
இவ்வுலகில், எல்லாருக்கும் பிடித்த உறவு, அம்மா; ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது, பிடிக்காத வார்த்தை!
இத்தனைக்கும் அம்மாவுக்கு அவன் செல்லப்பிள்ளை; எல்லாருக்கும் பழைய சாதமெனில், அவனுக்கு மட்டும் இட்லி. அதற்காக தம்பியும், தங்கையும் பொறாமைப் பட்டதில்லை.
அவன் படிப்பு செலவிற்காக, வீட்டிலுள்ள சொம்பு, பித்தளை பொருட்கள் முதல் அம்மாவின் தாலி வரை சேட்டு கடைக்கு அடமானமாக போன போதும், 'ஏன் அவனுக்கு மட்டும் இப்படி செலவு செய்கிறாய்...' என்று அவர்கள், அம்மாவிடம் சண்டையிட்டதில்லை. மாறாக, நம் அண்ணன் படித்து நல்ல நிலைக்கு வரட்டுமே என்று, தாங்களும் கூலி வேலை செய்து, அவன் படிப்புச் செலவுக்கு உதவியாக இருந்தனர்.
அவனும் படித்தான், பட்டம் பெற்றான். நல்ல வேலைக்கு சென்று, கை நிறைய சம்பளம் வாங்கிய கையோடு, பட்டணத்திலேயே வீடு எடுத்து தங்கி விட்டான்.
மாதம் ஒருமுறை என்பது மாறி, சில மாதங்களுக்கு ஒருமுறை என்பதும் போய், ஆண்டிற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து, சில நிமிடங்கள் அம்மாவை பார்த்து, தம்பி, தங்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி விடுவான்.
ஆனாலும், அவர்கள், 'ஏன் அண்ணனை மட்டும் படிக்க வைத்தாய், இப்படி நன்றி மறந்து இருக்கிறானே... அவனுக்கு பதில் எங்களை படிக்க வைத்திருந்தால், நமக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா...' என்று சண்டையிட்டதில்லை.
'உன் அண்ணன் பிளஷர் காரில் வர்றான்... நீ இப்டி கூலி வேலை செய்யிற...' என்றும், 'ஒண்ட வந்த பிசாசு, ஊர் பிசாசை விரட்டிய கதையாய், என்னைக்காவது ஒரு நா, அவன், எவளையாவது கூட்டி வரப்போறான்டி... அன்னைக்கு இருக்கு உங்களுக்கு...' என்றும் தெருப் பெண்கள் கேலி பேசும் போது, 'ஏய்... எங்க அண்ணன் யார கூட்டியாந்தா உனக்கென்ன... நீ கவலைப்படாத, உன்ன ஒண்ணும் கூட்டி வராது...' என்று எந்த சூழலிலும், தன் அண்ணனை விட்டுக்கொடுத்ததில்லை, அவன் தங்கை.
அதேபோன்று அவன் அம்மா, தம்பியிடம், 'ராசா... அண்ணன மட்டும் படிக்க வச்சிட்டு, அம்மா, நம்மள இப்படி மாடு மேய்க்கவும், கூலி வேலைக்கும் விட்டுடுச்சேன்னு கஷ்டமா இருக்காடா...' என்று கேட்டால், 'அப்படியெல்லாம் இல்லம்மா... எனக்கு நீ மட்டும் போதும்...' என்று, விசால மனசுடன் அம்மாவை தேற்றுவான்.
ஆனால், அண்ணனோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், நகரத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஊரில், அவர்களுக்கு உள்ள ஒரே சொத்து, அப்பா சம்பாதித்து கட்டிய வீடு; அம்மா பெயரிலிருந்த அந்த வீட்டை, இரண்டாக பிரிக்காமல் தம்பிக்கு எழுதி வைத்து விட்டாள், அம்மா.
வாழ்வில், அவனுக்கு எதிராக, அம்மா எடுத்த முதல் முடிவு இதுதான். அம்மா அவனைக் கூப்பிட்டு, 'பெரியவனே... தம்பி பாவம்டா... படிக்காம கூலி வேலை செய்றான். அவனுக்குன்னு எதுவுமில்ல; இந்த வீட்டை அவனுக்கு கொடுத்துட்டா, எப்படியாச்சும் பிழைச்சுக்குவான்... இதுல உனக்கு எதாச்சும் வருத்தமிருக்கா...' என்று கேட்டபோது, அப்போது, எதுவும் பேசாமல் மவுனமாக சென்று விட்டான். ஆனால், அம்மா கூறிய அந்த விஷயம், மனதில் தீப்பிழம்பாய் கனன்றது. அந்த பிழம்பில் கருக ஆரம்பித்ததுதான், அவனது தாய்ப்பாசமும், தம்பி, தங்கை உறவும்!
