PUBLISHED ON : ஜூலை 13, 2014

ஆனந்தின் விழிகள், சோர்வில் தானாகவே மூடிக் கொண்டன. இரவு முழுக்க உறக்கமில்லை. அப்படியே, தன்னை அறியாமல் கண் அயர்ந்த போதும், குழப்பமான கனவுகள். அதுவும், கனவா அல்லது ஆழ் மனக் கவலையின் கற்பனையா என்று தெரியவில்லை.
காபியுடன் வந்த கவிதா, அவன் தூக்கம் கொள்ளாமல் புரண்டு புரண்டு படுப்பதை, கவலையுடன் பார்த்து, திரும்பிப் போவது தெரிந்தது. சிறிது நேரத்திலேயே, ''அப்பா...'' என்று கூறியவாறு, அருகில் வந்து நின்றாள் மகள் சாரு.
''குட் மார்னிங் சாரும்மா,'' என்று, புன்னகையை வரவழைத்துக் கொண்டான்.
''அப்பா அப்பா... எனக்கு இந்த புத்தகம் வேணும்பா... வாங்கித் தரியா?'' என்று, தினசரியில் வந்த ஒரு புத்தக விளம்பரத்தை சுட்டிக் காட்டி, கேட்டாள்.
அவன் சட்டென்று நிமிர்ந்து குழந்தையைப் பார்த்தான். ஒரு கணம் இமைகளில் ஈரம் படர்ந்து விட்டதை பார்த்து விட்டாள் சாரு.
''அப்பா... அழறியா... ஏம்பா?'' என்றாள், அவன் கை பற்றி.
அப்போது, அறைக்குள் வந்த கவிதா, ''ஏங்க அழறீங்களா என்ன?'' என்று, அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் சுதாரித்து, மனைவியையும், குழந்தையையும் பார்த்து, மெல்ல முறுவலித்தான்.
''நான் ஏன் அழப்போறேன்... இந்த மாதிரி முத்துகள் என் கூடவே இருக்கும்போது,'' என்றான்.
''சரிப்பா... சாயந்திரம் இந்த புத்தகத்தை வாங்கிட்டு வந்துடு,'' என்று கூறி, சாரு எழுந்து வெளியே ஓடிவிட்டாள். கவிதா அருகில் அமர்ந்து, ''ஏங்க ஏதும் பிரச்னையா... எல்லாம் நல்லாத்தானே போய்ட்டிருக்கு,'' என்று, அவன் கன்னம் தொட்டு கேட்டாள்.
அவன் மறுப்பாக தலையசைக்கவும், மகள் அழைக்கும் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஆனந்தின் மனம் ஏதேதோ எண்ணத் தொடங்கியது. 'பிரச்னை இருக்கத் தான் செய்கிறது. செங்கல் செங்கலாக வைத்து கட்டிய பிசினஸ். பிரேக் பிடிக்காத டூவீலரில் தெருத் தெருவாக சுற்றி, விற்பனைப் பிரதிநிதியாக மருத்துவர்கள், கிளினிக்குகள், கடைகள் என்று, தலை சுற்ற அலைந்த நாட்கள். நிற்க வைத்தே பேசுகிற மருத்துவமனை ரிசப்ஷனிஸ்டுகள். ஒரு சிங்கிள் டீ சாப்பிட்டு வருவதற்குள், டாக்டர் கூப்பிட்டு விடப் போகிறாரே என்று, பசியும், தலை வலியுமாக மூடிய கதவின் வெளியில் மணிக்கணக்காக நின்ற தருணங்கள்.
'டார்கெட் என்னவாச்சு, பட்ஜெட் ஏன் உதைக்குது...' என்று, பிய்த்துப் பிடுங்கிய மருந்துக் கம்பெனிகள். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகும், 'ஒரு நிமிஷம் தான், அதுக்கு மேல நேரமில்லை...' என்று கடுப்படித்து, அந்த ஒரே நிமிடத்தில், மாத்திரைகளின் நிவாரண எல்லை வரை மூச்சு விடாமல் விவரித்தும், 'சாரி இப்பத்தான் இதே காம்பொனண்ட்ல ஒரு மருந்து வந்தது... அடுத்த தடவை பாக்கலாம்...' என்று, ஒரு முறுவலைக் கூட தராத எத்தனையெத்தனை மருத்துவர்கள்! ஈரப் பார்வைகளற்ற காலங்கள்.
