
பண்டிகைகளிலேயே அதிக செலவு வைப்பது, தீபாவளி தான். புத்தாடை, புதுமணத் தம்பதியருக்கு நகை, இனிப்பு மற்றும் காரம் என, ஏகத்துக்கு செலவாகும். இதற்கு தேவை பணம். அதனால் தான், வடமாநிலங்களில் இவ்விழாவை, தன்தேராஸ் என்ற பெயரில், பண விழாவாக கொண்டாடு கின்றனர்.
'தன்தேராஸ்' என்றால், செல்வம்; தீபாவளிக்கு முன் வரும் திரயோதசியான பிரதோஷத்தன்று, தன்தேராஸ் பண்டிகையைக் கொண்டாடுவர்.
செல்வத்திற்குரிய தெய்வம் மகாலட்சுமி; பணம் உள்ள இடத்தை, 'லட்சுமி கடாட்சம்' நிறைந்தது என்பர். பணம் எந்தளவுக்கு அவசியமோ, அந்தளவுக்கு ஆபத்தானது என்பதை வலியுறுத்தும் வகையில், மகாலட்சுமிக்கு முதலையை வாகனமாக வைத்தனர், நம் முன்னோர்.
முதலை அமைதியாக தண்ணீரில் கிடக்கும்; பசி வந்து விட்டால் ஆளையே விழுங்கி விடும். அதுபோல் தான் பணமும், நம் கட்டுக்குள் இருக்கிற வரை, அதை நாம் ஆளலாம்; அது நம்மை ஆளத்துவங்கி விட்டால், நம் கதி, அதோ கதி தான்!
இதைக் குறிக்கும் வகையில், கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், பள்ளிப்புரத்திலுள்ள மகாலட்சுமி கோவிலில், அம்பாளுக்கு வாகனமாக, முதலையை வைத்துள்ளனர். தமிழகத்துடன் சம்பந்தமுள்ளது, இக்கோவில்.
சில நூற்றாண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் வாழ்ந்த நெசவாள மக்கள், மகாலட்சுமிக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். பின், பிழைப்புக்காக, கேரளாவிலுள்ள சேர்த்தலா என்ற ஊருக்கு சென்றனர். இங்கும் மகாலட்சுமியை வழிபட விரும்பி, அம்பாளை வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒரு முதலை மீதேறி, இங்கு வந்து சேர்ந்தாள், மகாலட்சுமி என்கிறது, இக்கோவில் தல புராணம்.
மகாலட்சுமி வந்து இறங்கிய இடத்தின் அருகில், பெரிய ஏரி உள்ளது. இதில் உள்ள நீர், உப்பாக இருக்கும். ஆனால், மகாலட்சுமி இறங்கிய இடத்தில் மட்டும், சுவையான குடிநீர் கிடைக்கிறது.
ஆரம்பத்தில், முதலைக்கு உணவு கொடுத்து வழிபட்டு வந்தனர். அது இறந்ததும், முதலையின் சிலையை வடித்து, கருவறை அருகில் வைத்தனர்.
இங்குள்ள மகாலட்சுமிக்கு, 'கடவில் ஸ்ரீ மகாலட்சுமி' என பெயர். இவள், அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக விளங்குகிறாள். முன் கைகளில் நெற்கதிர், கிளி, பின் கைகளில் சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். திருமணத்தடை உள்ளவர்கள், சூரிய உதயத்தின் போது, மகாலட்சுமி இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி, அம்பாளை தரிசிக்கின்றனர்.
ஆலப் புழையிலிருந்து, 30 கி.மீ. தூரத்தில் உள்ளது சேர்த்தலா. அங்கிருந்து, பள்ளிப்புரம் சாலையில், 7 கி.மீ., தூரம் சென்றால், மகாலட்சுமி கோவில் வரும்!
தி.செல்லப்பா

