sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பசுமை நிறைந்த நினைவுகளே (10)

/

பசுமை நிறைந்த நினைவுகளே (10)

பசுமை நிறைந்த நினைவுகளே (10)

பசுமை நிறைந்த நினைவுகளே (10)


PUBLISHED ON : நவ 10, 2013

Google News

PUBLISHED ON : நவ 10, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 92-ஆண்டிலும் பின், 2013 -ல் நடந்த, வெள்ளி விழா டூரிலும், சென்னை வில்லிவாக்கம் பாலசந்தர்- - விஜயலட்சுமி தம்பதி கலந்து கொண்டனர்.

'கடந்த, 21 வருடங்களுக்கு முன், டூரில் கலந்து கொண்ட போது இருந்த, அதே சந்தோஷம், இப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால், இப்போது, இன்னும் கூடுதலாகியிருக்கிறது...' என்று சொன்ன பாலசந்தர், தன், டூர் அனுபவம் குறித்து பேசிய போது,'எங்களை அழைக்க, முருகராஜ் சார் எங்கள் வீட்டிற்கு வந்த போது, பேச்சோடு பேச்சாக, கொஞ்ச நாட்களாக, லேசாக முழங்கால் வலி உள்ளது என்று, குறிப்பிட்டு விட்டேன். அந்த வார்த்தையை, நானே மறந்து விட்டேன்...

'ஆனால், டூரில் கலந்து கொள்ள, மதுரை ஓட்டலுக்கு போன போதும், குற்றாலம் ரிசார்ட்சில் தங்கிய போதும், எங்களை படியேற விடாமல், தரைத்தளத்தில், 'வெஸ்டர்ன் டாய்லெட்' வசதியுள்ள அறையை ஒதுக்கி கொடுத்ததை மறக்கவே முடியாது. வாரமலர் இதழைப் பொறுத்தவரை, இது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால், எனக்கு, அது, பெரிய விஷயம். திட்டமிடுதலை, ஜப்பான்காரர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பர். இப்போது சொல்கிறேன், ஜப்பான்காரர்கள், திட்டமிடுதலை, வாரமலர் ஊழியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்...'என்று சொல்லிக்கொண்டே போனார்.

பாலசந்தருக்கு, இப்படி ஒரு அனுபவம் என்றால், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு, வேறொரு அனுபவம். டூர் முடிந்து திரும்பும் போது, சென்னையிலிருந்த அவரது உறவினருக்கு ஏதோ பிரச்னை என்று, அவரது தொலை பேசிக்கு தகவல் வந்தது. விஜயலட்சுமியிடம், அதுவரை இருந்த ஆனந்தமெல்லாம் விடைபெற்று, கண்ணீர் பெருகியது. யாருக்கும் எதுவும் செய்யத் தோணவில்லை.

இதைக் கவனித்த அந்துமணி,'ஒன்றும் கவலை வேண்டாம். மதுரை அடைந்ததும், விமானம் மூலம், சென்னை போவதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறேன்...' என்று சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை செய்தார். ஆனால், விமானத்தில் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சரி, பரவாயில்லை, ரயிலிலாவது பயணம் செய்யலாம் என்றால், மறுநாள்தான், அவர்களுக்கு டிக்கெட் போட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில், விஜயலட்சுமிக்கு, சக வாசகர்களின் அன்பும், ஆதரவும், அருகாமையும் அவசியம் என்பதை உணர்ந்து, அன்று ரயில் பயணம் செய்யவிருந்த வாசகர்களுடனே, இவர்கள் இருவரும் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை, அந்துமணி செய்து கொடுத்தார்.

இந்த சம்பவம் முடிந்து, சில நாட்கள் கழித்து, போனில் அழைத்த விஜயலட்சுமி, 'அப்போது, நான் இருந்த நிலையில், அத்தனை ஏற்பாடுகளுக்கும், ஒரு நன்றி கூட சொல்லாமல் வந்துவிட்டேன். ஆனால், என் மனநிலையை உணர்ந்து, 'நான் இருக்கிறேன்' என்று, நிஜமான அன்பும், அக்கறையும் காட்டிய அந்துமணியை, என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

'சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்பவன் மனிதன் அல்ல. சக மனிதர்களுக்கு சங்கடம் வரும் போது, துணை நிற்பவனே மனிதன். அன்று, எங்களுக்கு அவர், துணையாக நின்றது மட்டுமல்ல. வீடு வரை, அவரது பாதுகாப்பும், உதவிகளும் தொடர்ந்தது. அதன் பின்பும், துணை நின்றது. ஆகவே, சந்தேகமில்லாமல், அவர் மாமனிதர் தான். இந்த நன்றியை, இத்தனை நாளும், முகமறியாத அந்துமணிக்கு மனதால் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது, அந்துமணி யார் என்று அறிந்த பின்னும் சொல்கிறேன். இதுதான், நான் சொல்ல வந்த விஷயம்...' என்று சொல்லி முடித்தார்.

