PUBLISHED ON : ஜன 27, 2019

டீ கடையில் தான், பாலா, எனக்கு அறிமுகம்.
அவர் பக்கத்தில் அமர்ந்து, டீ குடிக்கும்போது, தற்செயலா, அவர் ஜோல்னா பையில் துருத்திக் கொண்டிருந்த பத்திரிகை ஒன்றை பார்த்தேன். அது, நான் எப்போதாவது வாசிக்கும் வார, மாத இதழ்கள் போல், வண்ணத்தில் பளபளக்கும் அட்டைப் படம் இல்லை.
கருப்பு வண்ணத்தில், குண்டு குண்டாக பத்திரிகை பெயரும், கிறுக்கலான ஓவியமும் தலைகாட்டியது, மாறுபட்டு இருந்தது.
நான், பத்திரிகை பார்ப்பதை அவர் கவனித்திருக்க வேண்டும், 'பாருங்க...' என்று, அந்த பத்திரிகையை எடுத்து கொடுத்தார்.
ஆச்சரியத்துடன், 'இல்ல... சும்மா பார்த்தேன்...' என்றேன்.
'படிக்கவும் செய்யலாம்... நல்லா இருக்கும்... இலக்கிய சிற்றிதழ்... உங்கள் பார்வையில் ஆர்வம் இருக்கு... உள்ளுக்குள் ஒரு வாசகன் இருக்கார்ன்னு தெரியுது...' என்று, எழுந்தார்.
உயரம், கழுத்தை மீறி இறங்கும் தலை முடி, சங்கிலி கோர்த்த கண்ணாடி, மோவாயில் குறுந்தாடி, கலர் வைக்காத கதர் ஜிப்பா, கால்களில் சோலாப்பூர் செருப்பு. ஆகாயத்தை பார்த்தபடி நடந்து, பார்வையிலிருந்து மறைந்தார்.
வேலை முடித்து வீடு திரும்பியதும், அந்த பத்திரிகையை புரட்டினேன். மொத்தம், 40 பக்கங்கள். நிறைய கட்டுரைகள், கதைகள், கவிதைகள், விமர்சனங்கள். ஒரு கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன்; பயம் வந்து விட்டது.
'வழக்கொழிந்த நுண்ணிய கருத்தாழக் கருதுகோள்களின் விழுமியங்களை மீட்டெடுக்கும் முகமாக பிராந்திய நுண்ணோக்கர்களின் ஆதி கருதுகோளுடன்...' என்று துவங்கிய அந்த கட்டுரையை, மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
தமிழ்தானா, வேறு மொழியோ என்று சந்தேகம் வந்தது. பாலாவிடம் புத்தகத்தை திருப்பி தரும்போது, ஏதாவது பேச வேண்டுமே என்று, சிலவற்றை படித்தேன்.
அதில், வட்டார வழக்கில் இரண்டு சிறுகதைகளில், ஒன்று பரவாயில்லை. கவிதைகள், சிலந்தி வலைகள். கொட்டாவி வந்தது.
மறுபடி அவரை பார்த்தபோது, புத்தகத்தை திருப்பி கொடுத்து, 'தேநீர் கடைக்கு சென்றேன். தேநீர் குடித்தேன்... என்பதை கூட, ஏதேதோ சொற்களை போட்டு, முன்னும் பின்னும் புரட்டி, படிக்கிறவன சிரமப்படுத்தணுமா... எதற்கு இந்த சிடுக்கு மொழி... எழுதியவருக்காவது புரியுமா...' என்று கேட்டேன்.
'இது, சராசரி வாசகனுக்கானது இல்லை... படிப்பவனை, அவன் ரசனையை, சிந்தனையை ஒரு படி உயர்த்துவதற்கான முயற்சி. இதை வாசிக்க, வாசகன் தன்னை தயார் செய்து கொள்ள, பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கான தகுதி, ஆர்வம் உங்களிடம் தெரிகிறது. இவைகளையும் படியுங்கள்...' என்று, மேலும் இரண்டு பத்திரிகைகள் மற்றும் புத்தகம் கொடுத்தார்; மறுக்க முடியவில்லை.
