் போகிறாள். அவள் வரும் சமயத்தில், நம் வீட்டில் கவிதாவின் குழந்தை!'

நரேனுக்கு அவன் குடித்திருந்த மதுவின் மயக்கம் முற்றிலுமாய் இறங்கி விட்டது. சில வினாடிகளுக்கு ஒன்றும் புரியாதவனாய், 'டிவி'யை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

பிறகு, கவிதாவிற்குப் போன் செய்தான். நரேனின் போனிற்காக காத்திருந்த கவிதா, அவசரமாக அவனிடம் பேசினாள்...

''சொல்லுங்க நரேன்.''

''கவிதா... ஒரு நல்ல தகவல்!''

''மதுரிமா வீட்டுக்கு வந்தாச்சா?''

அவளுடைய குழந்தையைப் பற்றித்தான் சொல்லப் போகிறான் என்பதை அறிந்திருந்தும், வேண்டுமென்றே மதுரிமாவைப் பற்றி விசாரித்தாள்.

''நான் சொல்ல வந்த நல்ல செய்தி அது இல்ல. காணாமல் போன உன் குழந்தை கிடைச்சுடுச்சு.''

''என்ன... நிஜமாவா சொல்றீங்க... என்னோட குழந்தை கிடைச்சிடுச்சா?''

''ஆமா கவிதா... உன் குழந்தை என் வீட்ல, என்னோட படுக்கையில படுத்து, நிம்மதியா தூங்கிட்டிருக்கு.''

''தேங்க் காட்... நீங்க சொல்றத கேட்க உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு. ஆமா... என் குழந்தை எப்படி உங்க வீட்டுக்கு வந்தது?'' சந்தோஷமும், சந்தேகமும் கலந்த குரலில் கேட்டாள்.

''நரேன்... எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் வருது!''

''யார் அந்த ஒருத்தர்; ஆண்டர்சன்னா?''

''இல்ல நரேன்.''

''அப்போ வேற யார் மேல நீ சந்தேகப்படற''

''எனக்கு உங்க மேலதான் சந்தேகம் வருது. சொல்லுங்க... நீங்கதானே என் குழந்தையை உங்க வீட்டுக்குத் தூக்கிக்கிட்டு போனீங்க?''

கவிதாவின் பதில், அவனை தூக்கி வாரிப் போட்டது.

''கவிதா... என்ன பேசற... உன் குழந்தையை நான்... தமாசு பண்றீயா?''

நரேனுக்கு லேசாக கோபம் வந்திருப்பதை கவிதாவால் உணர முடிந்தது. அந்த கோபத்தை உள்ளூற ரசித்தபடி சங்கீதமாய் சிரித்தாள்.

''கவிதா... உன் குழந்தையை நான் கடத்திட்டுப் போனேன்னா சொல்ற... அந்த அளவுக்கு நான் மட்டமான ஆள் இல்லை!''

''நான் அந்த அர்த்தத்தில் சொல்லவும் இல்லை; அப்படி நினைக்கவும் இல்லை... நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. நான் எந்த அர்த்தத்துல சொன்னேன் தெரியுமா?''

''இதுக்கு வேற அர்த்தம் கூட இருக்கா? சொல்லு... தெரிஞ்சுக்கிறேன்.''

குழந்தை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், குழந்தையைப் பற்றிப் பேசுவதை ஒதுக்கி வைத்துவிட்டு, நரேனுடன் கொஞ்ச நேரம் சீண்டி விளையாட விரும்பினாள்...

''சில நேரங்கள்ல, சில விஷயங்கள் மேல நமக்கு ஆசை வருது. ஆனா, அந்த விஷயங்கள் வேற யாருக்கோ சொந்தமானதா இருந்தா, அந்த விஷயங்கள் கொஞ்ச நேரமாவது நமக்கு சொந்தமா இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்ன்னு மனசு ஆசைப்படுது. அந்த மாதிரி நேரத்துல நீங்க என்ன பண்ணுவீங்க நரேன்?''

''இதென்ன கேள்வி... இன்னொருத்தருக்கு சொந்தமானதை நமக்கு சொந்தமா நினைச்சுப் பாக்குறதே தப்பு.''

''சரியா, தப்பான்னு யோசிச்சுக்கிட்டா மனசுல ஆசைகள் வருது? தப்புன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் ஆசைகள் வராமலா இருக்கும்?''

'' நீ என்ன சொல்ற?''

''என்னோட குழந்தை மேல உங்களுக்கு ஆசை வந்திருக்கலாம். மதுரிமா இல்லாத இந்த நேரத்துல, என் குழந்தையோட இருக்கறதை சந்தோஷமா நீங்க நினைச்சிருக்கலாம்... அதுக்காக நீங்க குழந்தையை தூக்கிட்டுப் போயிருக்கலாம்... உங்களுக்கும் சந்தோஷம், எனக்கும் ஒரு ஸ்வீட் ஷாக். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிச்சிருக்கீங்க; நீங்க பெரிய ஆள்.''

சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தாள்.

''கவிதா, ப்ளீஸ்... சொல்றதை நம்பு. உன்னோட குழந்தையை, நான் தூக்கிட்டு வரல.''

