sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நேதாஜி!

/

நேதாஜி!

நேதாஜி!

நேதாஜி!


PUBLISHED ON : ஜன 19, 2014

Google News

PUBLISHED ON : ஜன 19, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலேசிய தமிழரான ப.சந்திரகாந்தம் எழுதிய, '200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்' என்ற நூலில், நேதாஜி பற்றி எழுதியிருந்த கட்டுரையின் தொகுப்பு இது:

ஜன.,23, 1897ல், மேற்கு வங்காள மாநிலத்தில், பிறந்தவர் நேதாஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ். கோல்கட்டாவில் கல்லூரி படிப்பை முடித்து, இவர், மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து, ஐ.சி.எஸ்., தேர்வில், வெற்றி பெற்றார். மாநில கலெக்டர் பதவிக்கு சமமான பட்டப்படிப்பு அது.

இந்திய விடுதலைக்காக, அப்பட்டத்தையே பிரிட்டிஷ் அரசிடம் திரும்ப கொடுத்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குஜராத்திலுள்ள ஹாரிபுரா என்ற ஊரில், 1938ல் நடந்த, அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜியின் ஆசியோடு, காங்கிரஸ் தலைவராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 41. பிரிட்டிஷாரிடமிருந்து, இந்தியாவை மீட்க, வன்முறையை நாடவும் தயங்கக் கூடாது என்கிற நேதாஜியின் கருத்துக்கு, காந்திஜி போன்றோர், உடன்படவில்லை.

இரண்டாவது உலகப் போர் துவங்கிய நேரம். நேதாஜியின் இள ரத்தம் சூடேறியது. அமைதியான வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தர முடியாது என உணர்ந்தார். காங்கிரஸ் மேல்மட்டத் தொடர்புகளை அறுத்துக் கொண்டு, ஜெர்மனிக்கு சென்று, ஹிட்லரை சந்தித்தார்.

ஜெர்மனி தலைநகரான பெர்லினில், லட்சியக் கனவுகளோடு உலவிக் கொண்டிருந்த சுபாஷ் சந்திரபோசுக்கு, ஜப்பானிய அரசின் அழைப்பு, உத்வேகத்தை கொடுத்தது. ஹிட்லர் உதவியுடன், ஜப்பானுக்கு சென்றார். ஜப்பானிய பிரதமர் தேஜோவையும், மற்ற ராணுவ உயர் அதிகாரிகளையும், சந்தித்தார். பிறகு, அண்டை நாடுகளான பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் பயணம் செய்து, இந்திய சுதந்திரத்திற்காக, அவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடினார். ஜூலை26 1943ல் பாங் காங்குக்கும், ஜூலை 30ம் தேதி பர்மாவிற்கும் சென்று அங்கு, இந்திய தேசிய ராணுவ படையை ஏற்படுத்தினார். ராணுவப் படையில் புதிதாக சேர்ந்தவர்களில், 95 சதவிதத்தினர் தமிழர்கள்.

அக்., 21, 1943ல், மாலை 4.15க்கு சிங்கப்பூர், கத்தே மண்டபத்தில், சுதந்திர இந்திய தற்காலிக அரசு அமைத்திருப்பது பற்றி, பிரகடனப்படுத்தினார் நேதாஜி. இந்தியாவின் காங்கிரஸ் மகா சபையின் கொடியாக உள்ள, மூவர்ண கொடியையே, இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக, பறக்க விட்டார் நேதாஜி.

சிங்கப்பூரில் இயங்கி வந்த தேசிய ராணுவ தலைமையகத்தை, பர்மா தலைநகர் ரங்கூனுக்கு ஜனவரி 7, 1944ல் மாற்றினார். இப்படை, மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் வழியாக, இந்தியாவினுள் நுழைய, திட்டம் வகுக்கப்பட்டது.

பிப்.,4, 1944ல், 'டில்லி சலோ...' கோஷத்தை முழங்கிக் கொண்டே, இந்தியாவின் வடகிழக்கு எல்லையில், பிரிட்டிஷ் ராணுவத்தினரோடு, போர் புரிந்தவாறு முன்னேறியது. ஆனால், பிரிட்டிஷாரின் படையை எதிர் கொள்ள முடியாமல், திரும்பியது.

