PUBLISHED ON : நவ 05, 2023

அக்காலத்தில் யுத்தம் துவங்கும் முன், ஒருவரை களப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. போரிடும் இருதரப்பும் இதைச் செய்வர். இதற்கு நல்ல நாள் குறிக்க, தன் எதிரிகளான பாண்டவர்களில் ஒருவனான, சகாதேவனை அணுகினான், துரியோதனன். ஜோதிட ஆற்றல் நிறைந்தவன், சகாதேவன்.
'அமாவாசை அன்று, களப்பலி கொடுத்தால், நீயே வெல்வாய்...' என குறித்துக் கொடுத்தான்.
பாண்டவர்களின் மைத்துனரான, கிருஷ்ணருக்கு, இது, தர்மசங்கடத்தைக் கொடுத்தது. வேறு வழியின்றி, தன் மாயாஜால வேலையைக் காட்டினார்.
அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியன்று, நதிக்கரைக்கு சென்று, தர்ப்பணம் செய்தார். இது கண்டு நதிக்கரையிலிருந்த ரிஷிகள் வியந்து போய், கிருஷ்ணரிடம் கேட்டனர்.
'இன்று தானே அமாவாசை...' என்று கிருஷ்ணர் சொல்ல, அவர்கள் குழம்பினர். அமாவாசை அன்று இணையும், சூரிய, சந்திரரும் குழம்பிப் போய், நதிக்கரைக்கு வந்தனர்.
'கிருஷ்ணா, நாளை தானே நாங்கள் இணையும் நாள். இன்றே தர்ப்பணம் செய்கிறீர்களே...' என்றனர்.
'நாளை இணைய வேண்டிய நீங்கள், இப்போது இணைந்து தானே வந்திருக்கிறீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை...' என கேட்க, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
எல்லாருமே தர்ப்பணம் செய்ய ஆரம்பித்தனர். கிருஷ்ணரின், இந்த சமயோசித செயல்பாடு, துரியோதனனின் தோல்விக்கு வழிவகுத்தது.
இந்தக் கதை பலரும் அறிந்தது தான். ஆனால், இந்த நிகழ்வின் அடிப்படையில் ஒரு கோவிலில், சூரிய, சந்திரர் இணைந்துள்ளனர் தெரியுமா?
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே, செதலபதி என்ற சிறிய கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சன்னிதியில், சூரிய, சந்திரர் இணைந்துள்ளதையும், அவர்கள் முன், கிருஷ்ணரின் மூலமான பெருமாள், தன் தேவியருடன் இணைந்துள்ளதையும் காணலாம்.
இன்னொரு விசேஷம். இங்கு, சம்மணமிட்டு அமர்ந்து, உள்ளங்கால் தெரிய காட்சி தருகிறார், ராமர். இந்த அமைப்பு மிக மிக அபூர்வமானது. தந்தை தசரதருக்கு, அவர், இங்கும் பிண்டம் வைத்து திதி கொடுத்துள்ளார். அந்த நான்கு பிண்டங்களும் லிங்கங்களாக மாறி, அவர் முன் இருப்பது இன்னும் விசேஷம்.
திதி கொடுத்த பின், முக்தீஸ்வரரிடம், 'என் தந்தைக்கு, முக்தி கொடுப்பீர்களா?' எனக் கேட்டார், ராமர்.
'தர முடியாது...' என, முக்தீஸ்வரர் கூற, அதிர்ந்து போனார், ராமர்.
'நான் முறையாகத்தானே எல்லாக் கடமையும் செய்துள்ளேன். ஏன் இப்படி சொல்கிறீர்கள்?' என, கேட்டார்.
'ராமா... நீ, இந்த தலத்தில் உன் தந்தைக்கு திதி கொடுப்பேன் என்று நினைத்தவுடனேயே, அவர் பிறவாநிலை பெற்று விட்டார். ஏற்கனவே முக்தி பெற்ற ஒருவருக்கு இன்னொரு முறை எப்படி கொடுப்பது?' என்றார், முக்தீஸ்வரர்.
சூரிய, சந்திரர் இணைந்துள்ளதால், இங்கு, தினமும் அமாவாசை திதி கொடுக்கலாம்.
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம், 35 கி.மீ., துாரம். இங்கிருந்து பிரியும் சாலையில், 4 கி.மீ., பயணித்தால், செதலபதியை அடையலாம். வழியிலுள்ள கூத்தனுாரில், புகழ் மிக்க சரஸ்வதி கோவில் உள்ளது.
தி. செல்லப்பா
