/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (15)
/
எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (15)
PUBLISHED ON : மே 24, 2015

திருச்சியில் முகாமிட்டிருந்த ராதா, அங்கு, ராமாயணம் நாடகம் நடத்தப் போவதாக அறிவித்தார். 'தடை உத்தரவு போட்டாலும் மீறுவேன்...' என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மறுநாள் அவரது துணிச்சலைப் பாராட்டி, கழகத்தினர் அவருக்கு தேநீர் விருந்து அளித்தனர். அதிலும், ராமன் வேடத்திலேயே கலந்து கொண்டார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடகம் நடத்தவில்லை என்று அறிவித்தாலும், சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்.
'டிச.,18, 1954ல் திருச்சியில், ராமாயணம் நாடகம் நடைபெறும். நான் சிறையிலிடப்பட்டால் எப்போது வெளி வருவேனோ தெரியாது. ஈ.வெ.ரா., வந்து மற்ற காரியங்களைப் பார்த்துக் கொள்வார். அதுவரையில் கழகத் தோழர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடையாள எதிர்ப்பாகவே இக்காரியத்தில் ஈடுபடுகிறேன். ஆட்சியாளர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக இல்லை என்பதை தெரிவித்து, உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்...' என்றார்.
எதிர்பார்த்தது போலவே, டிச., 18ம் தேதி காலையிலேயே திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் ராதா. திராவிடர் கழகத்தினர், தோழர் சுயம்பிரகாசம் தலைமையில் நாடக மசோதாவை எதிர்த்தும், ராதாவை விடுதலை செய்யக் கோரியும், சென்னையில் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம் மற்றும் டி.கே.சண்முகம் அடங்கிய நாடக குழுவினர், முதல்வர் காமராஜரைச் சந்தித்து, ராதாவை விடுதலை செய்யும்படி மனு கொடுத்தனர். அவர் பரிசீலிப்பதாகக் கூறினார்.
சட்ட அமைச்சர் சுப்ரமணியத்துக்கும், முதல்வர் காமராஜருக்கும் நாடக மசோதா விஷயத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாகவே செய்திகள் வெளிவந்தன.
அதன்பின், டிச.,22ல், சட்டசபையில், நாடக தடை மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதில், விருப்பமில்லாத எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு செய்தனர். விடுதலை செய்யப்பட்டார் ராதா.
நாடகம் நடத்துவதாக இருந்தால், அந்நாடகம் சம்பந்தப்பட்ட முழு கதை வசனத்தையும், ஒரு வாரத்திற்குள் அரசிற்கு கொடுத்துவிட வேண்டும் என்று, சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு அனுமதித்தாலே நாடகம் நடத்த முடியும். நான்கைந்து நாட்களுக்கு முன் கொடுத்தால், திருப்பி அனுப்பி விடுவர்.
அதனால், ராதா, வழக்கறிஞர் நம்பியாரின் உதவியை நாடினார்.
'வித் இன் ஒன் வீக்' என்றால் ஒரு வாரத்துக்குள் என்று பொருள். 'பிபோர் ஒன் வீக்' என்றால் தான், ஒருவாரத்துக்கு முன்பு என்று பொருள். எனவே, என் கட்சிக்காரர் நாடகம் துவங்குவதற்கு முன்பு கூட ஸ்கிரிப்டை கொடுக்கலாம்...' என்று வாதாடினார் வழக்கறிஞர் நம்பியார். 'சரி தான்...' என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
தூக்குமேடை நாடகம் என்று அறிவித்து விடுவார். அதற்கான ஸ்கிரிப்டையும் சமர்ப்பித்து விடுவார். நாடகம் நடக்கும் சமயத்தில் அதை தடை செய்ய போலீசார் வருவர். வெறும் மேடை என்ற தலைப்பில் சில பல மாற்றங்களுடன் நாடகம் ஓடிக் கொண்டிருக்கும்.
'என்னய்யா இது... தூக்கு மேடைக்குத் தானே, 'ஸ்கிரிப்ட்' கொடுத்தீங்க?' என்று கேட்பர் போலீசார்.
'ஆமா... ஆனா, தூக்கு மேடை நடிகர்களுக்கு உடம்பு சரியில்ல; அதான் வெறும், மேடை நாடகம் நடத்தறோம்...' என்பார்.
