
சென்னையில் உள்ள முன்னணி தமிழ் பத்திரிகை அலுவலகத்தில், செய்தி துறையில் நானும், டில்லியில், எங்கள் பத்திரிகையின் நிருபராக பணியாற்றும் சேகரும் செய்தி தொடர்பாக, தினமும் பலமுறை, போனில் பேசினாலும், எப்போதாவது தான், சொந்த விஷயங்களைப் பேசுவோம். அப்படி தான் ஒருநாள், அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை, திருநெல்வேலி பாஷையைப் போன்று இருந்ததால், 'சார்... உங்களுக்கு எந்த ஊர்?' எனக் கேட்டேன்.
'தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிற தாழையூத்து...' என்றார்.
'சார்... நீங்க தாழையூத்துக்காரரா... நானும் தாழையூத்து தான்...' என்றேன் சந்தோஷத்துடன்!
'அப்படியா...' என்று ஆச்சரியப்பட்டவர், 'அங்க, நீங்க எந்த தெரு?' என்று கேட்டார்.
என் ஜாதியை அறிந்து கொள்ளும் ரகசிய யுக்தி இது என, புரிந்து கொண்டேன். பெரும்பாலும், திருநெல்வேலிக்காரங்க இப்படித் தான் பிறரின் ஜாதியை தெரிந்து கொள்வர்.
'சார்... நான் பிறந்தது மட்டும் தான் தாழையூத்து; அப்பா, அங்க போஸ்ட் மாஸ்டரா இருந்தார். நான் சின்னப் புள்ளயா இருக்கயிலேயே எங்க அப்பாவுக்கு செய்துங்கநல்லூருக்கு மாற்றலாயிடுச்சு. அதுக்குப் பின், நாங்க தாழையூத்துக்கு போகவே இல்ல. இப்ப, அப்பா இறந்துட்டாரு. செய்துங்கநல்லூரில இருக்குற சொந்த வீட்டில தம்பிக கூட அம்மா இருக்காங்க...' என்றேன்.
'பாருங்க சார்... நீங்களும், நானும் ஒரே ஊர்ல தான் பொறந்திருக்கோம்; ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்றோம். இது தெரியாமலே, இத்தனை வருஷம் இருந்துட்டோமே...' என்றார் நெகிழ்ந்த குரலில் சேகர்.
'உங்களுக்கு எத்தனை பசங்க சார்...' என்றேன் பேச்சை தொடரும் ஆவலில்!
'ஒரே பையன் தான்; சென்னையில தான் இருக்கான். சென்னையிலும் சொந்த வீடு இருக்கு. ஐ.டி., கம்பெனி ஒண்ணுல பெரிய பதவியில இருக்கான். நானும், என் மனைவியும் டில்லியில இருக்கோம். மனைவி, வங்கி அதிகாரியா இருக்கா. அடுத்த வருஷம், ரிடையர்மென்ட். அதனால, சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கோம். எப்படியும் கிடைச்சுடும்ன்னு நினைக்கிறோம்...' என்றவர், 'உங்களுக்கு எத்தனை குழந்தைங்க சார்... வீட்டில, வேலைக்கு போறாங்களா?' என்று கேட்டார்.
'இல்ல சார்... மனைவி, 'ஹவுஸ் ஒய்ப்' தான்; ரெண்டு புள்ளைங்க; மூத்தவன் ஆங்கில இலக்கியம் கடைசி வருஷம் படிக்கிறான்; பொண்ணு பிளஸ் 2...' என்றேன்.
'திருநெல்வேலிக்கு போறது உண்டா?' என்று கேட்டார்.
'போகாம இருக்க முடியுமா... அம்மா, தம்பிங்க, மாமனார்ன்னு எல்லாரும் அங்கே தானே இருக்காங்க. வருஷத்தில ஆறேழு முறை குடும்பத்தோடு போவோம். மே மாதம், 10 நாட்கள் லீவு போட்டுட்டு போயிடுவேன். அப்புறம், நல்லது, கெட்டதுன்னு வேற இருக்குல்ல...' என்றேன்.
அடுத்த நாளிலிருந்து அலுவலக விஷயம் பேசும்போதெல்லாம், தான் பிறந்த மண்ணின் பெருமையை பற்றி, சில நிமிடங்கள் பேசுவார் சேகர்.
