PUBLISHED ON : அக் 05, 2014

பழம்பெரும் எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா, 1942ல் பர்மாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை பற்றி விவரிக்கும், 'பர்மா வழி நடைப் பயணம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளவை:
நான் ரங்கூனில் இருந்த பத்து ஆண்டுகளில், அநேக நுால்களை விலை கொடுத்து வாங்கி சேகரித்தேன். நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த நுால்களும் சேர்ந்தன. தவிர, நுால்களாக வெளிவருவதற்கு தயார்படுத்தி வைத்திருந்த கையெழுத்து பிரதிகளும், நான் அவ்வப்போது பல இடங்களில் நடத்திய சொற்பொழிவுக்கான குறிப்புகள் மற்றும் நுால்களை படித்து கொண்டு வரும் போது எடுத்துக் கொண்டு வந்த குறிப்புகள் அடங்கிய நோட்டு புத்தகங்கள் என, பலவும் இருந்தன.
இவை அனைத்தையும் எப்படியாவது இந்தியாவுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது என் ஆசை; ஆனால், முடியவில்லை. கையெழுத்துப் பிரதிகளையாவது எடுத்து வர முயன்றேன்; அதுவும் முடியாமல் போயிற்று.
வீட்டில் இருந்த பீரோ மற்றும் அலமாரி சாவிகளை, அவற்றின் வாயிலிலேயே வைத்தோம்; வீட்டின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும் இருந்த இரும்பு கிராதிகளால் ஆன நுழைவாயில்களை பூட்டாமல், வெறுமனே சாத்தி வைத்தோம்.
வீட்டிலுள்ள பொருட்களை விட்டு விட்டு போகிறோமே என்ற மனசஞ்சலம் எங்களுக்கு சிறிது கூட உண்டாகவில்லை. இருந்ததை பற்றியோ, இனி இருக்கப் போவதை பற்றியோ எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் இருந்தவர்கள் புறப்பட தயாராகி விட்டனர் என தெரிந்தது. நாங்களும் தயாராகி, தெருவில் காலடி எடுத்து வைத்தோம்; வைத்தது தான் தாமதம், அபாய அறிவிப்பு சங்கு ஒலிக்கத் துவங்கியது.
இது அபசகுனமா, சுப சகுனமா... எந்த சகுனமாக இருந்தாலும், புறப்படுவதிலிருந்து இனி பின் வாங்க முடியாது.
ஜப்பானிய விமானங்கள் வட்டமிட்டு சிறிது நேரத்தில் திரும்பி விட்டன. அபாயம் விலகியதை அறிவிக்கும் சங்கு ஊதியது; புறப்பட்டோம்.
'நினைவுகளில்' என்ற நுாலில் ரஸ்ஸல்:
அறிஞர் பெட்ராண்ட் ரஸ்ஸல், பெர்னாட்ஷாவோடு பேசிக் கொண்டிருந்தார். பேச்சு சோஷலிச சிற்பியான, சிட்னிவெப் என்பவர் பக்கம் சென்றது.
'பிறரிடம் சிட்னிவெப் காட்டும் பரிவு, வெகு சொற்பம் என்றே நினைக்கிறேன்...' என்றார் ரஸ்ஸல்.
'இல்லை; நீங்கள் நினைப்பது தவறு. ஒருசமயம் நானும், சிட்னி வைப்பும் ஹாலந்தில் ஒரு டிராமில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கையில் விலங்கு மாட்டிய கைதியை, போலீஸ் டிராமில் ஏற்றியது. உடனே பயணிகள் பயந்து, பின்னால் சென்றனர். பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிட்னிவெப், அந்த கைதியின் அருகில் சென்று, அவருக்கு பிஸ்கட் கொடுத்தார்...' என்று கூறி, 'யாரைப் பற்றியாவது கடுமையான அபிப்ராயம் சொல்லும் போது, எனக்கு இந்த காட்சி நினைவுக்கு வரும்...' என்று சொன்னார்.
'பாரதிதாசனின் நகைச்சுவை' என்ற நுாலிலிருந்து:
ஒரு முறை பாரதிதாசனும், அவரது மருமகன் தண்டபாணியும் சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு காரில் போய்க் கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் ரயில்வே, 'கேட்' மூடியிருந்ததால், காரை நிறுத்தி, அருகிலிருந்த கடையில் சோடா குடிக்கப் போனார் பாரதிதாசன். வெயில் நேரமானதால், சோடா மிக சூடாக இருந்தது. உடல் நலமில்லாது இருந்த மருமகனிடம், 'நீயும் ஒரு சோடா குடி; உடம்புக்கு நல்லது...' என்று சொல்லி, சாலைப் பக்கம் திரும்பி, 'இங்கு சூடான சோடா கிடைக்கும்...' என்று பலமுறை கூவி அழைத்தார்.
முதலில் புரியாமல் விழித்த கடைக்காரர், பின், பாரதிதாசனின் குசும்பை புரிந்து, சோடா பாட்டில்களை எடுத்து, தண்ணீர் இருந்த தொட்டிக்குள் போட்டார்.
நடுத்தெரு நாராயணன்