மழையின் சாயலே காணப்படாத, வறண்ட பாலைவன இரவுகள். தூக்கம் பிடிக்காமல் நெஞ்சம் கதறும். விடியலே இல்லாத இருளுக்குள், அடிமை வாழ்க்கை, இன்னும் எத்தனை காலத்திற்கு என்று, வெட்டுப்பட்ட, உணர்வுகள் கதறும்... அவனையறியாமல் ஒரு ஆழ்ந்த பெரு முச்சு வந்தது.
வீட்டில் இருந்த ஒரே உறவான பெரியம்மா, கல்யாணப் பேச்சை ஆரம்பித்தபோது தான் அவன் முழுமையாகத் தெளிவடைந்தான். 'தெருத் தெருவாய் அலைகிற இந்த நாய்ப் பிழைப்பை விட்டு, வெளியில் வந்தால் தான் கல்யாணம்....' என, தீர்மானித்தான்.
அடுத்த அலைச்சல் ஆரம்பமானது. ஆனால், இது, உற்சாகத்தைக் கொடுத்தது. சொந்தத் தொழில் துவங்க, கடன் கேட்டு வங்கி வங்கியாக அலைகிற அலைச்சல். தனக்கே தனக்கான ஓட்டம். வங்கி கேட்ட அத்தனை சர்டிபிகேட்டுகளையும் ஓடி ஓடி அலைந்து, வாங்கினான்.
பாரீஸ் கார்னரில், பத்துக்கு பத்து அறையில், முதல் முதலாக அம்மா படத்தை வைத்து விளக்கேற்றி, முதல் ஆர்டரை அவள் பாதத்தில் வைத்து, கண்களில் ஒற்றிக் கொண்டபோது, இமைகளின் ஈரத்தில் காகிதம் நனைந்தது.
மெல்ல மெல்ல, இந்த பத்து வருடங்களில், அங்குல அங்குலமாக நகர்ந்து கோடம்பாக்கத்தின் முக்கிய இடத்தில் பதினைந்து ஊழியர்கள், பதினெட்டு கணினிகள், உபகரணங்கள், ஆர்டர்கள், தேடல்கள், ஆர்வங்கள் என்று வளர்ந்து நிற்கிறது. ஆனால்... இப்போது, ஏதோ நடக்கிறது.
ஆர்டர்களில் சுணக்கம். சப்ளையர்களிடம் பழைய நெருக்கம் இல்லை. மானுமதி நெட் முதலாளி முரளிகுமார் தான் முக்கியமான கிளையன்ட். அவர் மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தையிலேயே இல்லை. யாழி டாப்லெட்ஸ் உரிமையாளர் கீர்த்திவாசன், மெயில்களுக்கு உடனுக்குடன் பதில் போடுபவர், இப்போ திரும்பியே பார்க்கவில்லை.
நேற்று சபரீஷ் பிரதர்ஸ் சபரீஷை பிரயத்தனப்பட்டு தான், தொடர்பு கொள்ள முடிந்தது. உற்சாகம் இல்லாமலே பேசினார். 'கொஞ்ச நாள் போகட்டுமே...' என்று, முடித்துக் கொள்வது போல பேசினார். அப்போது தான் உறைத்தது. 'சார்... சார்... என்ன சார் ஏன் ஒரு மாதிரி பேசறீங்க, ஏதாவது பிரச்னையா?' என்று, படபடத்தான். 'அப்படியில்லப்பா... கொஞ்சம் இடைவெளி விடலாமே. இப்ப பிசியா இருக்கேன்...' என்று அவர் துண்டித்தபோது, நெஞ்சில் முள் குத்தியதைப் போல வலித்தது.
மகளின், ''அப்பா... இட்லி, வடைகறி ரெடிப்பா... வாப்பா,'' என்ற அழைப்பைக் கேட்டு, அவன் எழுந்தான்.
காலை, 10:00 மணி; அலுவலகத்திற்குள், நுழைந்தான்.
''குட் மார்னிங் சார்,'' என்று, பத்து குரல்கள் ஒன்றாக ஒலித்தன.
''வெரி குட் மார்னிங்,'' என்று, லேசாக புன்னகைத்தபடி, அந்த அழகிய பத்து இளைய முகங்களை, புதிதாகப் பார்ப்பதைப் போல ஆழமாக பார்த்தான்.
''நாகராஜன் சார், கொஞ்சம் உள்ளே வாங்க,'' என்று சொல்லி, தன் அறைக்குப் போனான்.
