
சில நூற்றாண்டுகளுக்கு முன், கேரளாவில், நம்பூதிரி பெண்கள் பள்ளிக்கு செல்லவோ, கல்வி கற்கவோ அனுமதியில்லை. ஆனால், இன்றோ, நம்பூதிரி பெண் ஒருவர், விமான ஓட்டியாக உள்ளார். ஆலப்புழா தாமரக்குளத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், லலிதா தம்பதியின் மகள் கார்கி. பள்ளிப் பருவத்தில், இவளின் தோழி ஒருவள், விமானத்தில் துபாய்க்கு சென்றது பற்றி சொல்லக் கேட்டதிலிருந்தே இவளுக்கும் விமானத்தின் மீது மோகம் வந்து விட்டது.
பள்ளிப்படிப்பிற்கு பின், மகளை மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்பட்டனர் கார்கியின் பெற்றோர். ஆனால், அவளோ, 'பைலட்' ஆக வேண்டும் என்ற போது வியந்தாலும், மகளின் விருப்பத்திற்கு தடை போடவில்லை.
ஐதராபாத் ராஜிவ்காந்தி ஏவியேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார் கார்கி. முதன் முதலாக, தனியாக, 'ராமோஜி பிலிம் சிட்டி' யின் மீது, 20 நிமிடங்கள் விமானத்தை இயக்கியவர், தற்போது, மாலதீவில் இருந்து வேறு ஒரு தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பொறுப்பான பணியை செய்து வருகிறார் இந்த பெண் பைலட்!
— ஜோல்னாபையன்.

