தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே (41)

பசுமை நிறைந்த நினைவுகளே (41)

பசுமை நிறைந்த நினைவுகளே (41)


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குற்றால அருவிகளில், எவ்வளவு கூட்டம் இருந்தாலும், நம் வாசகர்கள் குளிப்பதற்கு, போலீசார் மிகுந்த உதவி செய்வர். குளித்து கொண்டிருக்கும் பொதுமக்களும், 'வாங்க வாங்க வாசகர்களே...' என்று, அன்போடு வரவேற்று, வாசகர்கள் நன்கு குளிப்பதற்கு, வழிவகை செய்வர்.

இருந்தாலும் சில, 'குடி' மகன்கள், 'இது எங்க பாட்டன் வீட்டு அருவியாக்கும்; எங்களுக்கு மட்டுமே சொந்தம்...' என்பது போல, அருவியை விட்டு நகராமல், பாறையைப் போல நிலைகுத்தலாக நின்று, யாரையும் குளிக்க வழிவிடாமல், தாங்களே மொத்த குத்தகை எடுத்தது போல குளிப்பர்.

அவர்களை காவல்துறையினர், 'அன்பொழுக' கவனித்த பின், ஒதுங்கி வழி விடுவர்.

போலீசுக்கு பயந்து ஒதுங்குவது போல ஒதுங்குபவர்கள், போலீசார் ஒரு கணம் அப்படி இப்படி திரும்பியதும், அருவிக்குள் மொத்தமாக பாய்ந்து விடுவர்.

இப்படி அருவிக்குள் பாய்ந்ததும், அரைக்கால் டவுசர் போட்டு குளிக்கும் அனைவருமே ஒரேமாதிரியாக இருப்பதால், வாசகர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், குழம்பிப் போய் விடுவர் போலீசார்.

இந்த குழப்பத்திற்கு தீர்வு காணவும், வாசகர்கள் தனியாக தெரிய வேண்டுமே என்ன செய்வது என, யோசித்த போது, அதற்கு விடை தந்தவர்தான் திருப்பூர் வாசகர் குமார்.

கடந்த, 2002-ல், குற்றால டூர் வாசகராக தேர்வு செய்யப்பட்டு, அந்த ஆண்டு மனைவி கலாவுடன் கலந்து கொண்டார். இவர், திருப்பூரில் பனியன் தயாரிப்பு தொழில் செய்கிறவர்.

தேர்வு செய்யப்பட்ட வாசகர்களை நேரில் போய் அழைக்கும் சம்பிரதாயப்படி, இவரை நேரில் அழைக்க சென்றிருந்த போது, தன் பனியன் பேக்டரியை சுற்றிக் காண்பித்தவர், டூர் பற்றி ஆர்வமாக நிறைய பேசினார்.

அப்படி பேசும் போது, 'வாசகர்கள் அருவிக்கு போகும் போது, தனியாக தெரிய, பனியன் அணிந்து கொள்ளலாமே...' என்ற யோசனையை தெரிவித்ததுடன், அந்துமணி சம்மதித்தால், தானே வாசகர்களுக்கு தேவைப்படும் பனியன்களை தயார் செய்து தருவதாக வேண்டுகோள் வைத்தார்.

அவரது வேண்டுகோள், அந்துமணியிடம் கொண்டு செல்லப்பட்டது.

குற்றால டூரைப் பொறுத்தவரை, எல்லா செலவையும், 'தினமலர்' தான் செய்யும்! இதனால் எதற்கு அவருக்கு சிரமம் என்று யோசித்தார் அந்துமணி. ஆனால், குமாரே தொடர்பு கொண்டு, 'நான் தர விரும்புவது பனியன் அல்ல; திருப்பூர் மக்களின் அன்பு...' என்று சொல்லி, சம்மதம் பெற்று விட்டார்.

அந்த ஆண்டு, 'பர்முடாஸ்' எனப்படும், நீலநிற அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளை நிற பனியனுடன் வாசகர்கள் குளித்தனர். பனியனில் குற்றால டூர் வாசகர்கள், 2002 என்று, முன், பின் பக்கங்களில் அச்சிடப்பட்டு இருந்தது. அந்த எழுத்தும், 'ரேடியம்' இங்கால் பிரின்ட் செய்யப்பட்டு இருந்ததால், இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டிருந்தது.

