தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்க்கை பாடம்!

வாழ்க்கை பாடம்!

வாழ்க்கை பாடம்!


PUBLISHED ON : ஆக 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் அனைவரது முகமும், மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. படிப்பு முடித்த கையோடு, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில், லட்சம் ரூபாய் சம்பளத்தில் விக்ரமுக்கு வேலை கிடைத்திருக்கிறது.

விக்ரம் மட்டுமல்ல, அவனது பெற்றோரும், தம்பி, தங்கையும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

''விக்ரம், நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா... படிப்பு முடித்து, கை நிறைய சம்பளத்தோடு வேலை... அது மட்டுமா, இரண்டு ஆண்டுகளாக காதலித்த, சவீதாவை கல்யாணம் பண்ணிக்க, இரண்டு பேர் வீட்டிலும், 'கிரீன் சிக்னல்' கொடுத்துட்டாங்க... இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம்... வாழ்க்கையில் அழகா செட்டில் ஆகப்போறே,'' என, குரலில் சற்று பொறாமை தெரிய சொன்னான், நண்பன்.

இட்லி, வடை மற்றும் பொங்கலை தட்டில் வைத்து, சாம்பாரை ஊற்றினாள், அம்மா.

''ஏன்ம்மா... இத்தனை செய்தே?''

''சாப்பிடு, விக்ரம்... ராஜா மாதிரி வாழப் பிறந்தவன்... நீ நினைச்சதெல்லாம் நடக்குது. எல்லாருக்கும் இப்படி ஒரு அதிஷ்டம் வருமா... ரதி மாதிரி இருக்கும், சவீதா, உனக்கு மனைவியா வரப்போறா... எங்க மகிழ்ச்சிக்கு, எல்லையில்லப்பா.''

'அம்மா சொல்வது சரி தான். அடுத்த மாதம், வேலையில் சேர வேண்டும். அப்புறம் கல்யாணம். ஐதராபாத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி, சவீதாவுடன் காரில் ஊர் சுற்றி, வாழ்க்கையை, அணு அணுவாக ரசிக்க வேண்டும்...' என, விக்ரமின் மனம், கனவில் மிதந்தது.

செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்த விக்ரமின் அப்பா, ''நண்பர்களோட சுற்றுலா போக போறதா சொன்னியே, எப்ப போற?'' என்றார்.

''ஆமாம்பா... வேலையில் சேர, இன்னும் ஒரு மாசம் இருக்கு... அதற்குள், நல்லா, 'என்ஜாய்' பண்ணலாம்ன்னு இருக்கேன்... 10 நாள்னு, திட்டம் போட்டிருக்கோம்... அடுத்த வாரம் கிளம்பறோம்.''

''அப்புறம் இன்னொரு விஷயம் பா... வேலையில் சேர்றதுக்கு முன், கிராமத்தில் இருக்கிற, தாத்தாவை பார்த்து, ஆசி வாங்கிட்டு வாப்பா... நீ போய் பார்த்தா, சந்தோஷப்படுவாரு,'' என்றார், அப்பா.

ஒரு விவசாயியாக இருந்து, அப்பாவையும், சித்தப்பாவையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தவர்; கிராமத்தை விட்டு வர மறுத்த, அப்பாவின் அப்பா, ராமநாதன்.

பாட்டி இறந்த பிறகு, பிள்ளைகள் இருவரும், ஆண்டுக்கு, ஒன்றிரண்டு முறை சந்திப்பதோடு சரி...

'அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க தாயா, பிள்ளையா பழகறாங்க... விவசாய நிலத்தை, குத்தகை விட்டாச்சு... அதில் வரும் வருமானம், எனக்கு போதும். அம்மன் கோவிலும், திண்ணையும், கடந்த கால நினைவுகளும், என்னை வாழ வச்சுடும்...

'உடம்பில் தெம்பிருக்கும் வரை, என்னால் உழைக்க முடியும் பா... பிறந்த மண்ணிலேயே வாழ நினைக்கிறேன். நீங்க, உங்க வாழ்க்கையை பாருங்க... எனக்காக, யாரும் கவலைப்பட வேண்டாம். நேரம் கிடைக்கும் போது, வந்து பார்த்துட்டு போங்க, அது போதும்...' என்றவர், ராமநாதன்.

பூங்காவனம் கிராமத்தை நோக்கி பயணித்தது, கார். தெருக்களின் மரங்களுடன், பசுமை மாறாமல் இருந்தது.

இருபுறமும் திண்ணை வைத்த ஓட்டு வீட்டோரம், காரை நிறுத்தச் சொல்லி இறங்கினான், விக்ரம்.

''நீங்க போயிட்டு, நாளைக்கு சாயந்திரம் வாங்க,'' என்று, டிரைவரை அனுப்பி வைத்தான்.

கார் கிளம்பிச் செல்ல, பையுடன், வீட்டின் உள்ளே நுழைந்தான்.

''தாத்தா... எப்படி இருக்கீங்க?''

