தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கண்ணாடி நடராஜர்!

கண்ணாடி நடராஜர்!

கண்ணாடி நடராஜர்!


PUBLISHED ON : டிச 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்கழி ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு உரியது. இந்த நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளியம்பல நடராஜரை கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்து, அதில் தெரியும் பிம்பத்துக்கும் பூஜை செய்வர்.

மதுரையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தை காண வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகள் சிதம்பரத்திலிருந்து வந்தனர். இவர்கள் தினமும் நடராஜரின் நடன காட்சியைக் கண்ட பின்பே, உண்ணும் வழக்கமுடையவர்கள். திருமணத்தில் விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களை சாப்பிட அழைத்தனர், பெண் வீட்டார்.

'ஐயா... நாங்கள் சிவதாண்டவம் கண்ட பின்பே சாப்பிடுவோம். இன்று, அதற்கு வசதியில்லை. எனவே, நாங்கள் உண்ணுவதாக இல்லை...' என்றனர்.

இதை கேட்ட சிவபெருமான், அந்த மகரிஷிகளுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இதை தரிசித்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவ பக்தனான அவன், ஆயகலைகள், 64ல், 63ஐ கற்று தேர்ந்தான். பரதக்கலை மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றான். பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது.

'ஆஹா... பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே... இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்... அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்...' என நினைத்தவன், நடராஜர் சன்னிதிக்கு சென்றான்.

'பகவானே... உன் கால் வலிக்குமே... காலை மாற்றி ஆடு...' என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலதுகாலை துாக்கி ஆடினார்.

வலக்கால் துாக்கி ஆடும் நடராஜர், சுந்தரேஸ்வரர் சன்னிதி முன் உள்ள மகாமண்டபத்தில் காட்சி தருகிறார்.

வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னிதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

ஆருத்ரா தரிசனத்தன்று, சுந்தரேஸ்வரர் சன்னிதி முன், ஆறுகால் மண்டபத்திற்கு நடராஜர் எழுந்தருளுவார். அங்கு, தெற்கு நோக்கி நடராஜரை வைத்து, எதிரே அவரது பிம்பம் விழும்படியாக ஒரு வட்டக் கண்ணாடியை வைக்கின்றனர். அன்று, அதிகாலையில் பூஜை நடக்கும் போது, நடராஜர் உருவம், கண்ணாடியில் தெரியும் பிம்ப நடராஜர் அரூபம், மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் அருவுருவம் ஆகிய மூவருக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது.

சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சம். நடராஜர், இடது காலை துாக்கி ஆடிய கோலத்தில் இருப்பார். அந்த திருவடியை அம்பாள் பாதமாக கருதுவர். ஆனால், மதுரையில், வலது காலை துாக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், சிவபாதத்தை தரிசிக்கிற பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் வெள்ளியம்பல நடராஜர் தவிர, பிரகாரத்தில் மேலும் நான்கு சபைகள் உள்ளன. அதாவது, ஒரே கோவிலில், ஐந்து சபைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாலங்காடு (ரத்தின சபை), சிதம்பரம் (பொன்னம்பலம்), திருநெல்வேலி (தாமிர சபை), குற்றாலம் (சித்திர சபை) ஆகிய கோவில்களில் அருளும் நடராஜர் வடிவங்கள் இங்கு உள்ளன.

ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையின் போது, இவர்கள் நால்வரும், நுாற்றுக்கால் மண்டபத்திலுள்ள நடராஜர் சன்னிதிக்கு எழுந்தருளுகின்றனர்.

தமிழகத்தின் பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய சிலை ஆகும். இவர், பத்து கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். அருகில், சிவகாமி அம்மை இருக்கிறாள். சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார்.

வெள்ளியம்பல நடராஜருக்கு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். அபிஷேகம் செய்வதில்லை. உற்சவருக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்வர்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us