PUBLISHED ON : பிப் 10, 2019

மூன்று ஆண் குழந்தைகளின் தாயான, மேரி கோம், குத்துச் சண்டை போட்டிகளில், பரிசுகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறார். மணிப்பூரில், 'ஜூம்' விவசாயம் செய்து வந்த மேரி, தன் கிராமத்து வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை.
'ஜூம்' விவசாயம் என்றால் என்ன தெரியுமா... செடி, கொடிகள், மரங்கள் எல்லாவற்றையும் வயல்களில் போட்டு தீயிட்டு பொசுக்குவர். தீ அணைந்த பின், சாம்பலும், கரியும் நிறைந்த வயல், உரம் போட்ட வயலாகி விடுகிறது. இது தான், 'ஜூம்' என்றழைக்கப்படுகிறது.
'சிறு வயதில், மற்றவர்களின் பசியாற்றியதும், வயல்களில் வேலை செய்ததும், மீன் பிடித்து, பசியாறியதும் இன்றும் மனசுக்குள் பசுமையாக இருக்கிறது... மேலும், காங்கத்தேய் கிராமத்தில், ஆண் நண்பர்களுடன் தான் விளையாடினேன். அதனால், ஆண்கள் மாதிரியே பலசாலியாக முயற்சி செய்திருந்தேன். அப்படி தான் குத்துச் சண்டையில் இறங்கினேன் என்றும் சொல்லலாம்...' என்கிறார், மேரி கோம்.
— ஜோல்னாபையன்.