ஒருநாள் வந்து, ஒரு கூட்டத்துக்கு அழைத்து போனார்.
பள்ளிக்கூட வகுப்பறையில் தான், அந்த இலக்கிய கூட்டம்.
விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் ஆட்கள். டீயும், இரண்டு பிஸ்கட்டும் கிடைத்தது. ஏதோ பேசினர்.
என்னை பற்றி, 'ஆர்வமான இளைஞர், இலக்கிய நடை குறித்து கேள்வி கேட்கிறார். இவர், ஒரு காத்திரமான, ஆளுமையான விமர்சகராக வருவதற்கு அறிகுறி தெரியுது...' என்றார், பாலா.
அங்கிருந்தோர் திரும்பி பார்க்க, அரை நொடி குனிந்து கொண்டேன்.
கூட்டம் எப்போது முடியும் என்று தோன்றியது.
கூட்டம் முடிந்ததும், 'பார்ப்போம்!' என்று வழியனுப்பி, மற்றவர்களுடன் வேறு திசையில் போனார், பாலா.
'என்ன பார்க்கறீங்க... அவங்க, உ.பா., அருந்த போகின்றனர்... உண்மையான இலக்கிய விவாதம், 'பாரி'ல் வைத்து தான்... அனல் பறத்தும்...' என்று, சொல்லி வந்தார், ஒருவர்.
அடுத்து வந்த நாட்களில், பாலாவை பார்க்க முடியவில்லை. இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க, தஞ்சை, கும்பகோணம், மதுரை என்று, சுற்றுப்பயணம் சென்றிருப்பதாக கூறினர். மிகப்பெரிய இலக்கிய ஆளுமையின் தோழமை தான், நமக்கு கிடைத்திருக்கிறது என்று, எனக்கு கொஞ்சம் பெருமை தான்.
என் திறனை வளர்த்துக் கொள்ள, அவர் கொடுத்த பத்திரிகை மற்றும் புத்தகத்தை படித்தேன். படித்ததைத் திருப்பிக் கொடுக்க, அவரை பார்க்க முடியாததால், அவர் முகவரி தெரிந்து, வீட்டிற்கு போனேன்; திகைத்தேன். அந்த வீடு, வீடாக இல்லை. எந்நேரமும் இற்றுவிடும் போல் பயமுறுத்தியது. வறுமை தாண்டவமாடியது.
உள்ளே ஒரு குழந்தை, காய்ச்சலில் கிடந்தது. இன்னொன்று, பசிக்கு அழுதது. கதவை திறந்த அம்மாள், இறுகிய முகத்துடன் புத்தகங்களை வாங்கி, 'அவரை பார்த்தீங்கன்னா, ஒருமுறை வீட்டு பக்கம் வந்து போகச் சொல்லுங்க...' என்று கதவை மூடினார்.
'அம்மா... ஒரு நிமிஷம்...' என்றேன்.
மூடிய கதவு திறந்து, என்ன என்பது போல் பார்க்க, 'நான், அவரை, அவர் எழுத்துக்களை பார்த்து பிரமிச்சேன். வீடும், இலக்கியம் போல் அழகா இருக்கும்ன்னு ஒரு கற்பனை இருந்தது. ஆனால், இங்கே நான் பார்ப்பது... அதிர்ச்சியா இருக்கு...' என்றேன்.
கசப்பாக புன்னகைத்து, 'உன் குடும்பத்துக்கு, நீயாவது நேர்மையா இரு தம்பி... எழுத்தும், இலக்கியமும் தப்பில்லை... ஆனால், அது ஒரு போதையாகி, குடும்பத்தை மறக்க வைக்கும் அளவுக்கு போகக் கூடாது... இவரது எழுத்து மோகத்தை ஒரு தகுதியா நினைச்சு தான் கழுத்தை நீட்டினேன்...
'எழுதறவங்க எல்லாம் குடும்பத்தை நல்லா வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்... இவரும் அப்படி நடந்துக்குவார்ன்னு நம்பினேன்... ஆனால், வீடு, அவருக்கு கசக்குது... கடமைன்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டார்... இப்படியான ஆட்கள், கல்யாணம் செய்துக்காமல் இருக்கலாம்... எல்லாம் எங்க தலைவிதி...' என்றாள்.