'யார் அந்த கறுப்பு ஆடு... இந்த பத்துப் பேரில் ஒருவரில் தான், அந்த கறுப்பு ஆடு இருக்கிறது.
'கம்பெனியிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேறு யாருக்கோ, இந்த வியாபாரத்தை திருப்பி விடுகிறது...' என்று நினைத்தவனால், அது யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாமே இளமை துள்ளும் பால் வடியும் முகங்கள். வாழ்வின் துயர கணங்களின் சாயல் படியாத உற்சாக முகங்கள். ஒரு கொண்டாட்டமாக தினம் தினம் விடியலை சந்திக்கிற இளமைகள். அஜீத், சூர்யா, ஆர்யா, அனுஷ்கா, காஜல் என்று, தங்களை நினைத்து, கற்பனையில் வலம் வருகிற இவர்களிடம், அவனால் எப்படி நம்பியாரையும், வீரப்பாவையும் கண்டுபிடிக்க முடியும்...
''சார், சொல்லுங்க சார்,'' என்று, நாகராஜன் வந்து நின்றார்.
பிசினஸ் துவங்கிய மூன்றாம் நாளிலிருந்து, அவனுடனே இருக்கிறவர். நொடித்துப் போன பழைய தலைமுறை முதலாளி. ஆனால், பகட்டையெல்லாம் விட்டு எளிமையும், திருப்தியுமாக தனக்கு அமைந்ததை வைத்து, வாழ்கிற நல்லவர்.
''நாகு சார்... ஆபீஸ்ல ஏதாவது விசேஷம் உண்டா? எதுவானாலும் பரவாயில்லை... சொல்லுங்க.''
அவர் சிரித்துக் கொண்டே, ''ஆதியையும், மாதவியையும் பத்தியா சார் கேக்கிறீங்க,'' என்றார்.
''அது என்ன?''
''இப்பல்லாம், புதுசா சொல்றாங்களே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்ன்னு அந்த மாதிரி, அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ இருக்காம்.''
''ஓ குட்... காதல் நல்ல விஷயம். வேற ஏதாவது...''
''பரத் எம்.பி.ஏ., முடிச்சுட்டான் சார்... அதுலயும் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட். பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டியில வேலை தேடறான் போல, அப்புறம் பாவம் ஜாஸ்மின் வீட்டுல பாகப்பிரிவினைல பிரச்னையாம். கோர்ட், கேஸ்ன்னு அலைஞ்சு அவங்க அப்பாவுக்கு ஹார்ட் பிராப்ளமே வந்திருக்காம். ஸ்வீப்பர் கனகம்மாவுக்கு, 'டிவி' ஷோ செய்ய வாய்ப்பு வந்திருக்காம், ரியாலிட்டி ஷோவாம்.''
அவன் புன்னகைத் தான். ''பரவாயில்ல நாகு சார்... நல்லாவே, 'அப்டேட்டா' இருக்கீங்க... நான் எதிர்பார்க்கிறது வேற.''
''எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன். இன்னொரு விஷயம்... விஷால் டிரக்ஸ்ல இருந்து போன் வந்தது சார். ஆர்டரை நிறுத்தி வைக்கணுமாம்.''
அவன் சட்டென்று நிமிர்ந்து, அவர் கண்களையே பார்த்தான்.
''இதைத் தான் கேக்கறேன்... என்ன பிரச்னை? ஒரு மாசத்துல நாலு கிளையன்ட் நம்மை விட்டு ஓடறான். அத்தனையும் பிரமாதமான பார்ட்டிகள். ராவும், பகலும் ஓடி ஓடி பிடிச்ச காண்டிராக்ட்... கேட்ட தேதிக்கு முன்னாலேயே, நாம ஆர்டரை முடிச்சிருக்கோம்... அப்புறம் எப்படி?'' என்றான் மூச்சிரைக்க.
அவர் முகமும் உடனே இறுகியது.
''நம்மகிட்ட தான் சார் பிரச்னை இருக்கு... இங்கதான் ஒரு எட்டப்பன் இருக்கணும். கிளையன்டை திசை திருப்பி விடுறது, யாருன்னு தெரியலயே சார்...?
''மனசாட்சிக்கோ அல்லது வாங்கற சம்பளத்துக்கோ, நேர்மையா இல்லாத, அந்த கறுப்பு ஆடு எதுன்னு கண்டுபிடிக்கணும்,'' என்றான்.
