PUBLISHED ON : மார் 29, 2020

அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, காசிநாதன் துாங்கி எழுந்தபோது, காலை, 6:00 மணி. அதிகாலை, 3:00 மணிக்கு மேல் தான் கொஞ்சம் துாங்கினான். இன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் தினமும், காலை, 5:00 மணிக்கு கதவை திறந்து விட வேண்டும்.
இன்னும் சிறிது நேரத்தில், பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட வருவாள், ஒரு பெண்.
டீ சாப்பிட வேண்டும் போல் தோன்ற, கதவை திறந்து, வெளியே சென்றான். அப்போது, சிலரிடம் விலாசத்தை கேட்டு சரி பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், இவனை நோக்கி வந்தான்.
''அண்ணே... இங்க, அழகு சுந்தரம்னு யாராவது இருக்காங்களா... இந்த விலாசம் தானேண்ணே,'' என்றான்.
சற்று குள்ளமாய், பருத்த முகத்துடன், வெள்ளை நிறமாய், பார்ப்பதற்கு, ஹிந்திக்காரன் மாதிரி இருந்தான். நன்றாக தமிழ் பேசினான்.
'அழகு சுந்தரமா... அவரையும் தேடி ஒருவன் வந்திருக்கிறானே...' என, யோசித்த காசிநாதனுக்கு, வந்தவனுக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.
கடந்த, 15 நாட்களுக்கு முன், அழகு சுந்தரம் காணாமல் போனதில், இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் நடந்த பேச்சுகள், விவாதங்கள் அத்தனையும், காசிநாதன் நினைவுக்கு வந்தன.
அன்று வெளியே சென்ற, அழகு சுந்தரம் திரும்பவில்லை.
மறுநாள் காலை, அனைவரும் கூடினர்.
எங்கே போயிருப்பான் என்று யாராலும், சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், அனைவருக்கும் ஏதோ பதற்றம் இருந்தது.
'நா அப்பவே நெனைச்சேன். இதுமாதிரி முன் பின் தெரியாதவங்களை உள்ளே விட்டதே தப்பு... சொன்ன வேலையெல்லாம் செய்யறான்னு, எடம் குடுத்தீங்க...' என, ஆர்மிக்காரர் தான் முதலில் பேசினார்.
'இப்படி திடீர்னு காணாமப் போவான்னு யாருக்குத் தெரியும்?' என்றார், ஒருவர்.
'போறவன் சொல்லிட்டா போவான்... இது எல்லாம், புது மாதிரி மோசடி... அவன் பின்னாடி எத்தனை பேர் இருக்காங்களோ?' என்றார், மற்றொருவர்.
இதைக் கேட்டதும், அனைவருக்கும் வயிற்றில், 'ஜிலீர்' என்றது.
'மாமியே, நம்பிக்கையோட அழைச்சுட்டு வந்தாங்களேன்னு, நாங்களும் எதுவும் விசாரிக்காம இருக்க சொல்லிட்டோம்... இருந்தவரை நல்லாத்தானே இருந்தான்...'
'பிளான் பண்ணி உள்ளே வந்தவன், நல்லவனாக தான் நடிப்பான். மாமி, இன்னும் கொஞ்சம் யோசனை பண்ணியிருக்கணும்...' என, ஒவ்வொருவரும் கருத்து கூறி, செண்பக மாமியின் தலையை உருட்டத் துவங்கினர்.
மாமிக்கு வியர்த்துக் கொட்டியது.
'சும்மா, 'வளவள'ன்னு பேசாம, மொதல்ல, எல்லாரும் வீட்டுக்குள்ளே போய் நகை, பணமெல்லாம் பத்திரமா இருக்கான்னு பாருங்க... மொபைல் போன், வாட்ச் எல்லாத்தையும் பாருங்க...' என்றார், ஆர்மிக்காரர்.
முதல் மாடியில் குடியிருந்த ஒருவள், 'ஐயோ... ரெண்டு நாள் முன், ஒரு கல்யாணத்துக்கு, நகையெல்லாம் போட்டுட்டு போயி, திரும்ப வந்து கழட்டி பெட்டியில வைக்கும்போது, அழகு சுந்தரம் பார்த்துட்டே நின்னான். என் நகையெல்லாம் இருக்குமான்னு தெரியலியே...' என, அலறினாள்.
இரண்டாவது தளத்தில் குடியிருந்தவள், 'நா, பீரோ சாவிய எங்க வெப்பேன்னு அவனுக்குத் தெரியுமே...' என, பதறினாள்.
செண்பகம் மாமிக்கு, வயிற்றை புரட்டியது.
