PUBLISHED ON : ஜன 05, 2020

உலகில், சில இடங்களில், ஆண்டின் முதல் தேதி, அவரவர் காலண்டர்களுக்கு ஏற்ப மாறும். ஆனால், நம்பிக்கைகளும், அது சார்ந்த எதிர்பார்ப்புகளும் ஏராளம்.
எண்களில் நம்பிக்கை கொண்டவர்கள், ஐரோப்பிய நாடான, எஸ்டோனியா மக்கள். இதனால், புத்தாண்டு விருந்தை, அன்று, 7, 9, 12 தடவையாக சாப்பிடுவர்.
மறக்காமல், ஒரு பகுதியை மீதம் வைப்பர். அவர்களுடைய மூதாதையர்கள், அன்று பூமிக்கு வந்து, அவற்றை சாப்பிட்டு, அதிர்ஷ்டம் வர வாழ்த்திச் செல்வர் என்பது நம்பிக்கை.
ஐரோப்பிய நாடான, போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினாவில், பாதர் ப்ராஸ்ட், அன்று வந்து, குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்கி செல்வதாக நம்புகின்றனர்.
ரஷ்யாவில், புத்தாண்டு துவங்கும் முன், 12 விநாடிகள், மவுனம் சாதிப்பர். அந்த நேரத்தில், புது ஆண்டில், சாதிக்க விரும்பும், ஆசைகளை ரகசியமாய் மனதுக்குள் கூறி கொள்வர்.
சீனாவில், புத்தாண்டு அன்று, கத்தியை எடுத்து மறைத்து வைத்து விடுவர். கத்தியால் காயம் ஏற்பட்டால், புது ஆண்டு முழுவதும் வரும் அதிர்ஷ்டத்தில் பாதிக்கு, பிரச்னை வந்து விடுமாம்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில், உருகு நிலையில் உள்ள ஈயத்தை ஊற்றுவர். அது என்ன வடிவம் பெறுகிறதோ, அதை வைத்து அதிர்ஷ்டத்தை தீர்மானிப்பர்.
உதாரணமாக, இதயம் அல்லது மோதிரம் போல் வந்தால், திருமணம் நடக்கும். படகு மாதிரி வந்தால், பயணம். பன்றி உருவம் வந்தால், ஆண்டு முழுவதும், உணவுக்கு பஞ்சமிருக்காது என நம்புகின்றனர்.
கிழக்காசிய நாடான கொரியாவில், புத்தாண்டின் முதல் நாளை, 'சோல் - நால்' என, அழைப்பர். புது ஆண்டின் முதல் நாளன்று, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில், துடைப்பம், சல்லடையை கட்டி வைப்பர். இதனால், ஆவிகள் மிரண்டு ஓடி விடுமாம்.
அன்று, புத்தாடை முக்கியம். குறிப்பாக, சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் ஆடைகள் அணிந்தால், அன்று மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்குமாம்.
தென் அமெரிக்க நாடான ஈக்வெடாரில், ஒரு பக்கம், சோளக்கொல்லை பொம்மையை வைத்து எரிப்பர். மற்றொரு பக்கம், கடந்த ஆண்டு எடுத்த புகைப்படங்களை எரிப்பர். இப்படி செய்தால், அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது, இவர்களது நம்பிக்கை.
—ஜோல்னாபையன்.