சில நாள், கனத்த மனதுடன் அவதிப்பட்டேன். பாலாவை தேடினேன். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் முழங்கிக் கொண்டிருந்தார்.
வெளியில் வந்ததும், தோளில் கை போட்டு, 'நான் கொடுத்ததை படிச்சியா...' என்று கேட்டார்.
'பழகிய உரிமையில் கேட்கிறேன்... உங்களுக்கு என்ன வருவாய், குடும்பம் ஏன் அப்படியிருக்கு, அவர்களை கவனிக்க வேண்டியது முதல் கடமையல்லவா... இங்கே, குழந்தை காய்ச்சலில் இருக்கும்போது, உங்களால் எப்படி கும்பகோணத்தில் பேச முடிகிறது... தப்பில்லையா...' என்று கேட்டேன்.
'வருமானத்துக்காக இலக்கியம் பண்றவன் நான் இல்லை. இலக்கியத்துக்கு நேர்மையா இருக்க நினைக்கிறேன். ஒருவன், கொள்கையோடு இருந்தால், அவனை சார்ந்தவர்கள் பாதிப்படைவது தவிர்க்க முடியாது...' என்று, மது வாடையுடன், சொன்னார்.
'உங்கள் பொறுப்பின்மையை நியாயப்படுத்தாதீங்க சார்... உங்களை விடவும் நல்லா எழுதி, வெற்றிகரமாக இருக்கிறவங்க, தன் குடும்பத்தை நல்லாவே கவனிச்சுக்கறாங்க... வீட்டை கவனிக்க முடியாம, இந்தியாவின் விடுதலைக்கா போராடிக்கிட்டுருக்கீங்க...
'வீடு அமைதியா, நிம்மதியா இருந்தால் தானே சார், ஒரு படைப்பாளிக்கு சிந்தனை நல்லா வரும்... இப்படி நான் பேசறேனேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க... உங்க எழுத்து வேலைகள் ஒருபுறம் இருக்கட்டும், வீட்டு தேவைக்காக, எங்காவது பகுதி நேர வேலை பார்க்கலாமே...' என்றேன்.
என் பேச்சை அவர் விரும்பவில்லை என்பதை, முகச்சுழிப்பில் காட்டி, நகர்ந்தார்.
எனக்கு முன், ஒரு நடைபாதை குடும்பம்... குழந்தைகள், பசிக்கு அழுது, தாய்க்காரியை நச்சரிக்க, அவர்களை சமாதானப்படுத்த முடியாமல், 'எங்கே போனாரோ மனுஷன்...' என்று புலம்பிக் கொண்டிருக்கும்போதே, ஒருவன் வேகமாக வந்தான். அவன் கையில் சாப்பாட்டு பொட்டலங்கள்.
'இன்னா லேட்டு...' என்று கேட்டுக் கொண்டே பொட்டலங்களை பிரிக்க...
'நாளைக்கு, எங்க, என்ன வேலைன்னு மேஸ்திரியாண்ட கேட்க போனேன்...' என்றபடி, குழந்தைகளை அள்ளி மடியில் அமர்த்தி, சாப்பாட்டை ஊட்டியபடி, இடையிடையே அவனும் சாப்பிட்டான்.
குழந்தைகளை தன் பக்கம் இழுத்து, 'நீ துண்ணுய்யா... இதுகளுக்கு நான் ஊட்றேன்...' என்றாள், அவள்.
சாப்பாட்டு வாசனையுடன், அங்கே நேசமும் கலந்து, மணந்தது.
பாலா போன வழியை திரும்பிப் பார்த்தேன். இந்த குடும்பத்தையும் பார்க்கிறேன். எனக்கென்னவோ இந்த நடைபாதைவாசிகளின் வாழ்க்கை தான், உண்மையான இலக்கியம் என்று பட்டது.
அடுத்து வந்த நாட்களில், பாலாவை டீக்கடையில் பார்த்தேன், பேசினேன். ஆனால், அவர் ஜோல்னா பையை எட்டிப் பார்ப்பதில்லை, அவரும் கொடுப்பதில்லை.
எஸ்.சங்கமேஸ்வரன்