
இன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருமணி நேரம் சேர்த்து தூங்கலாம் என்ற நப்பாசையில், படுக்கையில் உருண்டு கொண்டிருந்த என்னை, நரேஷ் அம்மாவின் குரல்தான் எழுப்பியது.
''சரவணனம்மா... நம்ப சரவணன் அகமதாபாத்துக்கு டிரெயினிங் போறப்போ, ஒரு பேக் எடுத்துட்டு போனானே, அதை கொஞ்சம் தர்றீங்களா? எங்க நரேஷ், இன்னைக்கு ராத்திரி பெல்காம் போறான் இன்டர்வியூக்கு.''
நரேஷ் அம்மாக்கு தடித்த சரீரம்; இதே காம்பவுண்டில், இருபது வருஷமாய் எங்களோடு இருப்பவர். என் அம்மாவிற்கு நல்ல சினேகிதி.
''நரேஷ் அம்மா, அது பழசாயிடுச்சு, அதுக்கப்பறம் நிறைய பேக் வாங்கினது இருக்கு, தரவா?'' நரேஷ் அம்மாவிடம், எங்கள் வீட்டு 'பேக்'களின் பெருமையை பேசிக் கொண்டிருந்தாள் அம்மா.
''ஐயோ சரவணன் அம்மா, நானென்ன எங்க வீட்டுல பை இல்லாமலா உங்க வீட்டுல கேட்கறேன். ராமா, ராமா... நம்ப சரவணன், நரேஷை விட ரெண்டு வயசு சின்னவன், அவனை விட ஒரு டிகிரி கம்மியாத்தான் படிச்சான். ஆனா, அவனுக்கு நரேஷை விட சீக்கிரமே வேலை கிடைச்சிருச்சு. ஆனா, எங்க நரேஷ் எம்.இ., படிக்கிறேன்னுட்டு, கூட ரெண்டு வருசம் தள்ளி போட்டுட்டான். கடவுள் புண்ணியத்துல, இப்பத்தான் முதன்முதலா இன்டர்வியூ போறான். இந்த வேலையே கிடைச்சு, அவன் சீக்கிரம் வாழ்க்கையில செட்டில் ஆகணும். அதான், நம்ப ராசிக்கார சரவணன் கையால, அந்த பையை எடுத்து தரச் சொல்லுங்க.''
யாரை புகழவும், அங்கீகரிக்கவும் நரேஷ் அம்மா தயங்கியதேயில்லை.
நானும், நரேஷும், இதே காம்பவுண்டில் ஒன்றாக ஓடி வளர்ந்தவர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், இயல்பாகவே நரேஷ் கொஞ்சம் கர்வி... அதிகம் படிப்பறிவில்லாத பெற்றோருக்கு பிறக்கிற, கொஞ்சம் அறிவான பிள்ளைகளுக்கு இயல்பாய் தலைவிரித்தாடும் கர்வம் அவனுக்குள்ளும் எப்போதும் உண்டு.
அதுவும், அவனுடைய ஒவ்வொரு செயலையும், அணு அணுவாய் ரசித்து விவரிக்கிற பெற்றோர் வளர்த்த நரேஷûக்கு அந்த கர்வம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது, அவனுடைய அப்பா தவறிப் போனார். அதன் பின், அவனை வளர்த்து ஆளாக்க, நரேஷம்மா பட்டபாடு சொல்லி மாளாது.
திடீரென்று ஒரு வாரம் போல் ஆகியிருக்கும், வாயெல்லாம் பல்லாக எங்கள் வீட்டிற்கு வந்தாள் நரேஷ் அம்மா.
''சரவணனம்மா, நரேஷûக்கு வேலை கிடைச்சிருச்சு. நம்ப சரவணனை விட, மூவாயிரம் கூடுதலா சம்பளமாம்,'' நரேஷ் அம்மாவின் இலக்கு எப்போதும், நானாக இருப்பதை எண்ணி, ஒரு பக்கம் எரிச்சலாய் வந்தாலும், நரேஷ் அம்மாவின் தாய்ப்பாசம் என்னை கவர்ந்தது.
''நல்ல விஷயந்தான் நரேஷ் அம்மா... முதல்ல வேலையில சேரட்டும், அந்த சூட்டோடு, அவனுக்கு ஒரு பொண்ணையும் பார்த்துடுங்க,'' என்னுடைய அம்மா, இலவசமாய் இணைப்பு உரையை வழங்க, நரேஷ் அம்மாவிற்கு மனங்கொள்ளாத பூரிப்பு.