ஒருநாள், 'சுந்தரம்... என் மனைவிக்கு, சென்னைக்கு, டிரான்ஸ்பர் கிடைச்சுடுச்சு. அடுத்த வாரம் சென்னைக்கு வர்றோம். 30 வருஷ, டில்லி பந்தம், இன்னும் ஒரு வாரத்தில முடிவடையப் போகுது. எனக்கும், சென்னை ஆபீசுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சுருச்சு. அடுத்த வாரம், நாம சென்னையில சந்திப்போம்...' என்றார் உற்சாகமாக!
பத்து நாட்கள் சென்றிருக்கும்... அன்று, அலுவலகத்தில் நுழைந்த நான், வயதான ஒரு குண்டு நபர், என் இருக்கை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து, 'சேகராக இருக்குமோ...' என நினைத்தபடி, இருக்கை அருகே சென்ற போது, தலையை தூக்கிப் பார்த்தவர், 'வணக்கம், சுந்தரம்... நான், சேகர்...' என்றார்.
'சார்... எப்படி சார் இருக்கீங்க?' என்றேன் சந்தோஷத்துடன்!
'ஆண்டவன் புண்ணியத்திலும், பாஸ் கருணையினாலும் நல்லா இருக்கேன்...' என்றார்.
அதற்கு பின் வந்த நாட்களில் அவருடன் பழகியதில், அவர் மிகவும் சிக்கனக்காரர்; அவசியம் இல்லாமல், ஐந்து பைசா செலவு செய்ய மாட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.
நிறம் மங்கிய பழைய சட்டை, பேன்ட்டுகளைத் தான் மாற்றி மாற்றி அணிந்து வருவார். காலையில், 9:00 மணிக்கு அலுவலகம் வந்தால், இரவில், 9:00 மணிக்குத் தான் வீட்டுக்கு செல்வார். மதிய சாப்பாட்டிற்கு, பெரும்பாலும், சின்ன டப்பாவில், மூன்று சப்பாத்திகளும், கொஞ்சம் காய்கறியும் தான் கொண்டு வருவார்
இதுபற்றி அவரிடம் கேட்டால், 'விதவிதமா சாப்பிட ஆசை தான்; ஆனா, அதுக்கு வழியில்லயே... காலை, 8:30 மணிக்கு ஆபீஸ் போற என் மனைவி, திரும்ப, ராத்திரி, 9:30 மணிக்குத் தான் வருவா. 35 வருஷமா, இப்படித் தான் எந்திரம் போல, வேலை பாத்துட்டு இருக்கோம்...' என்றார்.
அவரிடம் கேட்க வேண்டும் என, பல நாட்களாக மனதில் அழுத்திக் கிடந்த கேள்வியை, கேட்டு விட்டேன்...
'சார்... நீங்க, 60 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குறீங்க; உங்க மனைவியும் உங்கள விட கூடுதலாகத் தான் சம்பளம் வாங்குவாங்க. பையனோ, ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குறார். ஆனாலும், நீங்க ஏன், இப்படி பழைய சட்டை, பேன்ட் போட்டு, உயிரே இல்லாத சாப்பாட்டை சாப்பிட்டு, பஸ்சில ஆபிசுக்கு வர்றீங்க... இப்படி பணத்தை சேர்த்து வச்சு, என்ன செய்யப் போறீங்க... நல்லா சாப்பிட வேண்டியது தானே...
'டில்லி மற்றும் சென்னையிலும் உங்களுக்கு சொந்த வீடு இருக்கு. ரெண்டும் குறைந்தபட்சம், ஐந்து கோடி ரூபாய்க்கு மேலேயே போகும். பையனுக்கும் நல்ல வேலை இருக்கு. பின் ஏன் சார், இப்படி கஞ்சத்தனமா இருக்கீங்க...' என்றேன்.
'சுந்தரம்... இதுல மறைக்கிறதுக்கு ஒண்ணும் இல்லே; நீங்க சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான். ஒருநாள் இதப் பத்தி நாம விரிவா பேசுவோம்...' என்றார்.
அதன் பின் வந்த நாட்களில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், அவருக்கு என் வீட்டில் விருந்து அளிக்க முடிவு செய்து, அதுகுறித்து, அவரிடம் தகவல் சொன்னபோது, 'திருநெல்வேலி சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது... கண்டிப்பாக வர்றேன்...' என்றார்.