அவனுக்கு துரோகியாகவே தெரிந்தாள், அம்மா. அப்பா சம்பாதித்த வீட்டை தம்பிக்கு கொடுத்த அம்மாவை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு துரோகம் செய்த அம்மாவையும், தம்பி, தங்கையையும் இனி பார்க்கக் கூடாதென முடிவெடுத்து, ஊருக்கு செல்வதை முற்றிலும் நிறுத்தினான். தம்பியிடமிருந்து கடிதம் வந்தது; அடிக்கடி போன் செய்தான். நேரமில்லை என்பதையே சாக்காக சொன்னான்.
ஒரு வீடு, அம்மாவும், தம்பி, தங்கை செய்த தியாகங்களையும், மறைக்க வைத்து விட்டது.
'வீட்டை வேண்டுமெனில் நீ எடுத்துக் கொள்; அம்மாவை மட்டும் வந்து பார்த்துவிட்டு போ...' என, தம்பி எழுதியும், அவன் போகவில்லை. இனி, போனால், மரியாதை போய் விடுமென்று பயந்தான்.
இதோ இப்போதும் தம்பியிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம்...
'அண்ணா, அம்மா இன்னும் எவ்வளவு நேரம் உசுரோட இருக்கும்ன்னு தெரியல... கடைசியா உன்னை பாக்க ஏங்குது...'
தான் ஆடா விட்டாலும், தன் சதை ஆடியது. ஊருக்கு ஓடினான்; அவர்கள் சொந்த வீட்டில் இல்லை. சிறிய ஓலை குடிசையில் குடியிருந்தனர். இற்றுப்போன கட்டிலில் எலும்பும் தோலுமாய் கிடந்தாள், அம்மா. பக்கத்தில் அழுதபடியே அவனது உடன்பிறப்புகள்; உதவிக்கு யாருமில்லை.
அண்ணாந்து பார்த்தான்; அம்மாவின் கிழந்த புடவை, கூரையாய் காட்சியளித்தது.
''அண்ணா... அம்மா உங்கிட்ட ஏதோ சொல்ல துடிக்கிற மாதிரி தெரியுது...'' அம்மாவின் கருவிழி அசைவை வைத்து சொன்னான், தம்பி.
அவனுக்கு கண்ணீர் வழியத் துவங்கியது. மெல்ல குனிந்தான்; அம்மாவின் கையை பிடித்தான். சுருங்கிய தோலுக்கு நடுவே ஈர்க்குச்சியை சொருகி வைத்தது போல இருந்தது அம்மாவின் கை. அவனை, கம்பீரமாக ஒரு கையால் துாக்கி, இடுப்பிலே வைத்துக் கொண்ட கை, இன்று வாடி, வதங்கி, சருகாய் கிடந்தது.
அவனது கை பட்டதும், அம்மாவின் கண்களில், நீர் வீழ்ச்சியாய் கண்ணீர் வழிந்தோடியது.
அம்மாவின் கண்களை உற்றுப் பார்த்தான்; ஒரு சில வினாடிகளில், அது, ஆயிரம் கதைகளை பேசி முடித்தன. அம்மா ஏதோ பேச நினைப்பதை உணர்ந்து, அவளின் வாயருகே தன் காதை கொண்டு சென்றான்.
''அவசரமுன்னு கிளம்பிடாம, அம்மாவுக்கு வாய்க்கரிசி போட்டு, எல்லா சடங்கையும் உன் கையால செஞ்சுட்டு போறியாப்பா...'' என்று கேட்டதுடன், அவளது உயிர் நின்றது. அவன் ஒருவனுக்காக, இத்தனை நாளாய் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது.
தங்கையின் அழுகுரல், தம்பியின் அலறல் எதுவும் அவன் காதில் விழவில்லை. தான் ஒரு குற்றவாளி என்பதை மட்டும் அவன் மனம் சுட்டிக்காட்டியவாறு இருந்தது.
'எல்லாரும் ஏன் இப்படி ஓலைக் குடிசையில் இருக்கின்றனர்...' என்று மனதில் எழுந்த கேள்வியைக் கூட அவனால் கேட்க முடியவில்லை.
உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லையென்றாலும், சிறிது நேரத்தில், அக்கம் பக்கத்து மனிதர்கள் கூடி விட்டனர். மூங்கில் கழி, பின்னப்பட்ட பச்சை ஓலை வந்தது; இதை, யார் முன்னின்று செய்கின்றனர் என்பது அவனுக்கு தெரியவில்லை. ஆனால், அம்மாவிற்கான ஏற்பாடுகளெல்லாம் முறையாக நடந்தன.