கோவையில் நாடகம் நடத்தச் சென்றார் ராதா. யாரும் அவருக்கு தியேட்டர் கொடுக்கக் கூடாது என்று தடைகளை ஏற்படுத்தினார் கலெக்டர். 'கோவைக்கு அருகில் ஒரு சிறிய ஊரில், ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறார்; அவர் உதவுவார்...' என்று நண்பர்கள் சிலர் கூறினர். அவரைத் தேடிச் சென்றார் ராதா.
நாடகம் நடத்த இடம் கொடுத்து உதவுமாறு கேட்டார்; அவர் தயங்கினார்.
'இந்த இடத்தை எனக்கு நாடகம் நடத்த எழுதிக் கொடுத்துட்டதா சொல்லிருங்க...' என்று ஆலோசனை கொடுத்தார் ராதா. அப்படியும் அவர் தயங்கினார்.
'நம்மள மாதிரி ஆட்களை, மேல்சாதிக்காரங்க ஒதுக்கி வச்சிருக்காங்க; அந்தச் சமுதாய ஏற்றத் தாழ்வை நீக்குறதுக்குத்தான் பாடுபடறோம். மத்தபடி இந்த தொழிலால எங்க வயித்துக்கே வருமானம் வர்றதில்ல...' என்று ராதா தன் பாணியில் மடக்க, நாடகம் நடத்த இடம் கொடுத்தார் பணக்காரர். ஓலைக் கொட்டகை தயாரானது.
கலெக்டர் அந்தப் பகுதிக்கே, 144 தடை உத்தரவு போட்டார். 'அங்கு யாரும் கூட்டம் போடவோ, கும்பலாக நிற்கவோ கூடாது; மீறினால் துப்பாக்கிச் சூடு...' என்று எச்சரிக்கை விடுத்தார். ராதா கவலைப்படவில்லை. நாடகம் நடைபெறும் என்று அறிவித்தார்.
கொட்டகைக்குள் நுழைந்தது போலீஸ்.
'கூட்டம் போடக்கூடாது...' என்று அறிவுறுத்தினர் போலீசார்.
'கூட்டம்தானே போடக்கூடாது... நாடகம் தானே நடத்தப் போறேன்; அதுக்குத் தடையில்ல. ஜனங்க வரலன்னா பரவாயில்ல; இங்க இருக்குற நாற்காலி, பெஞ்சுகளுக்காவது பகுத்தறிவு வளரட்டும்...' என்று கூறி மணி அடித்தார்.
போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியேறினர். மணிச் சத்தம் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கூட்டம் சேர ஆரம்பித்தது. போலீசார் துப்பாக்கிகளுடன் வெளியே தயாராக இருந்தனர்.
'சாகத் துணிந்தவர்கள் மட்டும் என் நாடகம் பாக்க உள்ளே வரலாம்...' என்று உள்ளிருந்து ராதாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
'நாங்க வர்றோம்...' என்று வெளிப்புறமிருந்து மக்களின் குரல் எதிரொலித்தது. நிலைமை உஷ்ணமாகிக் கொண்டே போனது.
எங்கே கலெக்டர், 'பயரிங்' ஆர்டர் கொடுத்துவிடுவாரோ என்று தயங்கினார் ராதா. நாடகம் பார்க்க வருவோருக்கு காயம் ஏற்பட்டால், அதற்குக் காரணம் அவராகத்தானே இருக்க முடியும். எனவே, 'நாடகம் நாளை நடைபெறும்...' என்று சொல்லி, மக்களை அனுப்பி வைத்தார். பின், சென்னை வந்து தடை உத்தரவு மீது ஸ்டே ஆர்டர் வாங்கி, அதன்பின் அங்கு நாடகம் நடத்தினார்.
அடுத்த முகாம், வேலூர் முள்ளிப்பாளையத்தில். அங்கு நடந்தவையெல்லாம் கலவரமல்ல; போர் என்றே சொல்லலாம்.
