PUBLISHED ON : நவ 04, 2012

மேற்கத்தியத் தீவுகளிலே ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். மேரி ஜோசப் ரோஸ் என்பது அவள் பெயர். சுருக்கமாக ஜோசப்பைன். மாவீரன் நெப்போலியனை மணந்த ஜோசப்பைன், அவனைவிட ஆறு வயது மூத்தவள். முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது, அவளுக்கு, 33 வயது, அவனுக்கு 27 வயது. அவள் அப்படி ஒன்றும் அழகியல்ல. போதாக் குறைக்கு இரண்டு குழந்தைகள் வேறு.
பிரெஞ்சுப் புரட்சிக்காரர்களால் அவள் கணவன் கொல்லப்பட்டான். ஆதரவற்ற அவள், புதிய கணவனைத் தேடத் தொடங்கினாள். நெப்போலியன் அப்போது பிரபலமடைந்திருக்கவில்லை. வீரன் என்று பெயரெடுத்திருந்தான். அதை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, ஒரு தந்திரம் செய்தாள். இறந்துபோன தன் கணவனின் வாளை, அவன் வாங்கிக் கொள்வானா? என்று கேட்டு வரும்படி, அவனிடம் தன் மகனை அனுப்பினாள். நெப்போலியன் சரி என்று சொல்லவே, மறுநாள் ஜோசப்பைன், அவனுக்கு நன்றி தெரிவிக்க வந்ததுபோல் கண்ணீரும், கம்பலையுமாகச் சென்று பார்த்தாள்.
மாலை, தன் வீட்டுக்குத் தேனீர் அருந்த வருமாறு கேட்டுக் கொண்டாள்; அப்படியே அவன் வந்தான். உறவு வளர்ந்தது. மூன்று மாதங்களுக்குப் பின், அவர்களின் திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டது. மணமான இரண்டு தினங்களுக்கெல்லாம், இத்தாலியின் மீது போர் தொடுக்க, படை திரட்டிக் கொண்டு, புறப்பட்டு விட்டான். போர்க்களத்தில் இருந்து நாள் தவறாமல் ஜோசப்பைனுக்குக் கடிதம் எழுதி வந்தான். சாதாரணக் கடிதங்களா அவை; ஒவ்வொன்றும் காதல் காவியம்!
ஆனால், ஜோசப்பைன் அவற்றை லட்சியமே செய்யவில்லை. இன்னொருவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். போர்க்களத்திலிருந்த நெப்போலியனோ, பதில் கூட எழுதவில்லையே என்று பரிதவித்துக் கொண்டிருந்தான். நெப்போலியன், ஜோசப்பைனிடம் கோபம் கொள்ள, பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. ஆயினும், அவளிடம் அவன் கொண்ட அன்பு மட்டும் சற்றும் குறையவில்லை. தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்பதற்காக, நெப்போலியன் ஜோசப்பைனை விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை மணக்க வேண்டியதாயிற்று. விவாகரத்து ரிக்கார்டுகளில் கையெழுத்திடும் போது, அவனுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
பிறகு, மேரி லூசி என்பவளை மணந்தான். அவளோ, பின்னர், வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள். ஜோசப்பைன் இறந்தாள். நெப்போலியன் ஓடி வந்து கதறியழுதான். அப்போது சொன்னான்: 'என் அருமை ஜோசப்பைன் என்னை நேசிக்கா விட்டாலும், விட்டு விட்டு ஓடியிருக்க மாட்டாள்!'
***
இந்தியை எதிர்த்து, திராவிடக் கழக தனி மாநில மாநாடு, 1946 அக்டோபர் 23, 24 ஆகிய நாட்களில் ஈரோட்டில் நடந்தது.
ஈரோடு மாநாட்டில், பிரசார நாடகங்கள் நடைபெற்றன. அவற்றுள் ஒன்று, எம்.ஆர்.ராதாவின் நாடகம். மற்றொன்று நான் எழுதி நடித்த, 'தூக்கு மேடை' நாடகம்.
அந்த நாடகத்திற்கு நடிக்க, திருவாரூரிலிருந்து இசைக் குழுவினர் உட்பட, நாங்கள், 20 பேர் ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. மாநாட்டின் பொறுப்புகளை, ஈ.வெ.ரா., நேரடியாகக் கவனித்துக் கொண்டிருந்ததால், எங்கள், 20 பேரின் போக்குவரத்துச் செலவுக்காக, 80 ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணம் போதாமையால், நாங்களே கொஞ்சம் பணம் போட்டு ஈரோடு போய் சேர்ந்தோம்.
மாநாடு முடிந்த பின், நானும், நாடகத்தில் பங்கேற்ற நண்பர்களும் ஊருக்குத் திரும்ப வேண்டும். வழிச் செலவுக்குப் பணம் வேண்டும். ஈ.வெ.ரா.,வை அணுகினால் தான் பணம் கிடைக்கும். மாநாடு முடிந்ததும் அவனவன் பணத்துக்கு வருவான் என்று ஈ.வெ.ரா., யார் கண்ணிலும் படாமல் இருந்தார். பிறகு ஒருவாறு ஈ.வெ.ரா.,வை சந்தித்து, விஷயத்தை விளக்கினேன். ஒரு நாடகத்திற்கு அவ்வளவு செலவா என்று மேலும், 50 ரூபாய் கொடுத்தார். மீண்டும் நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் கைப்பணம் போட்டு திருவாரூரை அடைந்தோம்.
—'என் கலைப்பணி' கட்டுரையில், மு.கருணாநிதி.
நடுத்தெரு நாராயணன்
