
சிறு பருப்பு பிரதமன்!
தேவையான பொருட்கள்: குழைய வேக வைத்த பாசிப் பருப்பு - அரை கப், வெல்ல துாள் - 100 கிராம், கெட்டி தேங்காய் பால் - ஒரு கப், ஏலக்காய் துாள் - கால் தேக்கரண்டி, முந்திரி, திராட்சை - தலா 10, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டு - 4 தேக்கரண்டி, நெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் வேக வைத்த பாசிப் பருப்பை சேர்த்து கிளறவும். பிறகு வெல்ல கரைசல், ஏலக்காய் துாள் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் தேங்காய் பால் கலந்து உடனே இறக்கவும். வறுத்த, முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
புளி சேரி!
தேவையான பொருட்கள்: மாம்பழம் ஒன்று கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்; தேங்காய் துருவல் - ஒரு கப், மிளகு - 4, சீரகம் - ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 விழுதாக அரைத்துக் கொள்ளவும். தயிர் - ஒரு கப், சிறிதளவு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள் துாள் - கால் தேக்கரண்டி, வெல்லம் சிறிதளவு. கடுகு, உளுத்தம் பருப்பு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாம்பழ துண்டுகளுடன் மஞ்சள் துாள், வெல்லம், மிளகாய் விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.
அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, புளிசேரியுடன் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சிறிய குண்டு மாம்பழங்களின் தோலை உரித்து, அப்படியே சேர்த்து செய்யலாம்.
கூட்டுக்கறி!
தேவையான பொருட்கள்: நேந்திரன் வாழைக்காய் ஒன்றை, தோல் சீவி துண்டுகளாக்கவும். தோல் சீவி நறுக்கிய சேனைக் கிழங்கு துண்டு - கால் கப், கறுப்பு கொண்டை கடலை - 50 கிராம், மஞ்சள் துாள் - கால் தேக்கரண்டி, மிளகாய் துாள், மிளகு துாள், கடுகு - தலா அரை தேக்கரண்டி, நெய் - 3 தேக்கரண்டி, தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - 2 தேக்கரண்டி, சிறிதளவு கறிவேப்பிலை.
செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி, அதனுடன் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து இறக்கவும். தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில், வாழைக்காய், சேனை கிழங்கு துண்டுகளுடன் மஞ்சள் துாள், தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். அதனுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மிளகு துாள், உப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு, அரைத்த விழுது, வேக வைத்த கொண்டை கடலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கூட்டு கறியுடன் கலந்து பரிமாறவும்.

