PUBLISHED ON : ஜூன் 22, 2014

அக்கம்பக்கத்து சிறுவர்களோடு, மொட்டை மாடியில், காற்றாடி விட்டுக்கொண்டிருந்தார் சாமிநாதன்.
''சாமி...சாமி ஒருத்தன் டீலுக்கு வர்றான்.''
ஒரு பையன் கத்தியதும், சட்டென, தன் காற்றாடியை சற்றே கீழே இறக்கி, வலது பக்கமாகத் திருப்பி, டீலுக்கு வந்த காற்றாடியிடமிருந்து, தன் காற்றாடியைக் காப்பாற்றினார் சாமிநாதன்.
சாமிநாதனுக்கு, அறுபது வயது இருக்கலாம்; அக்கம்பக்கத்துச் சிறுவர்கள், அவரை செல்லமாக, 'சாமி' என்று தான், கூப்பிடுவர்.
''டேய் நாளைக்கு, நாம மாஞ்சா போடணும்டா; அப்பத்தான் பயமில்லாம காத்தாடி விடமுடியும்,'' என்று சாமிநாதன் சொன்னதும், சிறுவர்கள் அதை ஆமோதித்தனர்.
''ஏங்க கொஞ்சம் கீழே வந்துட்டுப்போங்க.''
கையில் காபி டம்ளரோடு, கீழே நின்று, மாடியை நோக்கி குரல் கொடுத்தாள் சாமிநாதனின் மனைவி சுமங்கலி.
''என்ன விஷயம் சொல்லு.''
''காபிய குடிச்சுட்டு போயிருங்க.''
''காபி இப்ப வேணாம்; கொஞ்ச நேரங் கழிச்சு வந்து குடிச்சுக்றேன்.''
''காபி சூடா இருக்குங்க; ஆறுமுன்னே வந்து குடிச்சுட்டு போயிருங்க.''
''சொன்னா கேளு... இப்ப வேணாம்ன்னு சொல்றேன்ல,'' விளையாட்டில் ஆர்வமாய் இருந்த சாமிநாதன், காபி குடிக்க அடம்பிடித்தார்.
காலமும், அனுபவமும், வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சாமிநாதனை, உங்களுக்கு தெரியாது. அதை நீங்கள், இப்போது தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
'குமாரு...' வீடே அதிரும்படி அப்பா கூப்பிட்டதும், பயந்து கொண்டே, அவர் முன் வந்து நின்றான் குமார்.
'ஏன்டா... பக்கத்துவீட்டு பையன அடிச்சே... ஊரான் வீட்டுப் புள்ளைகள அடிக்கிறதுக்கா, உனக்கு சோத்தை கொட்டி வளக்கறேன்...'
'இல்லப்பா... ஒரு தாத்தா தடியை வெச்சிக்கிட்டு ரோட்ல நடந்து போய்க்கிட்டிருந்தாரு. அவன் அந்த தடியைத் தட்டிவிட்டுட்டு ஓடிட்டான்ப்பா. அந்த தாத்தா கீழே விழுந்துட்டாரு. 'ஏன்டா, இப்படி செய்தேன்'னு கேட்டேன். அதுக்கு, அவன் என்னைய அடிக்க வந்தான்ப்பா, அதான் நான், அவனை அடிச்சேம்பா....' என்றான்.
உடனே, குமாரின் முதுகில், 'சடார் சடாரெ'ன சாத்தினார் சாமிநாதன்.
'யாரு விழுந்தா உனக்கென்னடா... எவனோ, ஒரு கிழவன் விழுந்ததுக்கு, நான் அசிங்கப்பட வேண்டியிருக்கு. அந்த பையனோட அப்பங்காரன், என்னை நாக்கைக் பிடுங்கிட்டு சாகிற மாதிரி கேள்வி கேக்கறான்...' எனக் கூறி, ஆத்திரத்தில் முதுகில் நாலு சாத்து சாத்தினார்.
'அப்பா... அடிக்காதீங்கப்பா; நான் தப்பே செய்யலியேப்பா... பின்னே ஏம்பா, என்னை அடிக்கிறீங்க...'
'எதுத்தா பேசுற நாயே... நீ தப்பு செய்யலடா... நான் தான் தப்பு செய்திருக்கேன். உன்னை பிள்ளையா பெத்தேன்ல அதுதான் பெரிய தப்பு...'