''அப்படின்னா... என் குழந்தை மேல உங்களுக்கு ஆசை இல்லையா?''

கவிதாவின் குரல் பரிதாபமாகக் கெஞ்சுவதைப் போல் ஒலித்தது. தன்னைப் போலவே, தன் குழந்தையும், பிறர் விரும்பாத ஒன்றோ என வருத்தமுடன் கவிதா, அவனிடம் கேட்பதை போல் உணர்ந்தான்.

''சேச்சே... நான் அப்படியா சொன்னேன்? உன் குழந்தையை, யார் பார்த்தாலும் அவங்களுக்கு, கொஞ்சுவதற்கு நிச்சயம் ஆசை வரும்.''

''நிஜமாவா... அப்போ, இன்னைக்கு ராத்திரி, என் குழந்தை உங்க படுக்கையில, உங்க பக்கத்துலேயே படுத்து தூங்கட்டும். நான் நாளைக்கு காலைல வரேன். உங்கள தப்பா நினைக்கவே மாட்டேன். நிம்மதியா தூங்குங்க; குட் நைட்.''

நரேனின் பதிலுக்குக் காத்திருக்காமல், போனைத் துண்டித்தாள்.

நரேன், பேருக்கு சாப்பிட்டு முடித்து, அவனது படுக்கை அறைக்குள் வந்த போது, கவிதாவின் குழந்தை பூச்செண்டு மாதிரி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

குழந்தையின் அருகே சென்று மல்லாந்து படுத்தான் நரேன். குழந்தை தூக்கக் கலக்கத்தில் அதன் பிஞ்சுக் கால்களை, நரேனின் மார்பில் தூக்கிப் போட்டது.

குழந்தையின் பிஞ்சு போன்ற மென்மையான கால்களை வருடிக் கொடுத்தான்; வருடல் சுகமாய் இருந்து, அவன் மனசுக்குள் ஏதேதோ எண்ண அலைகளைப் புரட்டிப் போட்டது.

மறுநாள் காலை, குழந்தை அழற சப்தம் கேட்டு கண் விழித்த நரேன், கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி, 7:00 ஆகி இருந்தது. குழந்தையைத் தூக்கி தோளில் அணைத்தபடி, அறையில் நடந்தவாறே சமாதானப்படுத்த முயன்றான். குழந்தை, அழுகையை நிறுத்தாமல், தொடர்ந்து அழுதது.

நல்ல வேளையாக பணிக்கு வந்து சேர்ந்தாள் ஜெசிகா. அழும் குழந்தையை வாங்கி, சமாதானப்படுத்தினாள். குழந்தை அழுவதை நிறுத்தி, அவளை உற்றுப் பார்த்து சிரித்தது. அவளிடமிருந்து இறங்கி, அவள் கைகளைப் பற்றி சமையல் அறைக்கு அவளை அழைத்துச் சென்றது.

கவிதாவிற்கு போன் செய்தான் நரேன். போன், ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் மதுரிமா வந்து விடுவாள். அவளை அழைத்து வர ஏர்போர்ட்டிற்குப் போக வேண்டும்.

குளித்து முடித்து, ஆடை மாற்றிக் கொண்டான் நரேன். டீ கொண்டு வந்து கொடுத்தாள் ஜெசிகா. யோசனையுடன் டீயைக் குடித்து முடித்தான்.

'ஏன் இன்னமும் கவிதா வரவில்லை?' எனும் பதில் தெரியாத கேள்வி, அவனைக் குழப்பியது.

''ஜெசிகா... மதுரிமாவை அழைத்து வர நான் ஏர்போர்ட் போகிறேன். கவிதா வந்தால் குழந்தையை அவளிடம் கொடுத்து விடு.''

''சரி, சார்... நீங்க புறப்படுங்க; நான் பார்த்துக் கொள்கிறேன்.''

ஜெசிகாவின் கையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்த கவிதாவின் குழந்தை, நரேனைப் பார்த்து சிரித்தது.

''அங்கிளுக்கு டாட்டா சொல்லு.''

ஜெசிகா சொன்னதும், குழந்தை தன் பிஞ்சுக் கரங்களை, நரேனை நோக்கி அசைத்து ஆட்டியது.

மதுரிமாவும், அவள் தாயும் வந்த ஆஸ்திரேலிய விமானம் கலிபோர்னியா விமான நிலையத்தில் தரை இறங்கி நிற்க, பயணிகள் ஒருவர் பின் ஒருவராக வெளியே இறங்கி வந்தனர்.

தன் மனைவி மதுரிமா நடந்து வரும் அழகை ரசித்தபடியே, அவளை வரவேற்க நின்றிருந்தான் நரேன். அவன் அருகே வந்து நின்று, அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் மதுரிமா. அவள் பார்வை, அவனது முகத்தில் எதையோ தேடுவதைப் போல உணர்ந்தான் நரேன். மதுரிமாவை மெல்ல அணைத்தபடி ஒரு புன்முறுவலோடு,

''ஹாய் மது... எப்படி இருக்கே?'' என்றான்.

''நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க?''