''முதல்ல, வீட்டு வேலை செய்ய ஒரு ஆளைப் போடணும் சரவணனம்மா. எனக்கு இப்போல்லாம் உடம்புக்கு ஆவதேயில்லை,'' என்று நரேஷ் அம்மா பூரிப்போடு சொன்னாள்.
பாடுபட்ட மனுசி... ஆசைப்படுவதில் நிச்சயமாய் அர்த்தம் இருப்பதாய் தான் எனக்குத் தோன்றியது.
வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில், நரேஷûக்கு, டீம் ஹெட்டாக உயர்வு கிடைத்தது. நிறைய மாறிப்போனான் நரேஷ்.
அது ஒரு வெள்ளிக்கிழமை... நைட் ஷிப்ட் முடித்து, அக்கடான்னு வந்து கட்டிலில் சரிந்த நேரம், வாசலில் நரேஷ் அம்மாவின் சப்தம் கேட்டது.
''சரவணாம்மா, அவனை பொத்தி பொத்தி வளர்த்தேன். மத்தவங்க கையால செய்ற வேலையை, தலையால நான் செஞ்சேன். இவனை, இப்படியெல்லாம் காப்பாத்திட்டு, இப்போ இவன் கல்யாணத்தை முடிவு செய்ற உரிமை எனக்கில்லைன்னு சொல்றான். வேற ஜாதி பொண்ணை கட்டிக்க போறானாம். எங்க உறவுமுறையெல்லாம் காரி துப்பாதா சொல்லுங்க...''
அம்மாவும், நானும் தர்மசங்கடமாய் பார்த்துக் கொண்டோம்.
அடுத்த நாள் நிலைமை, இன்னும் விபரீதமானது. அந்த படித்த முட்டாள், கோபத்தில், அம்மாவை வெளியில் பிடித்து தள்ளிவிட்டான் போலும். எங்க வீடே கதியென்று நரேஷம்மா வந்து நின்று அழுதாள்.
''சரவணா, நீயாவது சொல்லேன்டா... அவன், உனக்கு சினேகிதன் தானே. நான் வீட்ல இருந்தா, நாகரிகமா இல்லைங்கறான்டா. எனக்கு பேசத் தெரியலயாம், பழகத் தெரியலியாம். இந்த வயசுக்கு மேல, நான் இதெல்லாம் எந்த பள்ளிக்கூடத்துல போய் படிக்கறது?''
அன்று முழுக்க எங்கள் வீட்டில் இருந்த நரேஷ் அம்மாவை அழைத்துப் போக நரேஷ் வரவேயில்லை. இரவில் தானாகத்தான் நரேஷ் அம்மா கிளம்பிப் போனாள்.
''டேய் சரவணா... நீயாவது அவன்கிட்ட பேசிப்பாரேன்டா,'' என்று அம்மா என்னிடம் சொன்ன போது...
''எதுக்குமா... அவன் ஏதாவது காண்டா பே”வான். நம்மோட எல்லையில நிக்கறதுதான் நமக்கு மரியாதை,'' என்றேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த சுவடே இல்லாமல், எண்ணி எட்டாம் நாள், நரேஷ் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்தாள் திருமண பத்திரிகையோடு.
''சரவணாம்மா, ஆயிரஞ் சொல்லு... நீர் அடிச்சு நீர் விலகவா போகுது? இப்போல்லாம் யாரும் மதமே பாக்கறதில்லை. ஜாதியவா பெரிசா நினைக்க போறாங்க. ஜாதி பார்த்து தான் நமக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சாங்க... நாமெல்லாம் என்னானோம் சொல்லு! புள்ளைங்க சந்தோஷத்தை விட, உலகத்துல பெரிய சந்தோஷம் எதுவுமில்லை. அதான், அவன் காதலிச்ச பொண்ணையே கட்டிக்கிடட்டும்ன்னு விட்டுட்டேன்.''
எல்லா செயல்களுக்கும், நரேஷ் அம்மாவிடம் நியாயம் கற்பிக்கும் திறம் இருந்தது.
