
பாரதியாருடன் பழகிய எஸ்.ஜி.ராமானுஜுலு நாயுடு என்பவர், 1928ல், 'அமிர்த குணபோதினி' என்ற பத்திரிகையில் எழுதியது:
பாரதியின், 'இந்தியா' பத்திரிகை, சட்ட வரம்பை மீறி, நெருப்பு மழை பொழியத் துவங்கியது. இது, பாரதியாரைப் பிடித்த கெட்ட காலம் தான். சாந்தமான நடையில் அவர் சென்றிருந்தால் நாளைக்கும், 'இந்தியா' பத்திரிகை நடக்கக்கூடும். 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீசார், பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்ததும், பாரதியாருக்கு வாரண்டை காண்பித்தனர். 'தாம் ஆசிரியரல்லவென்றும், தம் பெயர் வாரண்டில் இல்லை...' என்றும் அவர் கூறிக் கொண்டிருக்கையில், அப்பத்திரிகையை வெளியிடுபவரான சீனிவாச அய்யங்கார் அங்கு வந்து, 'என்ன விஷயம்?' என்று கேட்டார். போலீசார், அவர் தான் ஆசிரியராகப் பதிவு செய்யப் பெற்றவரென்று அறிந்து, அவரைக் கைது செய்தனர்.
விசாரணை காலத்தில் சீனிவாசன், 'தாம் ஆசிரியரல்ல; பாரதியாரே ஆசிரியரென்றும், தாம் ஒரு குமாஸ்தா போலவே இருந்து வந்ததாயும், தமக்கு எழுத சக்தி கிடையாது...' என்று தெரிவித்தார். ஆயினும், அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின், பாரதியாருக்கு வாரண்டு பிறந்தது. அதற்குள் தப்பி, புதுச்சேரி போய்ச் சேர்ந்தார் பாரதி.
இது சம்பந்தமாக, 'சுதேச மித்திரன்' நவ., 16, 1908ல், துணை தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது:
சென்னையில் பிரசுரமாகி வந்த, 'இந்தியா' என்ற வாராந்திரத் தமிழ் பத்திரிகையில், கடந்த மார்ச் மாதம் முதல், ராஜ துவேஷமான விஷயங்கள் எழுதப்பட்டு வந்தன. அதனால், அப்பத்திரிகையின் பேரில் ராஜ துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரிப்பவரான சீனிவாசய்யங்காரைக் கைது செய்து விசாரணை செய்ததில், ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து ஆண்டு தீவாந்திர சிறை (அந்தமான் தீவு சிறைக்கு அனுப்பப்படுதல்) விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜ துவேஷ குற்றம் செய்ததாக அரசு யாரை நினைக்கின்றனரோ, அவர்களைப் பிடித்து, விசாரணைக்கு கொண்டு வருவதும், நீதிபதிகள் கொடுந்தண்டனை விதிப்பதும், இப்போது சாதாரணமாகி விட்டது.
குற்றம் செய்தவர்களை தண்டித்தல் அவசியமென்று எல்லாரும் ஒப்புக் கொள்வர். ஆனால், ராஜ துவேஷ குற்றம் செய்கிறவர்கள் படித்தவர்களாயும், கவுரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் அரசும், நீதிபதிகளும் இவ்வளவு கடுமை காட்டாமல் இருந்திருக்கலாம். குற்றமுள்ள விஷயங்களை சீனிவாச அய்யங்கார் எழுதவில்லை.
எழுதியவரும், பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போயினர். சீனிவாச அய்யங்கார் பெயர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர் அகப்பட்டுக் கொண்டாரேயன்றி, குற்றத்துக்கு உத்திரவாதம் அவரல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்கு கொடுந்தண்டனை விதிக்காமல், இலகுவான தண்டனை விதித்திருக்கலாம் அல்லது, 'இந்தியா' பத்திரிகையில் ராஜ துவேஷே குற்றமுள்ள வார்த்தைகளுக்கு துவக்கத்திலேயே அரசு எச்சரித்திருந்தால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.
திரைப்பட நிறுவனம் ஒன்று, 'போலந்தின் மாபெரும் சாதனைகள்...' என்ற தலைப்பில், போலந்து நாட்டைப் பற்றிய ஒரு செய்திப்படம் தயாரிக்க, அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியது. தங்கள் நாட்டின் பெருமையை, மற்ற நாடுகளும் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு என்று கருதிய போலந்து அரசு, உடனே, அதற்கு அனுமதி வழங்கியது.
போலந்தில், நான்கு மாதம் முகாமிட்டிருந்த அந்த திரைப்படக் குழுவினர், அந்நாட்டின் எல்லாப் பகுதிகளையும் படம் எடுத்துச் சென்றனர்; அதன் விளைவாக, ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்து, நான்கே வாரங்களில் போலந்தை கைப்பற்றினார். எங்கெங்கே திடீர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளவே ஹிட்லர், இப்படி ஒரு திரைப்படக் குழுவை அனுப்பி படம் எடுக்கச் செய்தார்.
நடுத்தெரு நாராயணன்

