தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 26, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை, நிதி அமைச்சர் பக்தவத்சலம்,'பேயை விரட்டுவது போல், திராவிட நாடு கேட்போரை விரட்ட வேண்டும்...' என்று சட்டசபையில் பேசினார். உடனே, கருணாநிதி குறுக்கிட்டு, 'சென்னையிலே பேய் விரட்டுவதாகக் கூறி, ஒரு பெண்ணைக் கட்டி வைத்து அடித்த பூசாரி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளது, அரசாங்கத்திற்குத் தெரியுமா?' என்று கேட்டார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழந்தையம்மாள் பேசும் போது, 'தமிழர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள், மண்ணுக்காக, பொன்னுக்காக, பெண்ணுக்காக என்று, சிறு சிறு விஷயங்களுக்காகக் கூடச் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களது ஆட்சி, மறுபடியும் வர வேண்டுமென்று, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். இந்த நாகரிகமான காலத்தில், அப்படிப்பட்ட ஆட்சி வரலாமா?' என்று குறிப்பிட்டார்.

அடுத்த நாள் பேசிய கருணாநிதி, ஒரு புத்தகத்தைக் காட்டி, 'இது தமிழ்ப்பாட புத்தகம். இதில், பொற்கை பாண்டியன் கதை இருக்கிறது. தவறாகக் கதவைத் தட்டி விட்ட பொற்கைப் பாண்டியன், தன் கையையே வெட்டிக் கொண்டு, நீதி காத்தான் என்று எழுதப்பட்டுள்ளது...

'மற்றொரு பக்கத்தில், சேர, சோழ, பாண்டியர்கள் என்று மூவேந்தர்கள், இந்நாட்டைச் சீரோடும், சிறப்போடும் ஆண்டனர் என்று, எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியவர், நேற்று இந்த சபையில் சேர, சோழ, பாண்டியர்களை பழித்துப் பேசிய, குழந்தையம்மாள் தான். 'திராவிட மணிமலர் வாசகம்' என்பது இப்புத்தகத்தின் பெயர்...' என்று பதிலடி கொடுத்தார்.

நிதி அமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில், 'தி.மு.க.,வினர், கம்யூனிஸ்ட்கள் யோசனையைக் கேட்டு நடக்க வேண்டும்' என்று கூறினார். அடுத்த நாள் பேசிய கருணாநிதி, 'நிதியமைச்சர் சொன்னதை, நேற்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே, இந்தப் புத்தகத்தைப் புரட்டினேன். இது, நம் நிதியமைச்சர் பக்தவத்சலம் எழுதிய, 'பயிற்சி மொழிகள்' என்ற புத்தகம்...

'இதில், 'கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மொழிப் பற்றும் கிடையாது - நாட்டுப் பற்றும் கிடையாது...' என்று குறிப்பிட்டு இருக்கிறார். நிதி அமைச்சர் அவர்களே... இந்தக் கம்யூனிஸ்ட்களின் யோசனை யையா கேட்கச் சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார்.

இப்படி உடனுக்குடன் பதில் அளிப்பதை கண்ட பக்தவத்சலம், சட்டசபையில் ஒருமுறை, 'கருணாநிதி நல்ல தமிழ் பாண்டித்துவம் உள்ளவர். நகைச்சுவையை, லாவகமாக உபயோகிப்பதில் வல்லவர். அதை, எல்லாராலும் அவரைப் போல் பயன்படுத்த முடியாது...' என்று பாராட்டினார்.

— முல்லை சத்தி ஒரு கட்டுரையில்.

ஒவ்வொரு கடவுளுக்கும், விருப்பமான குறிப்பிட்ட உணவு வகைகள் உண்டு என்பது, மக்களுடைய நம்பிக்கை. தமிழகத்தின் பெரிய கோவில்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு உணவுக்குப் புகழ் பெற்றவை. உதாரணமாக, பஞ்சாமிர்தத்துக்கு பழநி, புட்டுக்கு திருச்செந்தூர், அர்த்தஜாமப் பூஜையில் வழங்கும் பாலுக்கு ஸ்ரீரங்கம், திருக்கண் அமுதுக்குத் திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில், வங்கார தோசைக்கு ஆழ்வார் திருநகரி (வங்கார தோசை என்பது, அரிசி, பயறு வகைகள், தேங்காய் முதலியன சேர்த்தது. தனித்த ஒரு நளபாக முறைப்படி தயாரிக்கப் படுவது. இது பொன் நிறமாக இருக்கும்.) உப்பில்லாத அரிசி பொங்கலுக்கு, உப்பிலியப்பன் கோவில், காஞ்சிபுரம் இட்டிலிக்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், திருவாதிரைக் களிக்கு, தில்லை நடராஜர் கோவில்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us