PUBLISHED ON : மே 13, 2012

'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய். இருநாளைக் கோலன்றால் ஏகாய்... என்னாளும் இடும்பை கூர் என் உயிரே! சீ... சீ... உன்னோடு வாழ்தல் அரிது...' என்றார் அவ்வையார். வாழ்தல் அரிது என்றாலும், வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளதே!
ஒவ்வொரு வேளையிலும், 'கொண்டா, கொண்டா' என்கிறது வயிறு. ஒரு கல்யாணத்துக்குப் போகிறான். முகூர்த்தம் பத்து மணிக்கு என்றால், ஏழு மணிக்கே இட்லி, காபி, வடை என்று சாப்பிட்டு விடுகிறான். எப்போது இலை போடுவர் என்று விசாரிக்கிறான். பசி தாங்காத சிலர், முகூர்த்தத்துக்கு முந்தியே, முதல் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு விடுகின்றனர். முகூர்த்தம் முடிந்ததும், அங்கேயே ஒரு தூக்கம் போடுவர். தூங்கி எழுந்ததும், மத்தியானம் என்ன சாப்பாடு என்று கேட்பர்.
சாப்பாடு முடிந்ததும் சற்று நேரம் ஓய்வு. பிறகு, ராத்திரி என்ன மெனு என்று விசாரிப்பர். ராத்திரி சாப்பாட்டுக்கும் முதல் பந்தியிலேயே உட்கார்ந்து விடுவர். அங்கேயே தங்கியிருந்தால் காலையில் என்ன டிபன் என்று விசாரிப்பர். இப்படியாக, இந்த வயிறு, வேளா வேளைக்கு சாப்பாடு கேட்கிறது. இதைத் தான் அவ்வையார், அப்படிச் சொன்னார்.
அதேபோல் கணவன் - மனைவி சண்டை வந்தாலும், 'சீ... சீ... உன்னோடு வாழ்தல் அரிது...' என்கிறான் கணவன். ஆனால், அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும், இரண்டு பெண்களும் உள்ளனர்; இதுதான் ஆச்சரியம் என்றார் ஒரு சாது!
நாம் எதையெல்லாம் அரிது, சிரமமானது என்று சொல்கிறோமோ அதையெல்லாம் சகித்து தான், வாழ்க்கை நடத்துகிறோம். இதுவும் ஒரு விசித்திரம் தான். கல்யாண வீட்டில் சாயந்திரம் டிபன் சாப்பிட்டு முடித்ததும், நாலு பேர் சேர்ந்து சீட்டுக் கச்சேரி நடத்துவர். அதற்கு பதில், பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய் வரலாமே என்று தோன்றுவதில்லை.
கோவிலுக்குப் போகாதவர்கள், சீட்டாட்டம் முடிந்ததும், சமையல் அறையை எட்டிப் பார்ப்பர்... 'ராத்திரி என்ன சமையல், என்ன ஸ்வீட்' என்று விசாரிப்பர். பிறகு, ராத்திரி சாப்பாட்டுக்கு எத்தனை மணிக்கு இலை போடுவர் என்று விசாரிப்பர்.
இப்படி சாப்பாட்டையே பிரதானமாகக் கொண்டவர்களும் உண்டு. சாப்பிடட்டும்... அதே அளவு, பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு இருக்க வேண்டாமா? அதனால்தான், உன்னோடு வாழ்வதரிது என்று வயிற்றைப் பார்த்து அவ்வை சொன்னார். வயிறும் முக்கியம் தான். அதோடு, தெய்வ வழிபாடும் முக்கியம்.
***
ஆன்மிக வினா-விடை!
பெண்கள், தோப்புகரணம் போடலாமா?
ஆண், பெண் இருபாலருமே தோப்புக்கரணம் போடலாம்; இதில் பேதமில்லை.
***
வைரம் ராஜகோபால்