கட்டிலில் உட்கார்ந்திருந்த, ராமநாதன், கண்களை இடுக்கி, ''அடடா... விக்ரமா, வாப்பா, வா... எப்படி இருக்கே... படிப்பு முடிஞ்சுது, வேலையும் கிடைச்சிருச்சுன்னு, போனில் சொன்னான், உன் அப்பா. ரொம்ப சந்தோஷம்... உட்காரு,'' என்றார்.

பேரனை கட்டியணைத்து, ''கருப்பட்டி காபி குடிக்கிறியா?'' எனக் கேட்டார்.

''கருப்பட்டியா?''

''ஆமாம் பா... உடம்புக்கு நல்லது... சூட்டைத் தணிக்கும்... குடிச்சுப் பாரு,'' என்றார்.

பின், ''வள்ளி... பேரன் வந்திருக்கான்... இரண்டு பேருக்கும் காபி எடுத்துக்கிட்டு வா,'' என, குரல் கொடுத்தார்.

தொண்டையில் காபி இறங்க மறுக்க, கஷ்டப்பட்டு குடித்தான்.

பேரனை, வயல்வெளிக்கு அழைத்து சென்றார்.

''அந்த காலத்தில், வயலில் இறங்கி வேலை செய்வேன். இப்ப, உடம்பு தளர்ந்து போச்சு... சோளமும், வேர்க்கடலையும் போட்டிருக்காங்க... நெல் சாகுபடி முடிஞ்சுது. இளநீர் சாப்பிடறியா,'' என்றார்.

''வேண்டாம், தாத்தா.''

''அப்படி சொல்லாதே. உடம்புக்கு நல்லதை சாப்பிட்டு பழகணும்,'' என்று கூறி, இளநீரை வெட்டி தர, அதை குடித்தான்.

கேழ்வரகு தோசை, பிரண்டை சட்னி, வெங்காய தொக்கு என, தாத்தா பரிமாற, அம்மாவின் ருசியான சமையல் ஞாபகம் வந்தது.

மறுநாள் -

''உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேன்... மதியம் கிளம்பறேன், தாத்தா!''

''சாப்பாடு செய்யச் சொல்லியிருக்கேன், அருமையா இருக்கும். சாப்பிட்டு கிளம்பலாம்... அப்புறம், உன்கிட்டே கேட்கணும்ன்னு இருந்தேன். நீ விரும்பற பெண்ணோடு, கல்யாணம் பேசி இருக்காங்களாமே... அப்படியா!'' என்றார்.

வெட்க புன்னகையுடன், ''ஆமா, தாத்தா... என்னோடு படிச்சவ... அழகா இருப்பா... ஆறு மாதத்தில் கல்யாணம். அப்பா, அம்மா வந்து சொல்வாங்க,'' என்றான்.

''இருக்கட்டும் பா... எதிர்கால திட்டம் என்ன?''

''பெரிசா எதுவுமில்லை... வேலையில் சேரணும். அப்புறம், கல்யாணம்... வீடு, கார்ன்னு வாங்கி, சந்தோஷமா வாழணும். வசதி வாய்ப்புகளோடு வாழறது, பெரிய கொடுப்பினை இல்லையா, தாத்தா,'' என்றான், பெருமிதமாக.

''வாழ்க்கையின் வெற்றியை பத்தி மட்டுமே பேசற... தோல்வி வந்தால், என்ன திட்டம் வச்சிருக்கே,'' என்றார்.

அதிர்ச்சியுடன், தாத்தாவை பார்த்தான்.

''பயப்படாதே, விக்ரம்... நல்லதே நடக்கும். இருந்தாலும், வசதி, வாய்ப்புகளோடு வாழும் போது, ஏதாவது தடங்கல் வந்து, நிலை மாறினால், அதை சமாளிக்கும் தைரியமும், பிரச்னையை எதிர்நோக்கும், மன வலிமையும் மனசில் இருக்கணும்...

''மேடு, பள்ளம் நிறைந்ததுதாபா வாழ்க்கை... வேலையிலோ, வேறு விதத்திலோ தடங்கல் வந்தாலும், அதிலிருந்து மீளும் தன்னம்பிக்கை வேணும்...

''ராஜா மாதிரி வாழற வாழ்க்கை அமைஞ்சது சந்தோஷம். அதே சமயம், கிரீடம் தலையிலிருந்து இறங்கும் நிலை வந்தால், அந்த வாழ்க்கை வாழவும், நம்மை தயார்படுத்திக்கணும். நீ நினைச்சது போல, வாழ்க்கை நல்லபடியாக அமையணுங்கிறது தான், இந்த தாத்தாவின் விருப்பம். என் ஆசிகள், என்னைக்கும், உனக்கு இருக்கு,'' என, வாழ்த்தினார்.

வத்தக் குழம்பு, அகத்திக் கீரை பொரியல், சுட்ட அப்பளம், நாவிற்கு தனி சுவையை தருவது போல தோன்றியது, விக்ரமிற்கு. இனிப்பு மட்டுமல்ல, கசப்பும் உடம்புக்கு நல்லது தான்.

''தேங்க்ஸ், தாத்தா!''

''எதுக்குப்பா?''

''எனக்கு, வாழ்க்கை பாடத்தை புரிய வச்சதுக்கு.''

பேரனின் தோளில் தட்டி சிரித்தார், ராமநாதன்.

ஆர். பிரவீணா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us