இது வாசகர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கு உதவக் கூடிய போலீசார், வனத்துறையினர், அறநிலையத் துறையினர், பூங்கா காப்பாளர்கள், மீன்கண்காட்சி பொறுப்பாளர்கள் என்று வாசகர்களை, கவனித்துக் கொள்ள வேண்டிய அனைவருக்கும் உதவியாக இருந்தது.

இப்படி தனி அடையாளத்துடன், வாசகர்கள் மிடுக்கோடு நடந்து போய், மெயினருவி மற்றும் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் குளித்து திரும்பிய கவுரவமான கதையை இரவெல்லாம் பகிர்ந்து கொள்ள, பெண் வாசகியருக்கு காதில் புகைச்சலோ புகைச்சல்.

காரணம், 'பெண்கள் நாங்கள் எப்படி பனியனை போட்டுக் கொள்வது... நீங்கள் கொடுத்த பனியனை ஊருக்கு எடுத்து போய், அங்குள்ள எங்கள் அண்ணன், தம்பி என்று யாருக்கு சேருகிறதோ, அவர்களுக்கு கொடுத்து விடுவோம்...' என்று, பத்திரமாக மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டனர்.

'நீங்கள் போட்டுக்கொண்டு வரும் நைட்டி அல்லது புடவைக்கு மேலேயே, அதுவும் அருவிக்கு பக்கத்தில் போன பின், அணிந்து கொள்ளுங்கள். இதனால், அங்கு பாதுகாப்பிற்கு நிற்கும் பெண் போலீசார், உங்களை பிடித்து தள்ளாமல், நன்கு குளிப்பதற்கு அனுமதிப்பர்...' என்று சொல்லியும், முதல் நாள் யாரும் பனியன் அணிந்து கொள்ளவில்லை. பனிரெண்டு ஆண்டிற்கு முன், பனியன் அணிந்து கொள்வது, அதிலும், முதல் முறையாக என்பதால், கூச்சம் தடுத்திருக்கலாம். 'நாங்களும், சொல்லவேண்டியதை சொல்லி விட்டோம்; பின், உங்கள் விருப்பம்...' என்று சொல்லி, மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

ஆனால், ஆண் வாசகர்களுக்கு அருவிகளில், பனியனுக்கு கிடைத்த மரியாதையை பற்றி, பெண் வாசகிகள், காதில் ரத்தம் வர திரும்ப திரும்ப சொன்னதன் எதிரொலி, மறுநாள் காலையில், கடுமையாக எதிரொலித்தது.

குற்றாலமும், செங்கோட்டை வளைவும்...

குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை போகும் போது, செங்கோட்டை யின் ஆரம்பத்தில், ஒரு வளைவு உங்களை வரவேற்கும்.

இந்த வளைவு, ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அப்போது இந்த மண்ணை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டது.

இந்த வளைவு செங்கோட்டைக்கு மட்டுமல்ல, ஒரு காலத்தில், கேரளா மாநிலத்திற்கும் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. சுதந்திரத்திற்கு பின், மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது தான், செங்கோட்டை, தமிழக எல்லைக்குள் வந்தது.

பழமையான இந்த வளைவு, சுண்ணாம்பு காரை பெயர்ந்து, நிறம் மங்கி, போஸ்டர் ஒட்டுவதற்கும், சுவர் விளம்பரம் செய்வதற்குமே பெரிதும் பயன்பட்டு வந்த நிலையில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகநூல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, தம் ஊரின் அடையாளமாகவும், பெருமையாகவும் விளங்கும் இந்த வளைவை சமீபத்தில் சீரமைத்தனர். இப்போது செங்கோட்டை வளைவு, மீண்டும் கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

'எப்படி இருந்தது இப்படி ஆகிவிட்டதே...' என்று, வெறுமனே புலம்பிக் கொண்டிராமல், நம்மால் என்ன செய்ய முடியும் என்று, காரியத்தில் இறங்குவதே சாலச்சிறந்தது. இதே மாதிரியான பணியை, நீங்களும் உங்கள் ஊரில் நடைமுறைப்படுத்தலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. சிதிலமடைந்த பல பராம்பரிய சின்னங்கள் இழந்த பெருமையை மீட்டெடுக்க, உங்களாலும் முடியும்.

— அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us