கல்யாணம், வைபோகம் என்று கொஞ்ச நாள் நரேஷ் அம்மா, எங்கள் வீட்டுப்பக்கம் தலைகாட்டவே இல்லை. அதன் பின், ஒருநாள் வரும்போது பிரச்னையோடு தான் வந்தாள்.
''ஏன் சரவணாம்மா, குடும்பத்தோடு வரச்சொல்லி கம்பெனிக்காரன் சொன்னா... பெத்த தாயை கூட்டிட்டு போவக் கூடாதா. புருசன் பொண்டாட்டி சேர்ந்தது தான் குடும்பமா? அப்ப, அந்த குடும்பத்துல பெத்த தாய்க்கு என்னதான்மா எடம்?''
நரேஷ் அம்மா விசும்பி அழுதாள்.
விஷயம் இது தான்... நரேஷுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டது. அம்மாவை இங்கேயே கழித்துகட்டிவிட்டு, தன்னுடைய மனைவியுடன் கிளம்ப ஆயத்தமாகி விட்டான்.
''அவன் போய்ட்டு போறான் நரேஷ் அம்மா... நீங்க பாட்டுக்கு பேசாம இங்கேயே இருங்க. நிச்சயம், பெத்த தாயோட அருமையை உணர்ந்து திரும்ப வருவான்,'' அம்மா அன்பு மேவ ஆறுதல் சொன்னாள்.
''அதான் முடியாதாம்... நான் இங்க தனியா இருந்தா, அவன் என்னை கவனிச்சுக்கலைன்னு ஊரு தப்பா பேசுமாம். அதனால, என்னை முதியோர் இல்லத்துல கொண்டு போய் விடப் போறானாம்.
ஸ்தம்பித்து போனோம்... நரேஷ் இத்தனை சுயநலவாதியாக இருப்பான் என்று யாரும் கனவிலும் எண்ணவில்லை. அவன் நினைத்தது போலவே, எண்ணி ஒரே வாரத்தில், நரேஷ் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான். கிளம்பும் போது, எங்கள் வீட்டிற்கு வந்த நரேஷ் அம்மா, கண்ணீர் மல்க சொன்னது:
''இல்லத்துக்கு போக எனக்கு வருத்தமே இல்லை சரவணாம்மா... அங்கே, நாலு பேர்கூட இருக்கறது தான் நிம்மதியோ, நிம்மதி இல்லையோ... இந்த புள்ளைங்க நல்லா இருக்கத்தானே நாம பாடுபட்டது. அதுங்க வாழ்க்கையில, ஒரு நல்லது நடந்தாத்தானே பெருமிதம். நம்ம சொந்தப் பேர் எல்லாம் மறந்து போய், ' நரேஷ் அம்மா' மற்றும் 'சரவணன் அம்மா'ன்னு ஆக்குனதெல்லாம், இந்த புள்ளைங்க தானே. அதுங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் சரவணாம்மா.''
மயிர்கூச்செறிந்தது எனக்கு.
நரேஷ் அம்மாவின் தாய்மையின் கனம், என்னை வெகுகாலம் தூங்க விடாமல் தவிக்க வைத்தது. என்னுடைய அம்மாவும், ஒருநல்ல சினேகிதியை இழந்த வேதனையிலேயே இருந்தார்.
''டேய் சரவணா... மதியம் ஓட்டல்ல சாப்பிட்டுக்கடா... நான் கொஞ்சம் பலகாரம் செய்து வச்சிருக்கேன். அதை கொண்டு போய் குடுத்திட்டு, விஜயாவை பார்த்திட்டு வந்துடறேன்.''
''விஜயாவா... அது யார்மா?''
''அதான்டா... நரேஷ் அம்மாவோட பேரு. இனி, அவன் பேரைச் சொல்லி அவங்களை நான் ஏன் கூப்பிடணும். பெத்த மகனாச்சேன்னு விஜயா வேணா மன்னிக்கலாம்; ஒரு தாயா, என்னால, அவனை மன்னிக்க முடியாது. அவன் நல்லா அனுபவிப்பான்டா...''
சொல்லிவிட்டு வீராப்பாய் நடக்கும் என்னுடைய அம்மாவையே பார்த்து கொண்டிருந்தேன். இன்று ஏனோ, என் அம்மாவை நிரம்ப பிடித்தது.
***
எஸ். பர்வீன் பானு