குமார் அடிவாங்குவதைக் கண்டு மனம் பொறுக்காமல், கணவனை சமாதானம் செய்தாள் சுமங்கலி.
ஒரு நாள் சாமிநாதனுக்கு கடுமையான தலைவலி. சூப்பர்வைசரிடம் அனுமதி வாங்கி, சற்று முன்னதாகவே, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் ஏழெட்டு பையன்கள், கோலி விளையாடிக் கொண்டிருந்தனர். குமார், தன் கையில் கோலிக் குண்டை வைத்து, குறிபார்த்துக் கொண்டிருந்தான். இதை, அப்பா பார்த்து விட்டார்.
ஒரு மணி நேரம் கழித்து, வீடு திரும்பினான் குமார்.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும், நுழையாததுமாக கட்டிலைவிட்டு எழுந்து வெளியே வந்தார் சாமிநாதன்.
'டேய்... எங்கே போயிட்டு வர்றே...'
'ப்ரெண்ட்ஸ்சோட விளையாடிட்டு வர்றேம்பா...'
'என்ன விளையாட்டு?'
தயங்கியபடியே, 'கோலி...' என்றான்.
வேகமாக, அவனை நெருங்கி, தலைமுடியைப் பிடித்து, சுவரில் மோதினார்.
'நாயே... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, உன்னை படிக்க வெக்கறேன்; பொறுக்கிபசங்களோட சேர்ந்து, கோலியா விளையாடறே கோலி...' என்று கேட்டு, அடி விளாசி விட்டார்.
வலியால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான் குமார்.
'உன் தம்பியப் பாரு உன்னைவிட ரெண்டு வயசு சின்ன பையன். எப்படி படிக்கிறான்... இப்பவே கம்ப்யூட்டர், அது இதுன்னு பொறுப்பா இருக்கான். அதுலே கேம் விளையாடுறத விட்டுட்டு, தெருவிலே கோலி விளையாடி, மானத்தையா வாங்கறே...'
அந்த நேரம், தம்பி தனியாக உட்கார்ந்து, கம்ப்யூட்டரில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான்.
குமாருக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருந்ததேயில்லை. எப்போதும் அவன் கோலி, பம்பரம், கில்லிதாண்டு, காற்றாடி போன்ற விளையாட்டுகளையே விளையாடுவான். சில சமயங்களில், நண்பர்களோடு ஓணான் பிடிப்பான். பட்டாம்பூச்சியை துரத்திக் கொண்டு ஓடுவான். ஆனால், அவன் தம்பியோ, கம்ப்யூட்டரின் முன், தனியாக உட்கார்ந்து, எதையாவது செய்து கொண்டிருப்பான்.
குமார் நண்பர்களோடு சேர்ந்து, இப்படி விளையாடுவானே தவிர, அவனுக்கு வேறு எந்த கெட்டபழக்கமும் இல்லை. அவனுக்கு, எப்போதும் நான்கு பேரோடு சேர்ந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்.
நாட்கள் உருண்டோடின; பத்தாம் வகுப்பிற்கு பின், ஐ.டி.ஐ., முடித்து, ஒரு கம்பெனியில் அப்ரெண்டிசாக சேர்ந்தான். அவன் தம்பி பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தான். தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி, அவனைப் படிக்க வைத்தார்.
எப்போதும், தன் இளைய மகனைப் பாராட்டிப் பேசி, குமாரை மட்டம் தட்டுவதையே சாமிநாதன் வழக்கமாக்கிக் கொண்டார்.
அம்மா சுமங்கலி சில சமயங்களில் குமாரை, 'உன் தம்பிய பாருடா... கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சி, பெரிய சாப்ட்வேர் இன்ஜினியராகி, லட்ச லட்சமா சம்பாதிக்கப் போறான். நாங்களும், அவனோட அமெரிக்கா, லண்டன்னு போகப் போறோம். நீ படிச்ச படிப்புக்கு ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சி, இங்கேயே கிடந்து அவதிபடப்போறே...'என்று திட்டுவாள்.
சாமிநாதன் நினைத்தபடியே, இளைய மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, கேம்ப்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். எடுத்த எடுப்பிலேயே, மாதம் அறுபதாயிரம் ரூபாய் சம்பளம். சாமிநாதனுக்கு பெருமையாக இருந்தது. குமாருக்கோ, மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்.
வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, இளையவன் அந்த வேலையை விட்டுவிட்டான். அதிக சம்பளத்தில், ஒரு அமெரிக்க கம்பெனியில் தேர்வாகியிருந்தான். அவனுக்கு பெரிய இடத்து வரன்கள் நிறைய வந்தன. சாமிநாதனுக்கும், சுமங்கலிக்கும் ஊரே வியக்கும்படி அவனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசை. ஆனால், அண்ணன்காரனுக்கு திருமணம் ஆகாமல், தம்பிக்கு திருமணம் செய்ய முடியாது என்பதால், குமாருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். வசதி என, பெரிதாக சொல்லிக்கொள்ள முடியாத இடத்தில் திருமணம் பேசி முடித்தார்.
திருமணம் முடிந்த பின்னரும், சாமிநாதன் குமாரை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே இருந்தார். அப்பாவை எதிர்த்துப் பேசாமல், அமைதியாக இருக்க பழகிக் கொண்டான் குமார். குமாரின் மனைவிக்கு தன் கணவனை, தன் கண்ணெதிரிலேயே திட்டுவதை, பொறுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், மாமனாரை எதிர்த்து பேசாமல், மனதிற்குள் அழுவாள்.
ஒரு நாள், சாமிநாதன் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது, குமாரின் தம்பி அங்கே வந்தான்.
'அப்பா... நான் அமெரிக்கா போகணும்; விசா, ப்ளைட் டிக்கெட் அப்புறம் அங்கே போய் தங்கறது என, ஒரு ரெண்டு லட்சம் வேணும்...' என்றான்.
யோசித்த சாமிநாதன், 'அதுக்கென்னப்பா, ஒரு வாரத்தில ஏற்பாடு செய்திடறேன்...' என்றவர், ஷேவிங் செய்து கொண்டிருந்த குமாரைப் பார்த்ததும், இயலாமையில் வந்த ஆத்திரத்தில், 'இதோ... தண்டத்துக்கு இருக்கான் பாரு ஒருத்தன். இவன் மட்டும் நல்லா படிச்சி, நல்ல வேலைக்குப் போயிருந்தா, நீ கேட்ட பணத்த உடனே தந்திருப்பேன். இப்ப எல்லாத்துக்கும், நானே இல்லே கஷ்டப்பட வேண்டியிருக்கு. இவன் கெட்ட கேட்டுக்கு கல்யாணம் வேற; அதுக்கு வேற ரெண்டு லட்ச ரூபா தண்டசெலவு...'என்றார் கோபத்துடன்.
பொதுவாக சாமிநாதன் என்ன பேசினாலும் பொறுத்து போகும் குமார், அன்று பொறுமை இழந்து, 'எங்க மனசு கஷ்டப்படற மாதிரியே, எப்பவும் ஏன்ப்பா பேசறீங்க... உங்க அண்ணனும்தான் ஹைவேஸ்லே பெரிய இன்ஜினியரா இருக்காரு. ஆனா, நீங்க, ஒரு கம்பெனியிலே சாதாரண பிட்டராத்தானே இருக்கீங்க...' என்று சொல்லி முடிக்குமுன்னே, எழுந்து வந்த சாமிநாதன், குமாரின், கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். பிரச்னை பெரிதாகி, அடுத்த வாரமே, தனிக்குடித்தனம் போய்விட்டான் குமார்.
தன் இளைய மகனை அமெரிக்கா அனுப்பி வைப்பதற்காக, தான் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த அந்த சிறிய வீட்டை, முதன்முறையாக அடமானம் வைத்தார் சாமிநாதன்.
அமெரிக்கா போனதும், இளையைவன் குடும்பத்தை மறந்து விட்டான். ஆறு மாதமாகியும், அவனிடமிருந்து பணம் எதும் வரவில்லை. அவன் படிப்பதற்காக வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தன. வீட்டை அடமானம் வைத்ததற்கான வட்டியைக் கட்ட மிகவும் கஷ்டப்பட்டார். எப்போதாவது, போன் செய்து பேசுவான். ஒரு நாள் போனில், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை, அங்கேயே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தான். இதைக் கேட்ட சாமிநாதனும், அவர் மனைவியும் மனம் உடைந்து போனார்கள்.
