
தினமும், காலை, 7:00 மணிக்கு தான், எழுந்திருப்பார் காமராஜர். எங்காவது அவசரமாகப் போக வேண்டியிருந்தால், முன்னதாக எழுப்பிவிடும்படி, தன் உதவியாளர், வைரவனிடம் சொல்லி விடுவார்.
துாங்கி எழுந்தவுடன் ஒரு, 'கோப்பை' காபி, பகல் 11:00 மணிக்கு சாப்பாடு, மாலையில் ஒரு, 'கோப்பை' காபி, இரவில் இட்லியும், பாலும். இதுவே, அவரது உணவு. இதற்கிடையில், காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது கிடை யாது. மதியச் சாப்பாடு, சைவச் சாப்பாடாகவே இருக்கும். என்றாவது ஒரு நாள், அபூர்வமாக, ஒரு முட்டை வாங்கச் சொல்வார். முட்டை ஒன்றை, பகல் உணவுக்கு சேர்த்துக் கொண்டால், அது தான், காமராஜருக்கு, விசேஷ சாப்பாடு.
எந்தப் பண்டிகையையும் கொண்டாட மாட்டார். தீபாவளிக்குக் கூட, புது வேட்டி, சட்டை அணிவது கிடையாது.
தினமும், காலையில் காபி குடித்தவுடன், பத்திரிகைகளைப் படிப்பார். அதன் பின், தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு, பேட்டி கொடுப்பார். எத்தனை பேர் வந்திருந்தாலும், அத்தனை பேரையும் சந்திப்பார். யாரையும் பார்க்காமல் திருப்பி அனுப்பியதே இல்லை.
காலையில், முகச்சவரம் செய்து, குளிப்பார். இரவில் சாப்பிடுவதற்கு முன், எவ்வளவு நேரமானாலும், குளித்து விட்டுத் தான் சாப்பிடுவார். இரவிலும், தன்னை சந்திக்க வந்தவர்களிடம் பேசி, அனுப்பிவிட்டு, புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ படிப்பது வழக்கம். சில நாட்களில், இரவு, 2:00 மணி வரை கூட, படித்துக் கொண்டிருப்பார்.
ஏதாவது, சிக்கலான அரசியல் பிரச்னைகளைப் பற்றி, முக்கியமானவர்களுடன் விவாதிக்கும்போது, விடிய விடிய துாங்காமல், காலை, 5:00 மணி வரை கூட பேசிக் கொண்டிருப்பார். பின், ஒரு மணி நேரம் துாங்கி எழுந்து, வழக்கம் போல, தன் அலுவல்களைப் பார்ப்பார்.
பகல் சாப்பாட்டுக்குப் பின், ஒரு குட்டித் துாக்கம் போடும், வழக்கம் அவரிடம் இருந்தது.
தினசரி, 75 கடிதங்களுக்கு மேல் வரும். கடிதங்களுக்கு, பதில் எழுதும் வழக்கம், அவரிடம் இல்லை. சில கடிதங்களில், அவரைக் காணும் வேண்டுகோளை, நிறைவேற்றுவதற்கு ஆவன செய்வதோடு நிறுத்திக் கொள்வார். அவரது தாயார், விருதுநகரில் இருந்து எழுதும் கடிதங்களுக்குக் கூட, அவர் பதில் போடுவது இல்லை.
விஷயத்தை தெளிவில்லாமல், குழப்பியும், மறைத்தும், அர்த்தமில்லாமல், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால், அவருக்கு கோபம் வரும். அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், மேலும் மேலும் பேசி, தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாலும், கோபம் வரும்.
அவர் கலந்து கொள்ளப் போகும் தினசரி நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்துக் கொள்வதில்லை. உதவியாளர்தான் குறித்து வைத்து, நினைவுபடுத்த வேண்டும். மேடைப் பேச்சுக்காக, குறிப்பு எடுத்துக் கொள்வதும் இல்லை.
காமராஜர் விரும்பிப் படித்த நுால், கம்ப ராமாயணம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்களுடன் அதைப் பற்றி, வாதங்கள் செய்வார்.
அடுத்தவர்களின் பேச்சையும், முகக் குறிப்பையும் கொண்டு, அவர்களை எடை போட்டு விடுவார்.
சாப்பிடும் நேரத்தில், யாராவது வந்தால், பேசிக் கொண்டே சாப்பிடுவார். வந்தவரை சாப்பிடச் சொல்லும், பழக்கம் அவரிடம் இல்லை.
எதிர்க்கட்சிக்காரரோ, தன் கட்சியிலேயே அவருக்கு எதிரானவர்களோ, யார் வீட்டு விசேஷம் என்றாலும், கலந்து கொள்வார்.
- 'காமராஜர் ஒரு சரித்திரம்' நுாலில், காமராஜரின் பள்ளித் தோழரான முருக தனுஷ்கோடி எழுதியது...
அக்குபஞ்சர் சிகிச்சை என்பது, சீனாவிலிருந்து, இந்தியாவிற்கு வந்த, நரம்பு சிகிச்சை என்கின்றனர். ஆனால், அதற்கு முன்பே, நாம், 'அக்குபஞ்சர்' ரகசியத்தை, அறிந்து வைத்திருந்தோம்.
'தோப்புக் கரணம்' போடுவது, ஒருவகை அக்குபஞ்சர் முறை தான். அக்குபஞ்சர் நியதிகளின்படி, 'வலது கண்ணின் மர்ம ஸ்தானம், இடது காதின் நுனியிலும், இடது கண்ணின் மர்ம ஸ்தானம், வலது காதின் நுனியிலும் உள்ளன. ஆகவே, காது நுனிகளை, லேசாக அழுத்தம் கொடுத்து, கீழ் நோக்கி இழுத்தால், கண் தசை நார்கள் பலம் பெறும்.
தோப்புக் கரணம் போடும்போது, கை, காதுகளைப் பிடித்துக் கொள்வதாலும், அதே சமயம், கீழ்நோக்கி தாழ்ந்து எழுவதாலும், காது நுனிகள், போதுமான அழுத்தத்தில், கீழ்நோக்கி இழுக்கப்பட்டு, கண் பார்வை கூர்மை அடைய உதவுகிறது. இதனால், கண் புரை உபாதைகள் தோப்புக்கரணம் போடுவோருக்கு வருவதில்லை.
-- இப்படிச் சொல்பவர் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர்.
நடுத்தெரு நாராயணன்

