தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நேர்கோட்டில் நவக்கிரகம்!

நேர்கோட்டில் நவக்கிரகம்!

நேர்கோட்டில் நவக்கிரகம்!


PUBLISHED ON : மார் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகனின் கையில் வேல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வேலுக்கு பதிலாக, அமிர்த கலசம் ஏந்திய திருக்கரத்துடன் அவரை காண வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு, குழகேசர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், இங்கே, நவக்கிரகங்கள் வழக்கமான பாணியில் திசை மாறி இல்லாமல், ஒரே திசை நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு!

இலங்கைக்கு செல்லும் முன் இங்கு வந்தார், ராமபிரான்; இவ்வூரிலிருந்து கடல் வழியே சென்றால் இலங்கையை விரைவில் அடையலாம் என்பதால், இங்கிருந்து பாலம் அமைத்து, இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான், சுக்ரீவன். ஆனால், இங்கு பாலம் அமைக்க மறுத்து விட்டார், ராமர்.

இலங்கையின் பின்வாசலாக, கோடியக்காடு அமைந்திருப்பதால், பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது, தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்று விட்டார், ராமபிரான். அவர் வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில், இங்கு, ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை செல்லும்போது, இங்குள்ள சிவபெருமானை வணங்கினார், ராமர். அதனால், இங்குள்ள சிவனுக்கு, குழகேசர் என்றும், அமிர்தகடேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயு பகவான், அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, சிறிதளவு அமுதம் சிந்தியது. அதை, ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார், முருகபெருமான். அக் கலசத்துடன் இக்கோவிலில் காட்சி தருகிறார், முருகன். இவரை, அமிர்தகட சுப்பிரமணியர் என்கின்றனர்.

அமிர்தத்துடன் உள்ள இவரை வணங்குவோருக்கு ஆயுள் விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட, அஞ்சனாட்சி எனப்படும் மையார்தடங்கண்ணி அம்பாளுக்கே முக்கியத்துவம் உண்டு. கோடியக்காடு, காட்டுப் பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக, 'காடு கிழாள்' என்ற வன தேவதையும் அருள்பாலிக்கிறாள்.

இக்கோவிலில், மற்றொரு வித்தியாசமான அம்சம், நவக்கிரகங்கள்... மற்ற கோவில்களைப் போல் அல்லாமல், நேர்வரிசையில் ஒரே திசை நோக்கி இருக்கிறது. இதற்கு காரணம், இவ்வூருக்கு வருகை தந்த அகத்தியருக்கு, சிவ - பார்வதி தங்கள் திருமணக்கோல தரிசனம் தந்தனர். அந்த கோலத்தைக் காண்பதற்காக, கிரகங்கள் தங்கள் திசையை மாற்றி நேராக நின்றன. இதன் அடிப்படையில், இங்கு நவக்கிரகங்கள் நேர்வரிசையில் அமைக்கப்பட்டன.

இந்த பழமையான கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில், 9 கி.மீ., தொலைவில் கோடியக்காட்டில் உள்ளது.

கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம்பள்ளியில், அகஸ்தியர் வணங்கிய, அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து, 2 கி.மீ., துாரத்திலுள்ள கடலே இக்கோவிலின் தீர்த்தம். சுவாமி சிலையில் இருந்து புறப்படும் வெப்பக்கதிர்கள் இந்த கடல்நீரில் பாய்வதால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடல்நீர் கதகதப்பாகவும், சற்று தள்ளி, தண்ணீர் குளிர்ச்சியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள குன்றின் உச்சியில், ராமர் பாதம் உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில், குரங்குகள், மான், மிளா போன்றவையும் அவ்வப்போது சாலைக்கு வந்து வேடிக்கை காட்டும்.

இங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில், கோடியக்கரை கடற்கரை உள்ளது. இங்கு, சோழர்காலத்தில் கட்டப்பட்ட பாழடைந்த கலங்கரை விளக்கம் உள்ளது. அதன் அருகிலேயே, புதிய கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டுள்ளது.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us