''நீ இல்லேங்கற ஒரு குறையைத் தவிர, எனக்கு வேற என்ன குறை மது; நல்லா இருக்கேன்... உன்னோட புரோகிராம் நல்லபடியா முடிஞ்சுதா?''

''ம்... என்னோட புரோகிராம் இருக்கட்டும்... உங்க புரோகிராம் எப்படி இருந்தது?''

''என்னோட புரோகிராமா... என்ன சொல்ற நீ?''

அவளையும் மீறி உந்துதலாய் வெளிப்பட்டுவிட்ட அந்த கேள்விக்காக, கீழ் உதட்டை அவளது அழகிய பற்களால் கடித்தபடி நின்றாள் மது.

''என்ன மது... யோசிக்கிற?''

''ஒண்ணுமில்ல... நான் இல்லேன்னா உங்களுக்கு நேரம் போகாதே! உங்க பொழுது போறதுக்கு எந்த புரோகிராமும் வெச்சுக்கலையான்னு கேட்டேன்.''

சமாளிப்பாக பதிலை சொல்லிவிட்டு, தன் பதில் நரேனின் முகத்தில் எவ்வித மாறுதலை ஏற்படுத்துகிறது என, மீண்டும் அவனது முகத்தை உற்று நோக்கினாள்.

''மது... மத்த விஷயங்களை வீட்ல போய் பேசிக்கலாமே!''

மதுரிமாவின் தாய் குறுக்கிட்டுப் பேச, அப்போதுதான் தன் மனைவியுடன், அவள் அம்மாவும் நிற்கிறாள் என்பதை உணர்ந்தான் நரேன்.

''சாரி ஆன்ட்டி... மதுவைப் பார்த்ததும், நீங்க பக்கத்துல நிற்கறதக் கூட நான் கவனிக்கல... எப்படி இருக்கீங்க?''

அவனது சமாளிப்பை அவனாலேயே உணர முடிந்தது.

''எனக்கென்ன மாப்ள... நல்லாவே இருக்கேன்; நீங்கதான் என் கண்ணுக்கு என்னவோ போல இருக்கீங்க.''

''அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆன்ட்டி... நான் நல்லாத்தான் இருக்கேன்.''

''அப்போ... நான் உங்க பக்கத்துல இருந்தா நீங்க எல்லாத்தையுமே மறந்துடுவீங்க; அப்படித்தானே?''

''அதுல என்ன சந்தேகம் மது. நீதான் என்னோட உலகம்,'' என்றான் நரேன்.

''மொத்தம் எத்தனை உலகம் இருக்கு நரேன்?''

''என்ன சொல்ற?''

''அதுக்கில்ல... ஈரெழு உலகம்ன்னு சொல்றாங்களே... அந்த ஈரெழு உலகமும் நான்தானான்னு சின்ன சிந்தனை... அதான்!''

மதுரிமாவின் பதில், நரேனை அதிர்ச்சி அடைய வைத்தது.

''எத்தனை உலகம் இருந்தாலும், அத்தனை <<உலகமும் நீதான் மது.''

நரேன், மதுரிமா, அவள் தாய் மூவரும் விமான நிலையத்திற்கு வெளியே வந்து, காரில் ஏறி அமர்ந்தனர். நரேன் காரை, வீட்டை நோக்கி செலுத்த, அவர்கள் மூவருக்கும் இடையே சிறிய மவுனம் நிலவியது.

'இந்த நேரத்திற்கெல்லாம் கவிதா வீட்டிற்கு வந்து அவளது குழந்தையைக் கொண்டு சென்றிருப்பாள்...' என நினைத்தான் நரேன்.

'கவிதாவும், அவள் குழந்தையும் இன்னமும் நம் வீட்டிலேயே இருப்பார்களோ...' என்ற சிந்தனையில் இருந்தாள் மதுரிமா.

கார் வீட்டின் காம்பவுண்டைக் கடந்து போர்டிகோவில் வந்து நின்றது.

மதுரிமாவும், அவள் தாயும் காரிலிருந்து இறங்கிய பின், நரேனும் இறங்கினான். மூவரும் ஹாலுக்குள் பிரவேசிக்க, ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த கவிதாவின் குழந்தை, அவர்கள் மூவரையும் தன் சிறிய அழகியக் கண்களால் மாறி, மாறிப் பார்க்க - மதுரிமாவின் முகம் மெல்ல இறுகியது.

சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஜெசிகா. மதுரிமாவைப் பார்த்து, புன்முறுவலோடு வரவேற்றாள்...

''வாங்க மேடம்... உங்கள் பயணம் எப்படி இருந்தது?''

''நன்றாக இருந்தது... இது, யாருடைய குழந்தை ஜெசிகா?''

மதுரிமாவின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று புரியாதவளாய், நரேனை வெறித்தபடியே பேசாமல் நின்றாள் ஜெசிகா.

''ஜெசிகா... உன்னைத்தான் கேட்கிறேன்... இந்த குழந்தை யாருடையது?''

மதுரிமாவின் கேள்வியிலும், குரலிலும் லேசான உஷ்ணம் இருப்பதை நரேனால் உணர முடிந்தது.

— தொடரும்.

-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us