''தலைமகன் யாருப்பா... இங்க வா... பேன்டை அவுத்துட்டு, வேட்டி கட்டி, கிணத்துலயிருந்து ஒரு வாளி தண்ணிய எடுத்து, தலையில ஊத்திக்கிட்டு வா,'' உத்தரவிட்டார், சடங்கு செய்பவர்.
பின், அவன் கொண்டு வந்த தண்ணீரால் அம்மாவை குளிப்பாட்ட, பிள்ளைகள் அனைவரும் மூன்று முறை அம்மாவை சுற்றி வந்து, அடுத்த கட்டளைக்கு காத்திருந்தனர். ஊர்க்காரர்கள் சிலர், தோள் கொடுத்து அம்மாவை துாக்க, கையில் ஒரு கயிற்றால் கட்டப்பட்ட நெருப்பு சட்டியை இவன் கையில் கொடுத்து, திரும்பிப் பார்க்காமல் நடக்க சொன்னார், ஒருவர்.
இடுகாடு வந்தது; எடுப்பார் கைப்பிள்ளையாய் சடங்கு செய்பவர் சொல்வதை எல்லாம் செய்தான். நடுவில், பணம் செலவாவதையும் கவனித்தான். ஆனால், பணம் வேண்டுமென இவனிடம் கேட்கவில்லை, தம்பி.
''வாய்க்கரிசி போடறவங்க எல்லாம் வாங்க...'' சடங்கு செய்பவர், இவன் கையில் சிறிது அரிசியை கொடுக்க, முதன் முதலாக, அம்மாவை நினைத்து, நிலைகுலைந்து போனான். 'அம்மா'வென கட்டிப்பிடித்து கதறி அழ துடித்தான்; ஆனால், முடியவில்லை.
சிறிது நேரத்தில் அம்மாவின் முகத்தை மூடி, கற்பூர கட்டிகளை வைத்து, ஒரு கற்பூரத்தை ஏற்றும்படி அவனிடம் கூற, கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் கற்பூரத்தை ஏற்றினான். அந்த நொடி, அவன் இதயத்தில் ஏற்பட்ட வலி, அம்மாவின் மகிமையை, சக்தியை உணர வைத்தது.
மறுநாள், ''அண்ணா... உங்களால இங்க ரொம்ப நாள் இருக்க முடியாதுங்கிறதால, 'அண்ணன் இருக்கும் போதே, மூணாவது நாளே, எனக்கான எல்லாக் காரியத்தையும் முடிச்சுடுங்க'ன்னு அம்மா சொல்லுச்சு. இன்னும் ஒருநாள் இருந்தியின்னா, எல்லா சடங்கையும் முடிச்சிடலாம்,'' என்றாள், தங்கை.
இதைக் கேட்டதும், அம்மாவின் அன்பை நினைத்து, கதறி அழுதான்.
மறுநாள் காலை -
எல்லா காரியங்களும் முடிந்த பின், குடிசையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வந்த தம்பி, ''அண்ணா, அம்மாவுக்கு கேன்சர்ன்னு, ஆறு மாசத்துக்கு முன்தான் தெரியும். ஆபரேஷன் செய்தா, ஆறு மாசத்துக்கு சாவ, தள்ளிப் போடலாம்ன்னு டாக்டர் சொன்னாரு.
''அதனால, வீட்ட விக்கலாம்ன்னு நினைச்சு, உனக்கு போன் செய்தும், லெட்டர் போட்டும் உன்கிட்ட இருந்து பதில் இல்ல. கடைசியா வீட்டை வித்து, அம்மாவை ஆறு மாசம் காப்பாத்தி, முடிஞ்சவரை நல்லா பாத்துகிட்டோம்.
''அம்மா மருத்துவ செலவு, இறுதி செலவு போக, இதில் மீதி பணமிருக்கு. எங்களுக்கு பணம் வேணாம்; இந்த கஷ்டம் எங்களுக்கு பழகிப் போச்சு. உன்னால கஷ்டத்தை தாங்க முடியாது; இதை வச்சுகிட்டு நீ சந்தோஷமா இருந்தா, அதுவே எங்களுக்கு போதும்,'' என்றான். தங்கையும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.
தங்கள் பெருந்தன்மையால், அவனது சுயநலத்திற்கு அவர்கள் போட்ட சூடு தாங்காமல், 'அம்மா...' என்று கதறி அழுதான்.
ஆறுதல் படுத்தத்தான் அவன் அம்மா இல்லை!
பெயர்: கோவி.சேகர்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றவர். கனரா வங்கியில், 34 ஆண்டுகள் பணிபுரிந்து, மேலாளராக பணி உயர்வு பெற்று, கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். சென்னை தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு பல நாடகங்கள் எழுதியுள்ளார். 'இதயத்திலிருந்து' என்ற தலைப்பில், கவிதை தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