''என் கண்ணுக்கு, யாருமே தப்பா தெரியலயே சார்,'' என்றார், குழப்பத்துடன்.
''கண்டுபிடிங்க சார்... உங்க வேலை அது, கடமையும் கூட... போங்க.''
சற்று தளர்ச்சியுடன், அவர் திரும்பிப் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கடற்கரைச் சாலையில், வீடு நோக்கிக் காரில் செல்கையில், ஏதோ துர் கனவும் கூடவே துரத்தி வருவதைப் போலிருந்தது.
அப்போது தான், அந்தக் காட்சி கண்ணில் பட்டது.
ஆதி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தான். ஆனால், அந்தப் பெண்... தன் அலுவலக பெண் மாதவி அல்ல! குட்டையாக, கட்டை முடியுடன், சிறிய விழிகளுடன், இவள் வேறு யாரோ! மாதவி ஒல்லியாக உயரமாக, முதுகு மறைக்கும் கூந்தலுடன், அகன்ற உதடுகளுடன் இருப்பாள். அப்படியானால், இவள் யார்? அலுவலக நாளின் மாலையில், காலியான அலுவலகத்தில், ஆதியும் - மாதவியும் நெருக்கமான பார்வையில், மயங்கியிருந்ததை நானே பார்த்திருக்கிறேனே... என்ற யோசனையுடன், வீடு வந்து சேர்ந்தான்.
கவிதா, அவனுக்குப் பிடித்த சோளப் புலாவ் செய்திருந்தாள். சாரு தூங்கிக் கொண்டிருந்தாள்.
''நிறைய பூண்டு போட்டு செஞ்சது... பிடிச்சுருக்கா?'' என்றாள் கொஞ்சலாக கவிதா.
''பிரமாதம் கவிதா,'' என்றான்.
''இன்னும் கொஞ்சம் வைக்கவா?''
''இல்ல போதும்.''
தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனலில், தேனி பத்தி டாகுமென்ட்டரி படம் ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவை தயாரிக்க சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் கவிதா.
அவன் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து, 'டிவி'யை பார்த்தான். கண்கள் சோர்வுடன் மூடிக் கொண்டன.
சமையல் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக வீடு முழுவதும், மசாலா வாசம் நிரம்பியிருந்தது. தூங்கி கொண்டிருந்த மகளை எழுப்பிக் கொண்டிருந்தாள் கவிதா...
''சாரு... எழுந்திரு. மணி பத்தாச்சு, கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்கு,'' என்று குழந்தையை எழுப்பினாள் கவிதா.
''தூக்கம் வருதும்மா.''
''சொல்றேன்ல... நல்ல பொண்ணுல்ல எழுந்துருடி செல்லம்,'' என்று கொஞ்சியவள், குழந்தை எழுந்திருக்காமல், பிடிவாதாம் பிடிக்கவே, ''ஏண்டி பிடிவாதம் பிடிக்கிறே?'' என்று கடிந்து கொண்டாள்.
''ஏம்மா திட்டற... நா நல்ல பொண்ணுதானே?''
''நல்ல பொண்ணுன்னா, எல்லாத்துலயும் நல்ல பொண்ணா இருக்கணும். படிப்புல மட்டும் இருந்தா போதாது... அளவான சாப்பாடு, சரியான தூக்கம், பெரியவங்களுக்கு மரியாதை, ஜீவகாருண்யம், நேர்மைன்னு எல்லாம் இருக்கணும்,'' என்று கவிதா சொல்லிக் கொண்டே போனாள்.
வண்டியை நிறுத்தி, தன் அலுவலக மாடிக்கு படி ஏறும்போது, மனசு அமைதியாக இருந்தது. இரவு பார்த்த, தேனீக்களின் சுறுசுறுப்பு உடம்புக்குள் வந்து விட்டதைப் போன்ற உணர்வு. வேம்பின் கிளையில் அமர்ந்து, கத்துகிற குருவியின் தாள லயத்தை ரசித்தபடி, உள்ளே நுழைந்தான் ஆனந்த்.
வழக்கமா, 'குட் மார்னிங் சார்' என்ற பத்து குரல்களுக்கு, பதிலும் புன்னகையும் கொடுத்தவன், ஆதியிடம் திரும்பி, ''ஆதி, கொஞ்சம் உள்ளே வாங்க,'' என்று சொல்லி, அறைக்குப் போனான்.
சில நிமிடங்களில், கதவை மெல்ல தட்டி விட்டு, உள்ளே வந்தான் ஆதி.