அவரிடம் பலமுறை பேசியதிலிருந்து, அவருக்கு மிகவும் பிடித்தமானவை என அறிந்திருந்த திருநெல்வேலி பதார்த்தங்களான, அவியல், சிறுகிழங்கு பொரியல், தக்காளி வெண்டைக்காய் பச்சடி, முருங்கைக்காய் பொறியல், முறுக்கு வத்தல் குழம்பு, தேங்காய் அரைத்து விட்ட சாம்பார், பூண்டு ரசம், கூழ் வத்தல், நெல்லிக்காய் ஊறுகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு போட்ட மோர், பயித்தம் பருப்பு பாயசம், அப்பளம் போன்றவற்றை என் மனைவியிடம் சமைக்க சொல்லியிருந்தேன்.
மதியம் பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கிய சேகரை, என் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
விருந்தில், தலைவாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்து, இலையின் இடது முனையில் உப்பு வைத்து, அதன் அருகில், பொறித்த முறுக்கு வத்தல் வைத்து, ஒரு வெல்லத் துண்டும் வைத்த என் மனைவி, அடுத்தடுத்து, காய்கறி வகைகள், கூட்டுகளை பரிமாறியதைப் பார்த்து அவர் முகம் மலர்ந்தது.
ஒவ்வொரு கூட்டு, கறிக்கும், பழைய கால கதையை சொல்லியவாறே சாப்பிட்டார்.
மதிய சாப்பாட்டுக்குப் பின், சிறிது நேரம் கண்ணயர்ந்தார்; மாலையில், இருவரும் மெரீனா கடற்கரைக்கு சென்றோம்.
அவரே பேச்சை துவக்கினார்...
''சுந்தரம்... அன்னக்கி நீங்க, நான் ஏன் இவ்வளவு சிக்கனமா இருக்கேன்னு கேட்டீங்கள்ல... இப்போ சொல்றேன்... நான் சிக்கனமாக இருக்கிறது, என் சுயநலத்துக்காகத் தான். இப்போ, எனக்கும், என் மனைவிக்கும் 60 வயசாகுது. இன்னும், நாலைந்து வருஷத்துக்கு பின், எங்களால சுறுசுறுப்பா இயங்க முடியாது. அப்போ, எங்கள கவனிச்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அதனால, நானும், என் மனைவியும் கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு முதியோர் இல்லத்துல சேரப் போறோம். ஒரு ஆளுக்கு, 20 லட்சம் ரூபா கேட்கிறாங்க; எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து, 40 லட்சம் ரூபா தேவைப்படுது. கொஞ்சம் கொஞ்சமா அந்த, 40 லட்சத்தை சேர்த்தாச்சு. வீடுக ரெண்டும் மகனுக்கு போயிடும்.
''அதோட எனக்கு ஒரு கடமையும் இருக்கு; என் தம்பி, இங்க, சென்னையில சாதாரண வேலை பார்த்துட்டு, கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அவனுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க. மூத்த பெண்ணை நான் தான் கட்டிக் கொடுத்தேன்; ரெண்டாவது பெண்ணுக்கு, வரன் பாத்துட்டு இருக்கோம். அதுக்கு குறைந்தபட்சம், 10 லட்சம் ரூபா ஆகும்.
''என்னைப் போலவே, என் மனைவியும், அவ தம்பி குடும்பத்தை பாத்துக்கிறா. சின்ன வயசுலேயே அவளோட தம்பி இறந்து போயிட்டதாலே தன் தம்பி புள்ளைங்கள படிக்க வைக்கிறா. அதனால தான், ரெண்டு பேருமே ரொம்ப சிக்கனமா இருக்கோம்,'' என்றார்.
''சார் கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு இருக்குறது ஒரே பையன்; உங்க ரெண்டு பேரையும் விட, அவன் அதிகமா சம்பளம் வாங்குறான். இன்னும் கல்யாணம் வேற ஆகல; இதுல, எதுக்கு அதுக்குள்ள முதியோர் இல்லம் போகணும்ன்னு நினைக்கிறீங்க... உங்க பையனோட சேர்ந்து வாழ விருப்பம் இல்லயா?'' என்று கேட்டேன்.
