PUBLISHED ON : ஆக 21, 2022

பெண்கள் கல்லுாரியில் நடந்தது என்ன?
குமுதம் 22.10.1970
சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லுாரியில், ஒரு கதம்ப விழா நடந்தது. அங்கு சில விரும்பத்தகாத, தரக்குறைவான நிகழ்ச்சிகள் நடந்து விட்டனவாம்.
சுமார், 20 நிமிடங்களுக்கு மின்தடை ஏற்பட்டதன் காரணமாக, சில பெண்களிடம் ஏன் உதவிப் பேராசிரியைகளிடமும் கூட, சில ஆண்கள் தகாத விதத்தில் நடந்து கொண்டதாக, 'ஹிந்து' ஆங்கில நாளிதழ், ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
குறிப்பிட்ட கலை நிகழ்ச்சிக்கு சென்று வந்த இரு மாணவர்கள், அந்த பரபரப்பான நிகழ்ச்சிகள் எங்கே, எப்படி என்று என்னிடம் விவரித்தனர். கல்லுாரி வளாகத்தில் பல இடங்களில், 'ஸ்டால்'கள் இருந்தன. ஐஸ்கிரீம், சமோசா, கொக்கோகோலா விற்கப்பட்டன.
'ஸ்டால்'களில் விளக்குகள் இருந்தாலும், நடைபாதையின் இடைப்பகுதிகளில் விளக்குகள் இல்லை; வெளிச்சம் போதவில்லை. மாணவியரை சிலர் கையை பிடித்து இழுத்து விட்டனர், தொட முயற்சித்தனர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணை முத்தமிட்டதாகவும் தகவல்.
'வெளிச்சம் நன்கு இருந்த போதும், சில விஷமிகளின் நடத்தையை நாங்கள் பார்த்தோம். இருட்டில் அதுவும் சற்று நெரிசலான இடத்தில், இன்னும் கீழ்த்தரமான முறையில் சிலர் நடந்து இருப்பர் என்று மட்டும் நிச்சயம்...' என்றனர்.
நல்லவேளை, அதற்குள் சமயோஜித புத்தி உள்ள ஒருவர், தன் காரை உள்ளே எடுத்து வந்து, இரு, 'ஹெட்லைட்'களையும் பிரகாசமாக போட்டு, வெளிச்சத்தை ஏற்படுத்தினார். இரவு, 8:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி முடிப்பதாக இருந்தது.
கிட்டத்தட்ட அதே நேரம் ஆகிவிட்டதால், கல்லுாரி பேராசிரியை ஒருவர் வந்து, 'இத்துடன் நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன. தயவுசெய்து இங்கிருந்து வெளியே செல்லுங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அந்த இருட்டிலேயே அனைவரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
அங்கு சென்று விசாரித்தபோது, 'இது எங்கள் தவறு அல்ல; எலக்ட்ரிசிட்டி போர்டு தவறு...' என்றார், எலக்ட்ரீசியன்.
'பெண்கள் கல்லுாரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆண்களை அனுமதிக்க கூடாது; மாலை, 6:00 மணிக்கு முன்பே நிகழ்ச்சியை முடித்திருக்க வேண்டும்...' என்றும் சிலர் கூறினர். கிடைத்த தகவல்கள் வைத்து கட்டுரை எழுதி விட்டேன்.
ஆனால், எனக்கு ஒரு பிரச்னை. அந்தக் கல்லுாரி பிரின்சிபால் எனக்கு மிகவும் தெரிந்தவர், நல்ல நண்பர். இந்தக் கட்டுரை என் பெயரில் வந்தால், அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று, சற்று தயக்கமாக இருந்தது.
ரா.கி.ரங்கராஜனிடம் இதுபற்றி சொன்னேன்.
'வேறு ஏதாவது புனைப்பெயர் போடலாமா?' என்று கேட்டேன்.
அப்போதெல்லாம் செவ்வாய்கிழமை இரவு, 'குமுதம்' இதழ் அச்சுக்கு செல்லும். மாலையில், ரா.கி.,க்கு போன் செய்து, 'ரோமியோ என்ற பெயரை வைத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டேன்.
ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யும், ரா.கி.,யும் முடிவு செய்த பெயர் தான், ரோமியோ.
ரோமியோ என்ற பெயரில் வந்த, முதல் கட்டுரை இதுதான். அதிலிருந்து, ஒரு இதழில் இரண்டு கட்டுரைகள் வர நேரிடும்போது, பெண்கள் சம்பந்தப்பட்ட கட்டுரைக்கு, 'ரோமியோ' என்று பெயர் போடுவது வழக்கமாயிற்று.
பிரபுதாஸ் பட்வாரியின் பெருந்தன்மை!
'முக்கிய வி.ஐ.பி.,யை பேட்டி எடுக்கும் போது, 'கல்கண்டு' இதழின் பொறுப்பாசிரியர் லேனாவை அழைத்து செல்லுங்கள்...' என்று சொல்லியிருந்தார், ஆசிரியர் எஸ்.ஏ.பி.,
கவர்னர் மாளிகையின் குறிப்பிட்ட நேரப்படி லேனா, அவர் சகோதரர் ரவி மற்றும் நான் என மூவரும், கவர்னர் மாளிகைக்கு சென்றோம்.
ஆரம்பிக்கும்போது கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, 'ஆளுநரின் குரலை தனியார் பதிவு செய்யக் கூடாது...' என்றார்.
'இந்த பேட்டிக்காக நான் முதலில் உங்களை சந்தித்தபோது, நீங்கள் சொல்லவில்லை. எனவே. அதற்கு தயாராக நாங்கள் வரவில்லை. நீங்கள் தான் இதற்கு உதவி செய்ய வேண்டும்.
'தயவுசெய்து இரண்டு ஸ்டெனோகிராபர்களை வரச்சொல்லுங்கள். ஒருவர் நாங்கள் பேசுவதை குறிப்பு எடுக்கட்டும். மற்றவர் நீங்கள் பேசுவதை குறிப்பு எடுக்கட்டும். பிறகு இரண்டையும் இணைத்து, எங்களுக்கு கொடுங்கள்...' என்றேன்.
அவ்வாறே எங்களுக்கு உதவினார், கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி.
நாங்கள் இருவரும் பேசியது அனைத்தும் எங்களுக்கு கொடுக்கப்பட்டன. நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும் பதிலளித்தார், பட்வாரி.
'கல்கண்டு' இதழில், மூன்று பக்கத்திற்கு மேல், கவர்னரின் பேட்டி சிறப்பாக வந்தது.
'ஹலோ மெட்ராஸ்' இதழில் வாசகர்களுக்கு அறிமுகமான வைரமுத்து.
— தொடரும்
எனக்குத் தெரிந்தவரை வேறு எந்தப் பத்திரிகையும் செய்யாத நற்பணியை, 'தினமலர்' - வாரமலர் பொறுப்பாசிரியர் செய்து வருகிறார். அதற்கு, எழுத்தாளர்கள் சார்பில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கதை, கவிதை அல்லது கட்டுரை எழுதும் படைப்பாளிக்கு உச்சகட்ட மகிழ்ச்சி, அவரது படைப்பை படித்து விட்டு, ரசிகர் அதை பாராட்டுவது தான். 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு வரும் அர்ச்சனை கடிதங்களை நகலெடுத்து, குறிப்பிட்ட எழுத்தாளருக்கு அனுப்பி, அவர்களை கவுரவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எஸ். ரஜத்