''உட்காரலாமே.''
''தாங்க் யூ சார்,'' என்று உட்கார்ந்தான்.
''உடனே விஷயத்துக்குப் போயிடலாமா... இல்ல, கொஞ்சம் அரசியல், சினிமான்னு பேசலாமா?''
''என்ன விஷயம்ன்னு சொல்லுங்க சார்,'' என்றான்.
''குட்... ஆதி, ஆறு வருஷமா என் கூட இருக்கே... கம்பெனியை நீயும் வளர்த்திருக்கே, நியாயமான லாபத்தை, நாம எல்லாருமே பிரிச்சுகிட்டு சந்தோஷப்பட்டிருக்கோம். தவிர, ஒரு நாளும் நான் ஒரு எஜமானன் போலவோ, தொழிலதிபர் போலவோ, உன்கிட்ட நடந்துகிட்டதே இல்ல... சரியா நான் சொல்றது?''
''ஆமாம் சார், உண்மை.''
''தாங்க்ஸ்... அப்போ, ஏம்பா துரோகம் செய்யுற?''
திடுக்கிட்டவன், ''சார் வந்து...'' என்றான் கறுத்துப் போன முகத்துடன்.
''எனக்கு எல்லாம் தெரியும் ஆதி. இனி நீ எதையும் மறைக்க வேணாம். காலையில மூணு மணிக்கு எழுந்து, பொறுமையா எல்லா கணக்கு வழக்கு, மின்னஞ்சல், கடிதங்கள் என எல்லாத்தையும் பாத்துட்டேன்... நீ தான் நமக்கு வர வேண்டிய பிசினசை வேற வேற கம்பெனிக்கு மாத்தியிருக்க. அவங்களுக்கு, 'டிப்ஸ்' கொடுத்து, நம்ம பிட்டிங் பத்தி தகவல் கொடுத்து, சாமர்த்தியமா நம்மளை போட்டியில இருந்து நகர்த்தியிருக்கே... எதற்காக இதைச் செய்தே... இங்க என்ன குறை உனக்கு?''
தலை குனிந்தான் ஆதி. அவன் கைகளில் நடுக்கம் தெரிந்தது.
''சார்... மன்னிச்சிடுங்க சார், ஏதோ பேராசையில செஞ்சுட்டேன் சார்.''
''இல்ல ஆதி... தெரியாம செய்யறதுக்குத் தான், மன்னிப்பு கேட்க முடியும். இது அப்படியில்ல... துரோகம். இதுக்கு தண்டனை உண்டு. இனிமே, உனக்கு இங்க வேலை இல்ல. ஆனா, உன்னை அப்படியே விட மாட்டேன். இரண்டு பிரச்னைகளை நீ தீர்த்துட்டுத்தான் போகணும்... ஒண்ணு, கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யணும். அடுத்தது, மாதவிக்கு நியாயம் கிடைக்கணும்.''
''மாதவியா... என்ன சார் சொல்றீங்க?'' என்றான் தவிப்புடன்.
''நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயம் எனக்கு தெரியும். ஆனா, நீ ஆபீசுக்கு ஒருத்தி, பீச்சுக்கு ஒருத்தின்னு அலை பாயிற, உன்னை நம்புற அவளுக்கும் துரோகம் செய்றே. உன்னுடைய இந்த குணத்தால தான், நீ ஆபிசுக்கு செய்ற துரோகத்தையும் கண்டு பிடிச்சேன்.
''இதுக்கு என் பொண்டாட்டிக்குத்தான் நன்றி சொல்லணும். என் மனைவி தான், சொன்னா... 'நல்லவங்கன்னா, எல்லாத்துலயும் நல்லவங்களா இருக்கணும். ஒரு இடத்துல துரோகம், ஒரு இடத்துல நேர்மைன்னு இருக்க முடியாது. எல்லா இடத்துலயும், ஒரே மாதிரி பொழியுற மழையைப் போல, நல்லவன் எப்பவும் நல்லவனாகத்தான் இருப்பான்'னு. வெல், ஆதி உனக்கு, ஒரு நாள் டயம் தரேன். போலீசுக்கு போகணுமா, வேண்டாமான்னு நீயே சொல்லிடு, இப்ப கிளம்பு.''
அடிபட்டவனாக ஆதி துவண்டு வெளியேறினான்.
அனந்த் பழைய உற்சாகத்துடன், வேலையைத் துவங்கினான்.
வானதி