''எங்களுக்கு விருப்பம் இருந்து என்ன பிரயோசனம்... அவனுக்கு தான் பெத்தவங்க என்கிற பாசமே இல்லையே! 'இந்தியாவே வேணாம்; அமெரிக்கா போகப் போறேன்'னு சொல்லி, அதுக்காக முயற்சித்துக்கிட்டுருக்கான். அவன் எங்கள அமெரிக்காவுக்கு கண்டிப்பாக கூட்டிட்டு போக மாட்டான்; நாங்களும் அவனுடன் ஒட்டிட்டு போகத் தயாரில்ல. அதனால் தான், முதியோர் இல்லத்துக்கு போயிரலாம்ன்னு முடிவு செய்துட்டோம்,'' என்றார்.
''நீங்க முதியோர் இல்லத்துல சேரப் போறது உங்க பையனுக்கு தெரியுமா?'' என்று கேட்டேன்.
''அவன் தான், கோயபுத்தூர்ல இருக்குற ஒரு முதியோர் இல்லத்துக்கு போய் பாத்துட்டு வந்து, 'இது உங்களுக்கு வசதியா இருக்கும்'ன்னு சொன்னான்...'' என்றார்.
இதைக் கேட்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
''சார்... புள்ளைங்கள பெறுறது இப்படி வயசான காலத்தில, முதியோர் இல்லத்தில நம்மள சேக்கவா... பெத்தவங்களுக்கு, புள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கும் போது, புள்ளைங்களுக்கு மட்டும் அந்தக் கடமை இல்லயா? இதுக்குத் தான், புள்ளைங்க சின்னக் குழந்தையாக இருக்கும் போதே, சாப்பாட்டுடன் நல்ல அறிவு, ஒழுக்கம், படிப்பு கற்றுக் கொடுக்குறதோட, அவங்களோட எதிர்கால கடமைகளையும் சொல்லிக் கொடுக்கணும்.
''எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும் பெத்தவங்கள காப்பாற்ற வேண்டியது அவங்க கடமைங்கிறதை உணர்த்தணும். 'நீ எங்கே போனாலும், நாங்களும் உன்னோடு தான் வருவோம்'ன்னு சின்னப் புள்ளையிலே இருந்தே சொல்லி வளர்த்திருந்தா, உங்க பையனுக்கு அது மனசில பதிஞ்சிருக்கும். நீங்க அதைக் கற்றுக் கொடுக்காததால் தான் இப்போ உங்களுக்கு இவ்வளவு மனக் கஷ்டம்,'' என்றேன்.
''இதெல்லாம் முன்பே தெரியாமல் போயிடுச்சு சுந்தரம்... குழந்தைக்கு, படிப்பு, வேலை, நல்ல எதிர்காலம் கிடைக்கணுங்கிறது தான் எங்களோட நோக்கமாக இருந்துச்சு. அதுக்காகத் தான் ரொம்ப கஷ்டப்பட்டு, வாயை கட்டி, வயித்தைக் கட்டி, பெரிய கல்வி நிறுவனங்கள்ல படிக்க வெச்சு, உயர்ந்த வேலையில் சேர்த்து விட்டோம்.
''அப்போதெல்லாம், நாங்க, எங்களப் பற்றி கவலைப்படல. இப்போ எங்களப் பற்றி நினைக்கும் போது, முதியோர் இல்லம் தான் கண் முன்னே தெரியுது. என்ன செய்ய... இது தான் எங்க விதி,'' என்றார்.
''அப்போ, உங்க மகனுக்கு கல்யாணம் ஆகி, மருமகள், பேரக் குழந்தைகளோட வாழ விருப்பம் இல்லயா?'' என்று கேட்டேன்.
''அது எப்படி விருப்பம் இல்லாம இருக்கும்... சின்னக் குழந்தைகளப் பாத்தா, கொஞ்சி மகிழ என் மனசு துடிக்குது. ஆனா, கொடுத்து வைச்சிருக்கணுமே...'' என்றார் விரக்தியுடன்!
''சார்... நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா...'' என்றேன்.
தலையை ஆட்டியபடி, ''சொல்லுங்க... சுந்தரம்...'' என்றார்.