'கணவரின், 'கிட்னி ஆபரேஷனு'க்காக பணம் சேர்த்து, அதை வங்கியில் போடாமல், மரப் பெட்டியில், துணிகளின் நடுவே வைத்திருப்பதை, அழகு சுந்தரம் பார்த்திருப்பானோ? 'எதுக்கு மாமி, அந்த கனமான பெட்டிய அடிக்கடி தொறக்கறீங்க'ன்னு, கேட்டானே... ஈஸ்வரா... அவருக்கு, யாராவது, 'கிட்னி' குடுத்து, 'ஆபரேஷன்' செய்யணும்னா, பணத்துக்கு என்ன பண்ணுவேன்...' என, புலம்பினாள்.
எல்லாரும் பதறியபடி ஓடினர். நல்லவேளை, யார் வீட்டிலும் எதுவும் காணாமல் போகவில்லை. அத்தனையும் வைத்தது, வைத்தபடி இருந்தது.
அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போலீசுக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இரண்டு நாட்கள், அழகு சுந்தரத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசி, கலைந்தனர்.
அவரவர்களுக்கு ஒரு வேலை, கவலை என்று, நாட்கள் அன்றைய இயக்கத்திற்கு தயாராய் இருந்தன. ஆனால், காசிநாதனுக்கு மனம் ஆறவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன், செண்பகம் மாமி, தன் கணவரை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரும்போது, கைகளில் இரண்டு கனத்த பைகளுடன், அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தான், அழகு சுந்தரம்.
செண்பகம் மாமியின் கணவருக்கு, 'கிட்னி' பழுதானதால், அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். இரட்டை நாடி சரீரமான, செண்பகம் மாமிக்கு, ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியாத நேரங்களில் பலவிதங்களில் உதவி இருக்கிறான், அழகு சுந்தரம்.
அவனைப் பற்றி விசாரித்ததில், உறவு என்று சொல்ல யாரும் இல்லை. இருந்த ஒரே உறவான, கூடப் பிறந்தவனும், பெற்றவர்களுக்குப் பின் இருந்த வீட்டை, அவன் பெயருக்கு மாற்ற, இவனிடம் கையெழுத்து வாங்கி, விரட்டியதும் தெரிந்தது.
வெறுப்பில், ஊரை விட்டு கிளம்பி
வந்து விட்டான்.
'என் பெயருக்கும், முகத்துக்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால், யாரும் வேலை கொடுப்பதில்லை...' என்பான்.
செண்பகம் மாமிக்கு இரக்கம் வந்து, தனக்கு, உதவியாய் இருப்பான்; ரெண்டு வேளை சோறு போட்டு, வராண்டாவில் படுக்க வைக்கலாம் என, கணக்குப் போட்டு அழைத்து வந்தாள்.
செண்பகம் மாமியின் இந்த செயல், குடியிருப்பில் பாதி பேருக்கு பிடிக்கவில்லை. மீதி பேர், நமக்கு எதற்கு வம்பு என்று விலகி நின்றனர்.
'முன் பின் தெரியாதவனை எல்லாம் அழைச்சிட்டு வந்து, உதவி, அது, இதுன்னு பேசறீங்க. அவன் சொல்ற கதையெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு... 10 குடும்பம் இருக்கற இடம்... நாளைக்கு ஏதாவது தப்பா நடந்தா, நீங்க தான் பொறுப்பு. அவன, உங்க வீட்டோட வெச்சுக்குங்க... அனாவசியமா, அங்க இங்க நடமாடக் கூடாது...' என, எதிர்ப்பை காட்டினார், ஆர்மிக்காரர்.
எப்படியோ, அழகு சுந்தரம் உள்ளே வந்தான். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பான். வேலை இல்லாத இரவு நேரங்களில், காசிநாதனுடன் பேசுவான்.
தினமும் இரண்டு பேராவது, அவன் பெயரைக் கேட்டு, 'அழகு சுந்தரம்' என்று சொன்னதும், கேலியாய் சிரித்துச் செல்வது வழக்கம். இதைப் பற்றியெல்லாம் அவன் நினைப்பதில்லை. சிறு வயது முதலே இதெல்லாம் பழகி விட்டது.
அடுத்து வந்த நாட்களில் இதெல்லாம் மாறிப் போனது. செண்பகம் மாமிக்கு, அவன் உதவியதைப் பார்த்து, மற்றவர்களும் அவனிடம் சின்னச் சின்ன வேலைகளை செய்ய கூறினர்.
'அழகு... இந்த துணியெல்லாம் வெளில நிக்கற, 'அயன்' வண்டிக்காரன்கிட்ட குடுத்துடு...'
