
அந்தக் காலத்தில் கர்நாடக சங்கீதம் அல்லாமல் இந்துஸ்தானி மெட்டுக்கு ஏற்ற பொருத்தமான பாடல்கள் எழுதுவதில் மூவர் புகழடைந்திருந்தனர். அவர்கள் தஞ்சை ராமையாதாஸ், கே.பி.காமாட்சி, கம்பதாசன் ஆகிய மூவர் தான். தேன் உண்ணும் வண்டு - மாமலரைக் கண்டு- திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு - பூங்கொடியே நீ சொல்லுவாய்! இது கே.பி.காமாட்சி, இந்துஸ்தானி மெட்டுக்கு எழுதிய பிரபல பாடல்.
எந்த மொழி மெட்டுக்கும், 'இன்ஸ்டண்ட்' பாடல்கள் எழுதுவதில் இணையற்று விளங்கிய இம்மூன்று கவிகளும், வேறொரு விஷயத்திலும் நிகரற்று திகழ்ந்தனர். மூவருமே, 'பெருங்குடி' மகனார். பாட்டில் மட்டுமல்ல; 'பாட்டிலி'லும் மன்னர்கள்.
தொகையறாவுக்கு ஒரு பெக்;
பல்லவிக்கு இன்னொரு பெக்;
அனுபல்லவிக்கு அடுத்த பெக்;
சரணத்துக்கு கூடுதல் பெக்...
இவ்வாறு நான்கு ரவுண்டில், ஒரே நாளில் நான்கைந்து பாடல்கள் பாடி, காசை வாங்கி பையில் போட்டு கிளம்பி விடுவர். வீட்டிற்கு அல்ல; விஸ்கி, 'பார்'க்கு. இன்பம், துன்பம் பாட்டெழுத வேண்டிய காட்சிச் சூழல் எப்படி இருந்தாலும், பாட்டெழுத படக் கம்பெனிக்கு வரும்போதே, ஒரு சப்பை பாட்டிலை சைடு பாக்கெட்டில் வைத்தபடி தான் வருவர்.
கவிதை எழுத இவர்களுக்கு காகிதம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலக்கிப் பருகுவதற்கு இரண்டு கோலி சோடாவும், ஒரு கண்ணாடி தம்ளரும், அவசரத்துக்கு நாலு அப்பளமும் கொடுத்து விட்டால் போதும். பாடிக் கொட்டி விட்டு, அடுத்த படக் கம்பெனிக்கு பறந்து விடுவர்.
இவர்கள் இன்னொரு கம்பெனிக்கு போய், காலிப் பையுடன் வருவர் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கும் தயாரிப்பாளர், ஸ்பெஷல் விஸ்கி, ஸ்பென்சர் சோடா, உப்பில் ஊறப் போட்ட வடுமாங்காய் தயாராக வைத்திருப்பார். இந்த கொலு பொருட்களை பார்த்த உடனே, கவிகளுக்கு குஷி பீறிட்டு கிளம்பி, கோடை மழையாய் பாட்டு கொட்டத் தொடங்கும்.
பாவம்... சொல்லி வைத்தாற் போல் இம்மூன்று கவிஞர்களும், குடல் வெந்து புண்ணாகி, ஈரல் குலை துளை பாய்ந்து அழுகி, 50 வயது தாண்டியும், தாண்டாமலும், இரண்டுக்கெட்டான் நிலையில் இமைக் கதவுகளை மூடிக் கொண்டு இறைவனடி சேர்ந்தனர்.
— 'என் கரையைத் தொட்ட அலைகள்' நூலில் வசனகர்த்தா ஆருர்தாஸ்.
அண்ணாதுரையின் தோழராகவும் அவ்வபோது காரோட்டியாகவும் இருந்த, எஸ்.எஸ்.பி. லிங்கன் சொல்கிறார்:
ஒரு நாள், வழியில் ஒரு பொதுக்கூட்டம் - கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் - நடந்து கொண்டிருந்தது. அண்ணாதுரையை தாக்கிப் பேசுகிறார் பேச்சாளர். அண்ணாதுரை காரிலேயே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 'போகலாம், அண்ணாதுரை...' என்றேன். 'சரி, போகலாம்...' என்றார். போய்க் கொண்டே இருக்கும் போது, நான் அண்ணாதுரையிடம்...
'அவர்களுடைய கொள்கைகளை தானே நாமும் சொல்கிறோம். அப்படி இருக்க, நம்மையே தாக்குகின்றனரே... ஏன்?' என்று கேட்டேன்.
அதே சமயம், வரிசையாகச் செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளை கடந்து, நான் கார் ஓட்டிச் செல்ல நேர்ந்தது. ஹாரன் அடித்து ஓவர் டேக் செய்தேன். அப்போது ஒரு வண்டிக்காரன், 'மெதுவா போங்கடா... கழுதைகளா!' என்று, கார் ஓட்டி வந்த என்னை திட்டினான்.
இதைக் கண்ட அண்ணாதுரை, 'வண்டிக்காரன் ஏன் உன்னை திட்டினான்? அவனுக்கு பாதை விட்டுத் தான் நீ முந்திக் கொண்டு வந்தாய். அப்படி இருக்க, அவன் உன்னை திட்ட என்ன காரணம்?' என்று கேட்டார்; எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
அவரே சொன்னார். 'அவன் மெதுவாகப் போகிறானாம். அவனை விட நீ வேகமாக போகிறாயாம். அவனை முந்திக் கொண்டு நீ போவது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் வேகத்துக்கு, அவன் பின்னால் உன்னை வரச் சொல்கிறான். மாட்டு வண்டி வேகத்துக்கு மோட்டார் வண்டி போக முடியுமா? கம்யூனிஸ்ட்களை விட, நம் கட்சி வேகமாக வளர்கிறது. அதனால் திட்டுகின்றனர். வண்டிக்காரன் உன்னை திட்டியதைப் போல...' என்றார்.
***
நடுத்தெரு நாராயணன்

