தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகர்கோவில் ஒழுகினசேரி சினிமா கொட்டகையில், ஒரு நாள் மாரியப்ப சுவாமிகள் (அக்காலத்தில் புகழ் பெற்ற பாடகர்) பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கச்சேரி முடிந்ததும் கலைவாணர் மேடையில் ஏறி, பொதுமக்களைப் பார்த்து, 'மணி என்ன?' என்று கேட்டார்.

'மணி மூன்று!' என்று மக்களிடமிருந்து பதில் வந்தது. கச்சேரி தொடங்கியதோ இரவு ஒன்பதரை மணிக்கு!

'பார்த்தீர்களா? இவ்வளவு நேரம் பொழுது போனதே தெரியவில்லை. நம்மை மறந்து மெய்மறந்து எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தோம். யாருமே எழுந்திருக்கவில்லை. தூங்கவில்லை. கொட்டாவி கூட விடவில்லை. இதுதான் மாரியப்ப சுவாமிகளின் பாட்டு மகிமை. மாரி என்பதற்கு மழை என்றும் பொருள். இவர் மாரி மட்டுமல்ல; மாரி அப்பன். மாரியாகிய மழையே, நம்மை அங்கே இங்கே போகாத படி தடுத்துவிடும். அப்படியிருக்க மாரி அப்பன் மழை பெய்தால் எப்படி இருக்கும்? இருந்தவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி செய்யும் சக்தி, அதற்கு உண்டு. அதுவும் இது சாதாரண மழையா... சங்கீத மழையாயிற்றே!

மதுப்பழக்கம் இல்லாத ஒருவன் சிறிதளவு கள்ளைக் குடித்து விட்டான் என்றால், அவன் நிலை என்ன ஆகும்? அந்த நிலையிலே தான் மாரியப்ப சுவாமிகள் சங்கீதத்தைக் கேட்ட நானும் இருந்தேன்; நீங்களும் இருந்தீர்கள். காரணம் - மாரியப்ப சுவாமிகள், 'கள்' ளை அருந்தியது தான் - கலைவாணர் இப்படிச் சொன்னதும் ரசிகர்களிடையே பலத்த கைத்தட்டல்!

***

காமராஜர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், அப்போதைய பிரதமர் இந்திரா, சென்னை வந்தார். அவருடன் கவர்னர், கே.கே.ஷா, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், கரண்சிங் ஆகியோர் வந்திருந்தனர்.

காமராஜரின் உடலுக்கு, மலர் வளையம் வைத்தார் இந்திரா. பிறகு, இரண்டு நிமிடம் இறுதி அஞ்சலி செலுத்தினார். காமராஜரின் உடலைத் தொட்டுக் கும்பிட்டார்.

கலங்கி நின்ற மக்களை பார்த்தார். அப்போது பிரதமர் இந்திராவின் கண்களிலிருந்து, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைக் கண்டதும், கூட்டத்தினரும் கதறி அழுதனர்.

ராஜாஜி மண்டபத்தில், காமராஜரின் சகோதரி மகன் ஜவகர், வைதிக முறைப்படி, சடங்குகளைச் செய்தார். காமராஜரின் உடல் குளிப்பாட்டப்பட்ட பின், திருநீறும், சந்தனப் பொட்டும், குங்குமமும் நெற்றியில் இடப்பட்டன. தூய கதராடை உடலில் அணிவிக்கப்பட்டது.

ராஜாஜி மண்டபத்தில் காமராஜர் உடல், 21 மணிநேரம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், ராணுவத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. உடலைச் சுற்றிலும், தரைப்படை, கப்பல் படை, விமானப்படை வீரர்கள், துப்பாக்கியைத் தரையை நோக்கிப் பிடித்தபடி தலை கவிழ்ந்த வண்ணம் அஞ்சலி செலுத்தினர்.

பின், உடலைப் பீரங்கி வண்டியில் வைத்தனர். அப்போது மரியாதை செலுத்தும் வகையில், குண்டுகள் முழங்கின. இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்தில் இருந்து பிற்பகல், 3:30 மணிக்குப் புறப்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர, ஊர்வலம் 10 கி.மீ., தூரத்தைக் கடந்து, அடையாறு காந்தி மண்டபத்தை அடைய, மூன்று மணி நேரம் பிடித்தது. மண்டபத்தின் அருகே, விசேஷமாக அமைக்கப்பட்ட மேடையில் சந்தனக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பீரங்கி வண்டியில் இருந்து, முப்படை வீரர்கள் காமராஜரின் உடலைத் தூக்கி வந்து சிதையில் வைத்தனர். 15 நிமிடத்திற்குள், ஈமச் சடங்குகள் முடிக்கப்பட்டன. சிதைக்கு தீ மூட்டு முன், மூன்றுமுறை பீரங்கிகள் முழங்கின.

காமராஜரின் தங்கைப் பேரன் கனகவேல், சிதைக்குத் தீ மூட்டினார். எல்லாரும் கதறி அழுதனர். தம்மைப் பிரதமராக்கிய காமராஜரின் உடல், தீ மூண்டு எரிவதைக் கண்டு, கையால், வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழுதார் இந்திரா.

'காமராஜர் சில நினைவுகள்' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us