sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்பினோர் கைவிடப்படார்!

/

நம்பினோர் கைவிடப்படார்!

நம்பினோர் கைவிடப்படார்!

நம்பினோர் கைவிடப்படார்!


PUBLISHED ON : ஜூலை 19, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில், 10 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள, சேத்துார் எனும் திருத்தலத்தில் நடந்த வரலாறு இது:

முற்காலத்தில் அத்தலம், சேற்றுார் என அழைக்கப்பட்டது. அத்தலத்து ஈசனையும், அம்பாளையும் துதித்து, 'சேறைத்தல புராணம்' எனும் அருந்தமிழ் நுாலை, சிந்தாமணி பிள்ளை என்பவர் எழுதினார்.

கல்விக்கழகு கசடற மொழிதல் என்பதற்கு இணங்க, பல நுால்களை எழுதிய அப்புலவர், தாம் எழுதிய, 'சேறைத்தல புராண'த்தை கோவிலில் அரங்கேற்றினார்.

சுவாமி சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் நடுவில் அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்றம் முடிந்த அதே விநாடியில், அந்த இடத்தில் மட்டும் தேவர்கள், மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் வியந்தனர்.

கோவிலில் அபிஷேக அர்ச்சனைகள் செய்து, 1,000 பொன் கொண்டு, புலவருக்கு கனகாபிஷேகம் செய்தார், அரசர்; இதையடுத்து, சிந்தாமணி பிள்ளை, 'பொன்னாயிரங் கவிராய மூர்த்தி' என, அழைக்கப்பட்டார்.

சந்திராமுத கவிஞர் என்பவருக்கு மட்டும் தாங்கவில்லை.

'இப்புலவர் செய்த நுாலில் குற்றங்கள் உள்ளன. இவருக்கு போய் இவ்வளவு மரியாதையா... இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்...' என்றார்.

அரசர் உட்பட, கூட்டம் முழுதும் அதிர்ந்தது. வாதம் செய்த புலவரோ, குற்றங்களை வரிசையாக அடுக்கினார். அவ்வளவிற்கும் பதில் சொன்னார், கவிராயர்.

அப்போதும், சந்திராமுத கவிஞரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அக்கோவிலிலேயே அம்பாள் சன்னிதியில் உள்ள கிளி, அங்கு நடந்தவற்றை எல்லாம், பார்த்துக் கொண்டிருந்தது.

சந்திராமுத கவிஞர் மறுப்பை கேட்டவுடன், அக்கிளி பறந்து, நேரே சன்னதிக்குள் நுழைந்தது. அம்பிகையின் கரங்களில் இருந்த சிறு பூச்செண்டையும், மோதிரத்தையும் வாயால் கவ்வி வந்து, கவிராயரின் கைகளில் போட்டு, 'கீச் கீச்'சென்று கத்தி பறந்து, சற்றுத்தள்ளி உட்கார்ந்தது.

சந்திராமுத கவிஞர் உட்பட அனைவரும் வியந்தனர்.

'கவிராயரே... என்னை மன்னியுங்கள்; பொறாமையின் காரணமாக, உங்களை அவமானப்படுத்தி விட்டேன். உங்களுக்கு, அம்பிகையே அருள் செய்ததைப் பார்க்கும்போது, என்னால் பேச முடியவில்லை. மன்னியுங்கள்...' என, கவிராயரிடம் மன்னிப்பு வேண்டினார், சந்திராமுத கவிஞர்.

'புலவரே... உங்களால் தானே, இன்று இந்த அதிசயம் நடந்து, அடியேனுடைய நுாலுக்கும் அம்பிகையின் அங்கீகாரம் கிடைத்தது. ஆகவே, நீங்கள் செய்தது தவறே இல்லை...' என்றார், கவிராயர்.

மன்னரும், மக்களும் பெருங்குரல் எழுப்பி ஆமோதித்தனர்.

அடியாரை ஒருபோதும் தெய்வம் கைவிடாது என்பதை விளக்கும் வரலாறு இது.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்குள் மற்றும் மாலை, 5:30 மணி முதல், 6:00 மணிக்குள் தீபம் ஏற்றுவதால், நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். மேலும், எவர்சில்வர் விளக்குகளை, பூஜை அறையில் விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது.






      Dinamalar
      Follow us