''உங்க கூட சேர்ந்து வாழ, உங்க மகன் விரும்பலைங்கிறதுக்காக நீங்க முதியோர் இல்லம் போகணுமா... உங்களுக்குத் தான் அண்ணன், தம்பி, தங்கை குழந்தைங்க, அவங்களோட பேரக்குழந்தைகள்ன்னு தாழையூத்து மற்றும் சென்னையிலேயே நிறையப் பேர் இருக்கிறாங்க. அதே மாதிரி உங்க மனைவிக்கும் நிறைய உறவுகள் இருக்காங்க. நீங்க அவங்கள அரவணைச்சுக்கலாம்; வாடகை வீட்டில வசிக்கிற உங்க தம்பி மகனை, உங்க வீட்டில சேர்த்துக்கலாமே...
''நான்கு படுக்கையறை கொண்ட உங்க வீட்டில, குறைந்தபட்சம், 20 பேர் வசிக்கலாம். நெருங்கிய உறவுக நான்கைந்து பேரை உங்களுடன் சேர்த்துக்கங்க. அவங்களுடன் நல்லது, கெட்டது என, எஞ்சியிருக்கும் வாழ்க்கைய உறவுகளுடன் கழிக்கலாமே...
''உங்க வீட்டில வேலை செய்ற பொண்ணோட குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்யுங்க. அந்தக் குழந்தைகள, உங்க பேரக் குழந்தைகளா பாவியுங்க. ஒரு மாற்றமாக, நீங்க இப்படி செய்து பாருங்களேன்...'' என்றேன்.
அதிகமாக பேசுகிறோமோ என எண்ணியபடி அவரின் முகத்தைப் பார்த்தேன். அவரின் மனதில் மாற்றங்கள் ஏற்படுவது, முகத்தில் தெரிந்தது.
''இதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா, நீங்க பிறந்த ஊர்ல, உங்களுடன் படிச்ச, ஒன்றாக ஊர் சுற்றிய பலரும் இன்னமும் அங்கே தான் இருக்காங்க. நீங்க நினைச்சா, அவங்களோட இணைஞ்சு புதுவாழ்வை துவக்கலாம். விரும்பியபடி, திருநெல்வேலி உணவு வகைகளை சாப்பிட்டு மகிழலாம்.
''இன்ணொண்ணு சொல்லட்டுமா சார்... நீங்க பிறந்து வளர்ந்த, இத்தனை உயர்ந்த நிலைமைக்கு வரக் காரணமான தாழையூத்துக்கும், திருநெல்வேலிக்கும் நீங்க என்ன கைமாறு செஞ்சுருக்கீங்க... அதை நினைச்சு, எஞ்சியுள்ள காலத்துல, சில ஆண்டுகளாவது உங்க ஊருக்கு போய், உங்க செல்வாக்கை பயன்படுத்தி, நாலு பேருக்கு நல்லது செய்யுங்க; அதுக்கு நீங்க, முதியோர் இல்லம் போறதை விட, திருநெல்வேலி போறது தான் சரியாக இருக்கும்,'' என்றேன்.
கண் கலங்க, என் முதுகில் தட்டிக் கொடுத்த சேகரின் முகம், அவர் மனம் மாறியிருந்ததை தெளிவாக காட்டியது.
''சுந்தரம்... நீங்க சொல்றது தான் சரி; இது வரை நான் இப்படி யோசிச்சுப் பாத்ததில்ல. கையில, 50 லட்சம் ரூபா இருக்கு. இதை வைச்சுட்டு, சென்னையில இருக்க விரும்பல; இனி, முதியோர் இல்லத்திற்கும் போகப் போறதில்ல. இந்தப் பணத்தை வைச்சு, திருநெல்வேலிக்கு அருகே இடம் வாங்கி, கட்டடம் கட்டி, கஷ்டப்படும் நெருங்கிய உறவுகள், நண்பர்களை சேர்த்து, அவர்களுடன் கடந்த, 40 ஆண்டு காலம் வாழாத வாழ்க்கையை, சாப்பிடாத சாப்பாட்டை, அனுபவிக்காத காற்றை, உணராத உறவுகளை மீண்டும் உணரப் போறேன்.
''இதை, என் மனைவிகிட்ட சொல்லி, என் புதிய வாழ்க்கையை உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கழிக்கப் போறேன்; போதும், தலைநகரங்களின் வாழ்க்கை,'' என்றார்.
என் மனதிற்குள், இனம்புரியாத நிம்மதி ஏற்பட்டது.
ஏ.மீனாட்சிசுந்தரம்