ஆகஸ்ட் 6, 1945ல் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவிலும், தொடர்ந்து ஆகஸ்ட்9ல் நாகசாகி நகரிலும், அமெரிக்கா, சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட்டு, அந்நகரங்களை அழித்தவுடன், ஆகஸ்ட்15ல் யுத்தத்தை நிறுத்தி, சரணடைய முன் வந்தார் ஜப்பானிய சக்ரவர்த்தி. அச்சமயம், நேதாஜி சிங்கப்பூரில் இருந்தார். கனவுகள் கை கூடாத நிலையில், ஆகஸ்ட் 16, 1945ல் மிகுந்த துயரத்தோடு, சிங்கப்பூரை விட்டு, வெளியேற முடிவெடுத்தார் நேதாஜி.

சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என உணர்ந்த நேதாஜி, தன் நண்பர்களுடன், விமானத்தில், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் பயணமானார். ஆகஸ்ட் 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு, தன் சகாக்களுடன் பாங்காக்கிலிருந்து, இந்தோ சீனா தலைநகரான, செய்கோனை நோக்கிப் புறப்பட்டார். செய்கோன் விமான நிலையத்தில் இருந்து நேராக, நண்பர் நாராயணதாஸ் இல்லம் சென்றார். அவரது சகாக்களும் உடன் சென்றிருந்தனர். அங்கு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.

செய்கோனிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருப்பதாக, தொலைபேசி தகவல் கிடைத்தது. தன்னுடைய மெய்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானை மட்டும் அழைத்துக் கொண்டு, தன் சகாக்களிடமும், நண்பர்களிடமும் பிரியா விடை பெற்று, மாலை, 5:15 மணிக்கு விமானத்தில் புறப்பட்டார்.

இந்தோசீனாவிலுள்ள, குரையின் என்ற ஊரில் விமானம் இறங்கியது. அங்கு, அன்றிரவு தங்கினர். மறுநாள் காலை, ஆகஸ்ட்18 விமானம், டோக்கியோவை நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல், 2:00 மணிக்கு, பார்மோசா தீவிலுள்ள ததஹோ என்ற ஊரில் இறங்கியது. சரியாக 35 நிமிடம் கழித்து, மீண்டும் பறக்கத் துவங்கியது. 300 அடி உயரம் கூட பறந்திருக்காது. நேதாஜி பயணம் செய்த அந்த விமானத்தில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, சற்றும் எதிர்பாராத வகையில், கீழே விழுந்ததில், விமானம் தீப்பிடித்துக் கொண்டது.

நேதாஜியும், மெய்க்காப்பாளர் கர்னல் ஹபிபுர் ரஹ்மானும், தீக்காயங்களோடு, ராணுவ மருத்துவமனைக்கு, உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆக.,18ம் தேதி, 1945 இரவு 11:00 மணிக்கு, நேதாஜியின் உயிர் பிரிந்தது.

* நேதாஜி, இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின், தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், படை திரட்டுவதிலும், ராணுவத்திற்கு தேவைப்படும் பொருட்களை சேகரிப்பதிலும், இயக்கத்திற்கு வேண்டிய பணம் திரட்டுவதிலும் ஈடுபட்டார். நேதாஜியின் வசீகர சக்தி, எராளமான பணத்தை திரட்டித் தந்தது. தனி நபர், பெரும் தொகையை திரட்டிக் காட்ட முடியும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் நேதாஜி. ஐ.என்.ஏ., இயக்கம், நேதாஜியின் மறைவுக்கு பின் செயலிழந்தது. நேதாஜி திரட்டியிருந்த நிதியில் ஒரு பகுதி, ஜப்பானிய அரசிடம், நீண்ட காலம் வரை இருந்தது. 1994ல், 140 கோடி ரூபாயை இந்திய அரசுக்கு, ஜப்பானிய அரசு கொடுத்து விட்டதாக, மார்ச் 8, 1994-ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அந்தத் தொகை, நற்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

* நேதாஜி தலைமை தாங்கிய இந்திய தேசிய ராணுவத்தில், 'முதல் மாதர் பிரிவும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாதர் பிரிவுக்கு, 'ஜான்சி ராணி ரெஜிமென்ட்' என்று, பெயரிடப்பட்டிருந்தது. ஜான்சிராணி படைக்கு தளபதியாக, டாக்டர் லட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.






      Dinamalar
      Follow us