PUBLISHED ON : நவ 20, 2011

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் ஒரு வினோத பழக்கம், உலகம் முழுவதும் உள்ள, விலங்குகள் நல ஆர்வலர்களின் கவனத்தை, அந்த நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. இங்கு, தாகா உள்ளிட்ட நகரங்களில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, இவர்கள் காளி பூஜை என்ற பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றனர். பண்டிகை நாளில், ஆமைக் கறியை சமைத்து, கடவுளுக்கு படையலிட்ட பின், அவற்றை சாப்பிடுவது இவர்களின் வழக்கம்.
குறிப்பிட்ட அந்த நாளில், தாகாவில் உள்ள இறைச்சிச் சந்தை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஆயிரக்கணக்கானோர், கைகளில் பைகளுடன், சந்தைக்கு வந்து, ஆமைக் கறியை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக, அந்த ஒரு நாளில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள், அங்குள்ள இறைச்சிக் கடைக்காரர்களால் கொல்லப்படுகின்றன.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, இறைச்சிக் கடைக்காரர்கள், ஆமைகளை உயிருடன் கயிற்றில் கட்டி தொங்க விடுவதும் உண்டு. சில வியாபாரிகள், தங்கள் கடைகளுக்குள்ளேயே, அவற்றை சுதந்திரமாக <உலா வர விடுகின்றனர். ஆமைகள் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவற்றின் கண்களை குருடாக்குவதுடன், கால்களையும் வெட்டி விடுகின்றனர். ஒரு கிலோ ஆமைக் கறி, 60 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ஆமை, பெரிய ஆமை, கடல் ஆமை, குளத்து ஆமை என, பல வகைகள் உள்ளதால், அவற்றின் ருசியை பொறுத்து, விலை நிர்ணயிக்கப்படுகிறது.
'காளி பூஜை அன்று, ஆமைக் கறி படைய லிடுவது ஏன்?' என, அங்குள்ளவர்களிடம் கேட்டால், 'வீரத்துக்கு பெயர் பெற்ற கடவுள் காளி. எனவே, உடல் வலிமை பெறுவதற்காக, ஆமைக் கறியை சாப்பிடுகிறோம். அதற்கு முன்பாக, கடவுளுக்கு அவற்றை படைய லிடுகிறோம். இந்த கறியில், மருத்துவ சக்தியும் உண்டு...' என, பதில் அளிக்கின்றனர்.
ஆமைக் கறிகள் விற்பனை செய்யப்பட்டவுடன், சந்தை முழுவதும், அவற்றின் ஓடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றையும் மருந்து தயாரிப்பதற்காக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். பதப்படுத்தப்பட்ட ஓடுகளில் இருந்து, இனவிருத்தி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆமைகளை கொல்வதற்கு, வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ஆனாலும், கடவுள் தொடர்பான விஷயம் என்பதால், நமக்கேன் வம்பு என, ஆமை இறைச்சி விறு, விறுப்பாக விற்பனையாவதை, அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் அதிகாரிகள்.
***
சி. சண்முகநாதன்
