sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கூந்தல் வளர விளக்குமாறு காணிக்கை!

/

கூந்தல் வளர விளக்குமாறு காணிக்கை!

கூந்தல் வளர விளக்குமாறு காணிக்கை!

கூந்தல் வளர விளக்குமாறு காணிக்கை!


PUBLISHED ON : அக் 01, 2017

Google News

PUBLISHED ON : அக் 01, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறுநாட்களில் ஒரு நாள் மட்டும் நள்ளிரவில் காட்சி தரும் சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டையில் அருள்புரிகிறார். கூந்தல் நீளமாக வளர, இவருக்கு தென்னங்கீற்றாலான விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர், பெண்கள்.

வான் கோபர், மகா கோபர் என்ற முனிவர்களுக்கு, 'இல்லறம் - துறவறம் இதில் எது சிறந்தது...' என்ற சந்தேகம் வந்தது. தீர்ப்பு சொல்லும்படி சிதம்பரம் நடராஜரிடம் வேண்டினர். அவர்களை, பரக்கலக்கோட்டையில் காத்திருக்கும்படியும், அங்கு வந்து தீர்ப்பு வழங்குவதாகவும் கூறினார், நடராஜர். அதன்படி இங்கு வந்த இரு முனிவர்களும், ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர்.

கார்த்திகை மாத திங்கட் கிழமையன்று, சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பின், இங்கு வந்த சுவாமி, வெள்ளால மரத்தின் கீழ் நின்று, இருவருக்கும் பொதுவாக, 'இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தலே சிறப்பு...' என்று தீர்ப்பு கூறினார். பின், வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். பொதுவான தீர்ப்பு சொன்னதால், 'பொது ஆவுடையார்' என்றும், 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

திங்கட்கிழமை நள்ளிரவில் சுவாமி இங்கு வந்ததால், இக்கோவில், திங்களன்று நள்ளிரவு திறந்து, விடிவதற்குள் நடை சாத்தப்படும். மற்ற நாட்கள் கோவில் திறக்காது. தைப்பொங்கலன்று மட்டும் அதிகாலையில் இருந்து இரவு, 7:00 மணி வரை நடை திறந்திருக்கும். ஏனெனில், அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழும். சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை மற்றும் அன்னாபிஷேகம் என, எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடுவதில்லை.

சிவனே, பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு அம்பிகை உள்ளிட்ட எந்த பரிவார மூர்த்திகளும் கிடையாது. இங்கிருக்கும் புளிய மரத்தின் கீழ், அலங்காரத்துடன் வான்கோபரும், துறவி கோலத்தில் மகாகோபரும் இருக்கின்றனர். இக்கோவிலில், முடி நீளமாக வளர்வதற்காக, தென்னங்கீற்றால் ஆன, விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர், பெண்கள். இவ்வாறு செய்வதால், தென்னங்கீற்று போல, முடி நீளமாக வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திங்கட்கிழமை நள்ளிரவில் பூஜை முடிந்த பின், சுவாமியை தரிசிக்க வந்தவர்களில் யார் வயதில் முதிர்ந்தவரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதத்தை கொடுத்து, மரியாதை செய்கின்றனர். அப்போது, அவரிடம் ஒரு ரூபாய் மட்டும் காணிக்கையாக வாங்குகின்றனர். இதை, காளாஞ்சி என்கின்றனர்.

மற்றவர்களுக்கு அபிஷேக சந்தனம், வெற்றிலை, பாக்கு தருவர். பின், அன்னதானம் நடைபெறும்.

சிவன், வெள்ளால மர வடிவில் உள்ளதால், லிங்கம் கிடையாது. கோவில் திறக்கும் போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில், சந்தன காப்பு சாத்தி, சிவலிங்கம் போல் அலங்காரம் செய்கின்றனர். அப்போது, சன்னிதிக்குள் இருக்கும் மரத்தை காண முடியாதபடி, சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுவர்; நமக்கு லிங்க வடிவம் மட்டுமே தெரியும். ஆலமரத்திற்கு முன், சிவன் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் வரும் நான்கு சோமவாரத்திலும், நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில், பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

தஞ்சாவூரில் இருந்து, 50 கி.மீ., தூரத்தில் உள்ளது, பட்டுக்கோட்டை; இங்கிருந்து, 12 கி.மீ., தூரம் சென்றால், பரக்கலக்கோட்டையை அடையலாம்.

தி.செல்லப்பா






      Dinamalar
      Follow us