நாடகம் நடந்து கொண்டிருக்கும்; ரசிகர்களோடு ரசிகர்களாக கலந்திருக்கும் கலவரக் கும்பல், திடீரென எழுந்து மிளகாய் பொடியைத் தூவ ஆரம்பிக்கும். ரசிகர்கள் மிரண்டு போவர். எதற்கும் தயாராக இருக்கும் ராதா, கையில் கம்புடன் களமிறங்குவார். தூத்துக்குடியான் என்று ஒருவர் ராதாவின் குழுவில் இருந்தார். அவரும், ராதாவும் சேர்ந்து கையில் கம்புடன் களமிறங்கினால், சிலம்பாட்டத்தில் பொறி பறக்கும். அப்படிச் சமாளித்துத் தான் முள்ளிப்பாளையத்தில் நாடகம் நடத்தினர்.
அன்று இரவு, சாலைகள் போடுவதற்காகப் போடப்படும் கற்கள், நாடக அரங்கின் முன் கொட்டப்பட்டன. அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 'ஏதோ சதி நடக்கப் போகிறது; வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...' என்று ராதாவுக்குத் தோன்றியது.
நள்ளிரவு நேரம். அரங்கத்தின் மேல் படபடவென்று கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. 'அண்ணே... வெளியே 60 - 70 பேர் நிக்குறாங்க; அவங்க கையில கத்தி, அருவா, கம்புன்னு நிறைய ஆயுதங்க இருக்கு. நம்மள சாகடிக்காம விடமாட்டாங்க போல...' குழுவிலுள்ள ஒருவர் ஓடி வந்து ராதாவிடம் சொன்னார். கலவரம் நடக்கும் என்று நினைத்ததால், அரங்கத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி, மின்சார ஒயர்களால் கனெக் ஷன் கொடுத்திருந்தார் ராதா.
'டேய்... இன்னிக்கு நிச்சயமா தலை உருளப் போகுதடா...' என்று கர்ஜித்தார் ராதா. கற்கள் விழுவது நின்றன.
'ஏய் தாமோதரா... நீ போய் மெயின் கேட்டைத் திறந்து வையி. நான் பின்னாடியே வர்றேன்...' என்று தாமோதரனை வெளியே அனுப்பினார் ராதா. அவசரமாகச் சென்ற தாமோதரன், அக்கும்பலிடம் மாட்டிக் கொண்டான். அவன் மேல் வேல்கம்பு பாய்ந்தது.
ராதாவும், தூத்துக்குடியானும் கம்புடன் வந்து கேட்டைத் தாண்டிக் குதித்தனர். சண்டை ஆரம்பமானது. ஒரு கட்டத்தில் ராதா சாதுரியமாகக் குரலெழுப்பினார்...
'ஒரு பொணம் விழுந்துருச்சி, இந்த ரோடிலே இன்னும் ஏழெட்டுப் பொணம் விழணும். அடிடா பலமா...' என்றார்.
தங்களில் யாரோ ஒருவன்தான் கொல்லப்பட்டு விட்டான் என்றெண்ணிய கலவரக் கும்பல், கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது. அரங்கத்தினுள் இருந்த ராதாவின் ஆட்கள், மேலும் சிலர், ஆயுதங்களுடன் வந்தனர். அதில், கையெறி குண்டுகளும் உண்டு. கலவரக் கும்பல் தெறித்து ஓட ஆரம்பித்தது. ராதாவும், அவரது ஆட்களும் கலவரக் கும்பலை விரட்டினர்.
கலவரக் கும்பல் போகும் போது பஜாரில் வைக்கப்பட்டிருந்த ராதாவின் நாடக பேனர்களுக்குத் தீ வைத்தது. அந்தத் தீ எக்குத்தப்பாக பரவி, வேலூர் மார்க்கெட்டே கருகிப் போனது.
மதுரை ரயில் நிலையம் -
அன்று காமராஜர் வந்திருந்தார்.
அங்கு...
— தொடரும்.
எம்.ஜி.ஆர்., வந்தால் செட்டில் யாரும் உட்கார மாட்டார்கள். வேலையை வேகமாக முடிக்க வேண்டும் என்று பரபரப்பாக இயங்குவர். எம்.ஜி.ஆரும், ராதா முன், உட்கார மாட்டார். ராதாவே வற்புறுத்தினால் தான் உட்காருவார். ராதாவுக்கான காட்சிகளை சீக்கிரம் முடித்து அனுப்பச் சொல்வார் எம்.ஜி.ஆர்.,
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- முகில்

