PUBLISHED ON : ஜூலை 30, 2017

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அந்தந்த பொறுப்புக்கும், பதவிக்கும் தகுந்தாற் போல, சில சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கும். அவற்றைப் பார்த்து, மனம் போனபடி பேசுவதோ, இடையூறு உண்டாக்குவதோ தவறு என்பதை, விளக்கும் நிகழ்வு இது:
இரவு நேரம் அது...
ஆகாய வீதி வழியாக, சித்த புருஷர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். திருமடத்தை நெருங்கிய போது, அவருடைய போக்கு தடைபட்டது.
'இங்கு ஏதோ சிறப்பிருக்க வேண்டும்...' என, நினைத்த சித்தர், கீழே பார்த்தார். சித்தருடைய நிழல், மடத்து நிலா முற்றத்தில் விழ, அந்நிழலை நோக்கி, 'வா...' என அழைத்தார், மடத்திலிருந்த தேசிகர்.
மந்திரத்தால் கட்டுண்டதைப் போல, தேசிகரின் முன் வந்தார், சித்தர். அவரைப் பார்த்ததும், சித்துகள் செருக்கை அளிக்கும் என்பதை உணர்ந்து, தேசிகரின் சீடராக ஆனார், சித்தர்.
இவ்வாறு சித்த புருஷரையே தன் சீடராகிய தேசிகர், சிவ ஸ்தல யாத்திரை செய்து, திருச்செந்தூரை அடைந்தார்.
தேசிகரின் சீடர்களும், அடியார்களும்,
'சிவ சிவ...' என முழங்க, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் தீவர்த்தியோடு, பல்லக்கில் வந்த தேசிகரை ஊர் மக்கள், தரிசித்து மகிழ்ந்தனர்.
அதேசமயம், அங்கிருந்த வேறு சிலரோ, 'பகல் நேரத்தில் தீவர்த்திகள் ஒளிரும்படி செல்லக் கூடாது...' என்று தடை செய்தனர். இந்நிலையில், திருச்செந்திலாண்டவன் அர்ச்சகர் வடிவில் அங்கு வந்து, அவர்களிடம், 'ஏன் தடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
'இங்கு, யாரும் இப்படி வருவது வழக்கமில்லை...' என்றனர்.
தேசிகருடைய பெருமைகளைச் சொல்லி, இத்தகையோர், எல்லா வகை சிறப்புகளோடு எங்கும் செல்லலாம் என்று, ஞான நூல்களில் விவரித்திருப்பதை, எடுத்துக் கூறினார், முருகப் பெருமான்.
அவர்களால் மறுத்து பேச முடியவில்லை என்றாலும், 'முதலையும், மூர்க்கரும் கொண்டது விடார்...' எனும் வாக்கிற்கேற்ப, வீண் வம்பில் ஈடுபட்டனர். இதனால், முருகன் கோபப் பார்வை பார்க்க, வம்பு செய்தோர், பேசும் சக்தியை இழந்தனர்.
அர்ச்சகராக வந்த ஆறுமுகப் பெருமானும், அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தார். வம்பு பேசியோர், தேசிகருடைய பெருமையை உணர்ந்து, உள்ளம் வருந்தினர்.
பரிகாரமாக, தாங்களே தீவர்த்திகளை சுமந்து, சென்றனர்.
செந்தில் நாயகனை வழிபட்டுத் திரும்பினார், தேசிகர்.
திருந்திய அவர்களை அன்போடு பார்த்து, திருநீற்றை வழங்கினார். அத்திருநீற்றை பூசிய உடனே, அவர்களது ஊமைத்தன்மை நீங்கி, பேசும் தன்மை பெற்றனர்.
சித்தரை சீடராக்கி, வம்பர்களுக்கும் அருள் புரிந்த தேசிகர், தருமபுர ஆதீனத்தில் பத்தாவது பட்டமாக எழுந்தருளியிருந்த, சிவஞான தேசிகர்.
இப்படிப்பட்ட மகான்களை வணங்கி, அவர்களது அருளை பெறுவோம்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
கோமாதா பூஜையை, எந்த கிழமையில் செய்வது நல்லது?
தினமும் செய்வது மிக விசேஷமானது. 'யாவர்க்குமாய் பசுவிற்கு, ஒரு வாயுறை...' என்கிறது, திருமந்திரம். எல்லாராலும், தினமும் எளிமையாக செய்யக் கூடிய, உயர்ந்த தர்மம், பசுவுக்கு புல் கொடுத்து, வழிபடுவது. தினமும் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது செய்யலாம்.