இனி, 92-ம் ஆண்டின், இரண்டாவது டூருக்கு வருவோம்.

நான், ஏற்கனவே சொன்னது போல், இரண்டாவது டூரில், நண்பர்கள் இல்லாமல், அந்துமணி மட்டும் கலந்து கொண்டார். ஆனால், சீக்கிரம், வாசகர்களின் அன்பு பிடியில் சிக்கி கொள்ள வேண்டாமே என்று எண்ணி, எங்களுடன் பஸ்சில் வராமல், காரில் தொடர்ந்தார்.

அந்த முறை வந்த வாசகர்கள், 90 சதவீதம் பேர், குற்றாலத்திற்கு புதியவர்கள் என்பதால், அருவியில் குளிக்கும் ஆர்வத்தில் இருந்தனர். இரண்டாவது, டூர் நடந்த போது, சுதந்திர தின விழா விடுமுறை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது; அந்த கூட்டம், அந்துமணிக்கு சாதகமாக அமைந்து விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து, வாசகர்களை கவனித்துக் கொண்டார்.

குற்றாலத்தில் இருந்த அத்தனை அருவிகளிலும் குளித்து முடித்து, மாலை ஊர் திரும்ப வேண்டும் என்ற போதுதான், 'ஆமா... அந்துமணி எங்கே... அப்பப்ப, உங்ககிட்ட வந்து, ஏதோ சொல்லிட்டு போனாரே அவருதானே அந்துமணி...' என்றவர்கள், 'வேறு யாருமே, நம்மோடு இல்லை. அதனால், நிச்சயம் அவர் தான் அந்துமணியாக இருக்க வேண்டும், அவரை நாங்கள் சந்தித்தே ஆக வேண்டும்...' என்று, அடம் பிடித்தனர்.

ஏன் என்று கேட்டதற்கு, 'அதுவா...' என்று சொல்லி, அவர்கள் எடுத்து வைத்த விஷயங்களை கேட்டு, அசந்து விட்டேன். அது என்ன விஷயம் என்பதை அடுத்த வாரம், சொல்கிறேன்.

-- அருவி கொட்டும்.

குற்றாலமும், ஐந்தருவியும்...

குற்றாலம் அருவிகளிலேயே அழகானது ஐந்தருவிதான். ஐந்து பிரிவுகளாக பிரிந்து விழும், இந்த அருவிகளில், குழந்தைகள் முதல், 'குடுகுடு' கிழவர் வரை, அவரவர் உடல் தகுதிக்கேற்ற, அருவியை தேர்ந்து எடுத்து குளிக்கலாம்.

குற்றாலம் முழுவதும் வெயில் அடித்தால் கூட, இந்த ஐந்தருவி பகுதியில் மட்டும், சாரல் நிச்சயம்.

பஸ் நிலையத்தில் இருந்து, ஆறு கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கிறது ஐந்தருவி. இந்த அருவிக்கு போவதே, சுகமான அனுபவம். இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே போகலாம்.வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி உண்டு. நண்பர்கள் ஒன்று சேர்ந்து, இரவு குளியலுக்கு தேர்ந்து எடுப்பது, பெரும்பாலும், இந்த ஐந்தருவியைத்தான்.

பகலில், இங்கு, எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று, குளிக்க போய் கொண்டு இருப்பர் அல்லது குளித்துவிட்டு வந்து கொண்டிருப்பர். மக்களின் சந்தடிகளை எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், ஐந்தருவிகளின் ஆனந்தமான ஆர்ப்பரிப்பான சத்தம், நம் காதுகளை தழுவி தாலாட்டும். நம்மை, செல்லமா, 'வந்து குளியேன்' என்று அழைக்கும். இங்கே குளிக்கலாம், குழந்தை போல விளையாடலாம், மொத்தத்தில், குடும்பத்தோடு குதூகலிக்கலாம்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us