வீட்டுக்கடன் வட்டியும், கடனுக்கான வட்டியும் ஏறிக்கொண்டே போனது. வாங்கும் சம்பளம் வட்டி கட்டுவதற்கே போதுமானதாக இல்லை. கடைசியில் யோசித்து, கம்பெனியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த தொகையில் வீட்டை மீட்டு, கடனை அடைத்தார்.
அப்போதுதான், மாதச்செலவிற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. வீட்டை விற்று, அந்த தொகையை பாங்கில் போட்டு, அதன் மூலம் வந்த வட்டியை வைத்து, காலத்தை ஓட்ட ஆரம்பித்தார். ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு, குடிபோனார்கள்.
ஒரு நாள் தன் மனைவியுடன் வந்தான் குமார்.
'அப்பா... அம்மாவும், நீங்களும் ஏம்பா இப்படி தனியா கிடந்து கஷ்டப்படுறீங்க... உங்கள இப்படிப் பாக்க என்னாலே முடியலேப்பா. பேசாம நீங்க ரெண்டு பேரும், எங்க கூடவே வந்திடுங்கப்பா. நான் உங்களை கடைசி வரைக்கும் காப்பாத்தறேன்...' என்றான்.
சாமிநாதனுக்கு குமார் இப்படி கேட்டதும், நெகிழ்ச்சியால் கண்ணீர் திரண்டது. அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தவித்தார்.
'தம்பி மேலே எந்த தப்பும் இல்லேப்பா. அவன் எப்போதும் கம்ப்யூட்டர் முன், தனியாகவே உட்கார்ந்து பழக்கப்பட்டுட்டான். கம்ப்யூட்டரோடவே பழகிப்பழகி, மனித உறவுகளின் மேன்மை, பாசம், இதையெல்லாம் தெரிஞ்சிக்காம போயிட்டான். அதனாலே தான், நீங்க அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட்டீங்க என்கிறத ஒரு நொடியில மறந்துட்டான்.
'நான் சின்ன வயசிலே இருந்தே எப்பவும், நாலஞ்சு பேரோட கலகலப்பா, மகிழ்ச்சியா இருக்கணும்னு ஆசைப்படுறவன். நான் விளையாடிய, கோலி, சடுகுடு, காற்றாடி, கில்லி, பம்பரம் இந்த விளையாட்டுகளும் இதைத்தான் எனக்கு கத்து குடுத்திருக்கு. அதனாலே தம்பி மேல வருத்தப்படுறத விட்டுட்டு, எல்லாத்தையும் மறந்துட்டு, நீங்க ரெண்டு பேரும், எங்க கூட வந்துடுங்க. நான் சம்பாதிக்கிறத வெச்சி, நாலு பேரும் சந்தோஷமா வாழலாம். நீங்க எங்க வீட்டுக்கு வந்தா, எங்க வீடும், மனசும் நெறைஞ்சிடும்...' என்றான்.
'சரி'ன்னு சொல்லுங்க என்பது போல், தன் கணவரைப் பார்த்தாள் சுமங்கலி.
'அப்பா... அன்னைக்கு நான் பெரியப்பாவை, உங்களோட கம்பேர் செய்து பேசினது தப்புதாம்பா. என்னை மன்னிச்சிடுங்க...'
சட்டென சாமிநாதன் காலில் விழுந்தான் குமார்.
கடைசியில் சாமிநாதனும், அவர் மனைவியும் வீட்டை காலிசெய்து, குமாரின் வீட்டிற்கு போனார்கள்.
'குமாரு... இன்னைக்கு சாயங்காலம், கம்பெனியிலே இருந்து வர்றப்போ, ஒரு காத்தாடியும், நூல் கண்டும் வாங்கிட்டு வர்றியா?'
அப்பா, இப்படி கேட்க அதிர்ந்து போனான் குமார்.
'என்னடா அப்படி பாக்கறே? இவ்வளவு வருஷமா, நானாகவே எதை எதையோ கற்பனை செய்து, அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்துட்டேன். இனி, ஒவ்வொரு நிமிஷமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிக்கப் போறேன்...' என்றார்.
அன்று மாலை, காற்றாடியோடு வந்தான் குமார். அப்பாவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, காற்றாடி விடப்பழக்கி விட்டான். அன்று ஆரம்பித்த, அர்த்தமுள்ள வாழ்க்கையை, இந்த நொடி வரை, விடாது அனுபவித்து வருகிறார்.
ஆர்.வி.பதி