'அழகு... கொஞ்சம் மேலே வாயேன்; 'கிச்சன் சிங்க்' அடைச்சிருக்கு... வந்து பாரேன்...' என, இப்படி ஆரம்பித்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பு மொத்தத்திற்கும், முழு நேர வேலைக்காரனாய் மாறினான். தினமும் ஒரு வீட்டில், சாப்பாடு ஏற்பாடாயிற்று.
செண்பகம் மாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்போதாவது புலம்புவாள்.
இரண்டாவது மாடியில் இருந்த, ஒரு பாட்டியை, தினமும், அரை மணி நேரம் கீழே அழைத்து வந்து, கைத்தாங்கலாய் பிடித்து நடக்க வைப்பான். அறையிலேயே அடைந்து கிடந்த பாட்டிக்கு, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
இன்னொரு தம்பதியர், நான்கு நாட்கள் வெளியூர் சென்றபோது, வயதான மாமனாரை, அழகு சுந்தரம், அடிக்கடி மேலே வந்து கவனித்துக் கொண்டதில், அவர்களுக்கு மகிழ்ச்சி.
இதைப் பற்றியெல்லாம், காசிநாதன், அவனிடம் கேட்டால், மவுனமாய் இருப்பான். ஆனால், மறக்காமல், அடிக்கடி, அவர் மகளின் கண் பார்வை பற்றியும், பார்வை கிடைக்க ஏதாவது வழி கிடைத்ததா என்றும் கேட்பான்.
'என்றோ ஒரு நாள் சொன்னதை மனதில் வைத்து, மறக்காமல் கேட்கிறானே...' என்று நெகிழ்ந்து போனான், காசிநாதன்.
அழகு சுந்தரம், அங்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அன்று இரவு துாக்கம் கலைந்தவன், மெதுவாக வெளியே வந்தான்.
உடல் நிலை சரியில்லாததால், துாங்கி விட்டான், காசிநாதன்.
அழகு சுந்தரம் மெல்ல உலாத்தினான். கட்டடமே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. முதல் மாடியில், ஆர்மிக்காரரின் அறையில் மட்டும் விளக்கு எரிந்தது. ஏதோ முனகல் சத்தம்.
வேகமாய் படியேறி, அவர் அறையை அடைந்து கதவை தட்டினான், அழகு சுந்தரம். சிறிது நேரத்தில், தாழ்ப்பாள் விலக்கும் ஒலி கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது, நெஞ்சை பிடித்து, தரையில் கிடந்தார், ஆர்மிக்காரர்.
உடனே, '௧௦௮' ஆம்புலன்சுக்கு போன் செய்தான், அழகு சுந்தரம். அடுத்த அரை மணி நேரத்தில், ஆர்மிக்காரர் காப்பாற்றப்பட்டார். ஊரிலிருந்து, அவர் மகள் வரும் வரை, அவருக்கு உதவியாய் இருந்தான்.
இது நடந்து, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.
அதன் பிறகு தான், அழகு சுந்தரம் காணவில்லை. அதற்கு, அத்தனை பேரும் சேர்ந்து அலறி, அவரவர் வீட்டை புரட்டிப் பார்த்து, ஒன்றும் களவு போகாததால், 'அப்பாடா...' என்று பெருமூச்சு விட்டனர். இரண்டு, மூன்று நாட்கள், அவனை பற்றி பேசி, மாய்ந்து, ஓய்ந்த நேரத்தில் தான்...
பழைய நினைவுகளிலிருந்து கலைந்தான், காசிநாதன்.
விலாசம் கேட்டு நின்றவன், திரும்பவும் இவனிடம் கேட்டான்.
''அழகு சுந்தரம்... இந்த விலாசம் தான் குடுத்திருக்காரு...''
''அவரை பத்தி என்ன தெரியணும்... அவர், இங்கே இல்ல,'' என்றான், காசிநாதன்.
''அதான் சார்... அவருக்கு, 'ஆக்சிடென்ட்' ஆகி, மருத்துவமனையில இருக்கார். கடைசியாய் பேசினபோது குடுத்த விபரத்துல, இந்த விலாசம் இருந்தது. போன் நம்பர் எதுவும் இல்ல. பெரிய டாக்டர், என்னை அனுப்பி, தகவல் சொல்லச் சொல்லி, அவருக்கு உறவு யாராவது இருந்தா வரச் சொன்னாரு,'' என்றான்.
இதைக் கேட்டதும், பதறிய காசிநாதன், உடனே, செண்பகம் மாமியிடம் போய் விஷயத்தை சொன்னான்.
பயத்தில் அலறினாள், செண்பகம் மாமி.
