PUBLISHED ON : செப் 18, 2016

'முன் ஏர் செல்லும் வழியில் தான், பின் ஏர் செல்லும்' என்பது முதுமொழி.
வடமாநிலங்களில் ஜாட் என்று ஓர் இனத்தவர் உண்டு. இவ்வினத்தை சேர்ந்தவன், தன்னா என்ற ஐந்து வயது சிறுவன்.
இவன் வீட்டிற்கு, ஒருநாள், வேதியர் ஒருவர் வந்தார். அவர், அருகில் இருந்த கிணற்றுக்கு சென்று, நீராடி, தன்னிடம் இருந்த சாளக்கிராமக் கல்லை எடுத்து பூஜை செய்ய ஆரம்பித்தார். அவர் சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் செய்து முடித்து, சந்தனம் இட்டு, பூக்களால் அர்ச்சித்து, தூபம் காட்டிய பின், நைவேத்தியம் செய்தார்.
அவை அனைத்தையும், அவர் அருகில் இருந்து பார்த்த தன்னா, 'சுவாமி... நீங்கள் வழிபடும் தெய்வம் இதுதானா...' என, மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான்.
'ஆம்...' என்றார், வேதியர்.
'அப்படியானால், இந்தச் சாமியை எனக்கு தாருங்கள்...' என வேண்டினான்; வேதியர், மறுத்தார்.
ஆனால், அதைக் கேட்டு, அடம்பிடித்து, கீழே விழுந்து புரண்டு அழத் துவங்கினான், தன்னா. இதனால், கீழே கிடந்த சிறு கருங்கல் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அதை, அவர் வணங்கும் சாளக்கிராமக் கல் என நினைத்த சிறுவன், மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான்; வேதியர் செய்தது போலவே அக்கல்லுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தவன், தாயார், தனக்கு உண்பதற்காக கொடுத்த ரொட்டிகளை நைவேத்தியம் செய்து, கண்களை மூடி, தியானம் செய்ய துவங்கினான்.
சற்றுநேரம் கழித்து, 'சாமி என் நைவேத்தியத்தை சாப்பிட்டிருப்பார்...' என நினைத்து, கண்களை திறந்து பார்த்தான்; ரொட்டிகள் அப்படியே இருக்கவே, 'நாம் செய்த பூஜையில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது; இல்லாவிட்டால், சாமி சாப்பிட்டிருப்பார். அவர் சாப்பிடாததை, நாமும் சாப்பிடக் கூடாது...' என்று எண்ணி, ரொட்டிகளை, அருகில் இருந்த வயலில் எறிந்தான்.
மறுநாளும் அக்கல்லிற்கு பூஜை செய்தான். அன்றும் அவன் படைத்த ரொட்டிகளை தெய்வம் உண்ணவில்லை. திகைத்து போன தன்னா, ரொட்டிகளையெல்லாம் வயலில் எறிந்து, 'சாமி என் கையில் இருந்து வாங்கி சாப்பிடாத வரை, நானும் சாப்பிடப் போவதில்லை...' என்று சொல்லி, அன்றிலிருந்து உண்ணாமலிருந்தான்.
ஆறு நாட்கள் கடந்த நிலையில், பாலக பக்தனின் பிடிவாதத்தின் முன், பகவான் பிடிவாதம் தளர்ந்தது; அவனுக்கு காட்சியளித்த இறைவன், தன்னாவின் எதிரில் அமர்ந்து சாப்பிட்டார். தன்னாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'பகவானே... எல்லாவற்றையும் நீயே சாப்பிட்டு விட்டால், நான் என்ன செய்வது...' எனக் கேட்டான்.
'இதோ... உனக்கும் ஒன்று வைத்திருக்கிறேன் பார்...' என்ற பகவான், அங்கிருந்து மறைந்தார். அன்றிலிருந்து அந்நிகழ்ச்சி தொடர்ந்தது.
வளர்ந்து வாலிபன் ஆனான், தன்னா.
ஒருநாள், தன் வயலில் விதைப்பதற்காக, ஒரு மூட்டை கோதுமை விதைகளை கொண்டு போனான். வழியில், பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடிச் செல்ல, அவர்களோடு சேர்ந்து தானும் ஆடிப்பாடி மகிழ்ந்ததுடன், தன் கையிலிருந்த கோதுமை விதைகளை, 'அவர்களின் உணவுக்கு உதவட்டும்...' என்று நினைத்து, கொடுத்து விட்டு, வயலுக்கு சென்றான். அங்கு போய் உழுத பின் தான், விதை இல்லையென்பதை உணர்ந்து, வீடு திரும்பினான்.
நாட்கள் சென்றன; அனைவரும் ஆச்சரியப்படும்படியாக, மற்ற வயல்களை விட, தன்னாவின் வயலில் பயிர் செழுமையாக வளர்ந்திருந்தது.
ஆம்; அவன் விதைக்காமலேயே தன்னாவின் வயலில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன.
பெரியவர்கள் என்ன செய்கின்றனரோ, அதைத்தான் சிறியவர்களும் செய்வர். பூஜை செய்த ஒருவரை பார்த்து, தானும் அப்படி செய்ய விரும்பி, உயர்ந்த நிலையை அடைந்த தன்னாவின் வரலாறு நமக்கொரு பாடம்!
பி.என்.பரசுராமன்
