தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 1944ம் ஆண்டு, சேலத்தில், ஜஸ்டிஸ் கட்சியின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இம்மாநாடு கட்சியின் பழமைவாதிகளுக்கும், முற்போக்கை விரும்பி யோருக்கும் இடையே நடந்த, பலப் பரீட்சையாகவே விளங்கியது. இந்த மாநாட்டில் தான் ஜஸ்டிஸ் கட்சி, 'திராவிடர் கழகம்' என்று, பெயர் மாற்றம் பெற்றது.

அப்போது, மாநாட்டின் வரவேற்பு கமிட்டியில், செட்டிநாட்டு குமார ராஜாவை (சர்.முத்தையா செட்டியாரை) கட்சியின் தலை வராக்கவும், ஈ.வெ.ரா.,வை அடுத்த நிலையில் பதவியிறக்கம் செய்யவும், முயற்சி செய்தனர். ராவ்சாகிப் ரத்தினசாமி பிள்ளை, சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் போன்றோர் இதில், தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கட்சியை, பாமரர் பக்கம் கொண்டு வருவதா அல்லது பணக்காரர் பக்கம் அனுப்பி விடுவதா என்ற கேள்வி, எழுந்த நேரம் அது. அண்ணாதுரை அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார். உடனடியாக, புறப்பட்டு வருமாறு, ஈ.வெ.ரா., விடமிருந்து, அண்ணாதுரைக்கு தந்தி வந்தது. அண்ணாதுரையும் புறப்பட்டு, ஈரோடு போய் சேர்ந்தார்.

அண்ணாதுரையிடம், ஈ.வெ.ரா., சேலத்தில் நடந்த செய்திகளை விளக்கமாக கூறி, 'சேலத்தில், பல்லக்கு தயாராகி விட்டது. மூன்று பேர் ஏற்கனவே, பல்லக்கை தூக்கத் தயாராகி விட்டனர். உன்னை, நாலாவது ஆளாக சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். உன் விருப்பம் என்ன?' என்று கேட்டார்.

உடனே, அண்ணாதுரை, 'பல்லக்கு தூக்குவது தான், என் வேலை என்று முடிவானால், நான், பழைய பல்லக்கையே (ஈ.வெ.ரா.,வையே) தூக்குகிறேன்...' என்றார், வருத்தத்துடன்.

***

சினிமா தயாரிப்பாளர், காலம் சென்ற சாண்டோ சின்னப்ப தேவர், 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்:

நான், சொந்தப்படம் தயாரிக்க சினிமாக் கம்பெனி துவங்கினேன். நடிகர், நடிகைகளுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க, 'காசோலை' தர வேண்டும். அதுநாள் வரை, எனக்கு வங்கியில் அக்கவுன்ட் கிடையாது. அதனால், புதிதாக, என் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பித்து, கணிசமான ஒரு தொகையையும் போட்டு வைத்தேன். காசோலை புத்தகம் கொடுத்தனர்; வாங்கி வந்தேன்.

ஒரு வாரம் கழித்து, எனக்கு பணம் தேவைப்பட்டது. என் பெயருக்கு, காசோலையில் எழுதி கொண்டு வங்கிக்கு சென்றேன். ஆனால், என் கையெழுத்து சரியாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போய் படிக்காதவன். என் பெயரை எப்படி எழுதுவது என்று, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து தான் கையெழுத்து போட்டு வந்தேன். என் கையெழுத்தையும், என் உருவத்தையும் பார்த்து சந்தேகித்த அவர்கள், என்னை ஒரு ஓரமாக உட்கார சொல்லி, போலீசுக்கு போன் செய்து விட்டனர்.

போலீஸ் வந்து என்னை விசாரித்தது...

'நான் தான் சின்னப்பா. சினிமாவில் நடித்திருக்கிறேன்...' என்று சொல்லியும், அவர்கள் நம்பாமல் மிரட்டினர். பின், எனக்கு தெரிந்தவர் களின் நம்பருக்கு போன் செய்து, அவர்கள் என்னைப் பற்றி சொன்ன பின் தான் விட்டனர். நம் பணத்தையும் போட்டு விட்டு, இந்த அவமரியாதையா... என்று, கோபம் வந்துவிட்டது. கணக்கை முடித்து, முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

இதுவரை, எத்தனையோ படங்கள் தயாரித்து விட்டேன். இந்திப் படங்களும் தயாரிக் கிறேன். ஆனால், யாருக்கும், காசோலை கொடுப்பதில்லை. நேரடி சம்பளம் தான். எனக்கு, வங்கியில் அக்கவுன்ட் இன்று வரை கிடையாது... என்று, கூறியுள்ளார் சின்னப்ப தேவர்.

***

வீரமா முனிவர், கிறிஸ்துவ சமயத் தொண்டு புரிந்து வந்ததோடு, மன்னர் சந்தா சாகிப்பிடம் திவானாகவும் இருந்துள்ளார். தமிழகத்திற்கு வந்த பின், தத்துவ போதகரை பின்பற்றி, தலையில் சிவப்பு நிற பட்டுத் தொப்பி அணிந்தும், நெற்றியின் நடுவில் கோபி சந்தன திலகமிட்டு, காதில் வைரக் கடுக்கண்களும், சுண்டு விரல்களில் மோதிரங்களும், சிவப்புக் கரை காவி உடுத்தியும், செந்நிற மேலாடையும், தலைக்குல்லாயும், தோள் புஜங்கள் மறையும்படி சால்வை போர்த்தியும், காலில் காலணி அணிந்தும் துறவுக் கோலம் கொண்டிருந்தார்.

புலித்தோல் இருக்கையில் அமர்ந்தும், பல்லக்கில் பயணம் செய்தும், பக்கத்திற்கு ஒருவர் சாமரம் வீசவும், பட்டுக் குடை பிடிக்க ஒருவர் என, எடுபிடிகளை அமர்த்தி, ஆடம்பரமாக இருந்துள்ளார். கடைசியாக, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு எனும் ஊரில் வாழ்ந்து, அங்கேயே, தம் 66வது வயதில் 1742ல் காலமானார்.

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us