''அய்யயோ... இது என்ன வம்பு. அவனுக்கும், எனக்கும், எந்த உறவும் இல்லே... இத ஏன் எங்கிட்ட வந்து சொல்றே... எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு சொல்லு,'' என்றாள்.
அதற்குள் விபரம் தெரிந்து, ஒவ்வொருவராய் வந்து விட்டனர்.
'இது என்ன புது பிரச்னை. அவன் எங்கோ ஊருக்குப் போயிருப்பான்னு
நெனச்சா... 'ஆக்சிடென்ட்' அது, இதுன்னு...'
'அதானே... இப்ப போலீசு, மருத்துவமனைன்னு, யார் அலைவாங்க... ஏதோ இல்லாதவனா இருந்தானேன்னு, கொஞ்சம் இடம் குடுத்தா... மருத்துவமனை செலவு, அது, இதுன்னு பிரச்னை பெரிசால்ல இருக்கு...'
'அவன் ஊரு, உறவு எதுவும் தெரியாது. நம் விலாசத்தை குடுத்திருக்கானே... அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா, யார் பொறுப்பு எடுக்கறது...' என, ஒவ்வொருவரும் கூறினர்.
மருத்துவமனைக்கு யார் பணம் கட்டுவது என்ற பயத்திலும், அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால், தங்கள் தலையில் பொறுப்பு வந்து விழுந்து விடுமோ என்ற கலக்கத்திலும், வார்த்தைகள் வெளியே விழுந்து கொண்டிருந்தன.
''இப்படி எல்லாரும் புலம்புவதில், எதுவும் ஆகாது. வீட்டுக்கு ஒருத்தர் போய், என்ன, ஏதுன்னு விசாரிக்கலாம். டாக்டருக்கு நாம மரியாதை கொடுக்கணும். அங்கே போனதும், 'அவனுக்கும், நமக்கும், எந்த உறவும் இல்லே. அவன் எதுவும் இல்லாம இங்க வந்ததாலே, அனாதையா தான் இருக்கணும்'ன்னு, சொல்லிட்டு வந்துடலாம். மேற்கொண்டு அவங்க பார்த்துப்பாங்க,'' என, கூறினார், ஆர்மிக்காரர்.
அவர் பேச்சில் கொஞ்சம் சமாதானமாகி, வீட்டுக்கு ஒருத்தராய் கிளம்பினர்; காசிநாதனும் உடன் சென்றான்.
அவனைப் பற்றி, விபரமாய் விளக்கினார், அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவர்.
''விபத்தில் அடிபட்டு, 15 நாட்களுக்கு முன், பொதுமக்கள் சிலரால் இங்கு சேர்க்கப்பட்டான். அவசர சிகிச்சை அளித்ததும், நினைவு இருந்த கொஞ்ச நேரம் பேசியதில், 'எனக்கு ஏதாவது நேர்ந்தால், என் உடலை, இந்த மருத்துவமனை எடுத்துக் கொள்ளட்டும். அதில், 'கிட்னி'யை, செண்பகம் மாமியின், கணவருக்கும்; கண்களை, காசிநாதனின் மகளுக்கும் பொருத்தி விடுங்கள்...' என, முழு மனதாய் கூறி, விலாசத்தை கொடுத்தான்.
''சட்டென்று கோமாவிற்கு சென்றபோது, சிகிச்சை அளிக்க முற்பட்டதில், மூளைச்சாவு அடைந்திருப்பது தெரிந்தது. இனி, சிகிச்சையால் பலனில்லை என்பதால், உங்களுக்குத் தெரியப்படுத்தினோம். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் போல் தெரிகிறது. எனவே, உங்களில், அவனுக்கு, யார் உறவு என்று தெரிந்தால், கையெழுத்து தேவைப்படும்,'' என்றார்.
அனைவரும், மவுனமாய் தலை குனிந்தனர். யாருக்கும் பேச்சு வரவில்லை. யார் கையெழுத்து போடுவது என்று குழம்பினர். காசிநாதன், முன் வந்தான்.
''ஐயா... அவன், என் உறவுக்காரன் தான். அவனுக்காக, நான் கையெழுத்து போடறேன். கடைசியா ஒருமுறை, அவனை பார்க்க முடியுமா?'' என்று கேட்டபோது, அவன் குரல் உடைந்து, வார்த்தை தடுமாறியது.
டாக்டர் சம்மதிக்க, காசிநாதன் சென்றான்; மற்றவர்களும், அவன் பின்னே சென்றனர்.
கண்ணாடி வழியாய், அழகு சுந்தரத்தை பார்த்தபோது, காசிநாதனுக்கு அவனது உண்மையான அழகு தெரிந்தது.
ஆர். சாந்தா
