
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு தமிழ் பத்திரிகையில் வந்த செய்தி இது: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து, ஏழு மைல் தூரத்தில் வெள்ளைக்கடை என்ற கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலில், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மூன்றாவது நாளில் நடக்கும் விழாவில், பெண்கள் நிர்வாண நடனம் ஆடுவர். அந்நடனத்தை, 'அம்மணக்கூத்து' என்கின்றனர்.
அன்று காலை, 10:00 மணிக்கெல்லாம் ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி விடுவர். சிறுவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுவர். வெளியூர் ஆண்கள் யாரேனும் ஊருக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் எல்லையில் வயதான பெண்கள் காவலுக்கு நிற்பர். நடனம் முடிந்ததும், கொம்பு ஊதிய பின்னரே, ஊருக்குள் திரும்புவர் ஆண்கள்.
-இப்போது அங்கு நிர்வாண நடனம் நடக்கிறதா என்பது தெரியவில்லை.
அறிவுக்கு, 1000 செய்திகள் நூலிலிருந்து: இங்கிலாந்தில், 19ம் நூற்றாண்டில், முதன் முதலாக, 'குறுக்கெழுத்துப் போட்டி' உருவானது ஆரம்பத்தில், மிகச் சாதாரணமான புதிராகவே கருதப்பட்டது. பின், இது அமெரிக்காவில் அறிமுகமானதும், அங்கு பெரிய வரவேற்பை பெற்றது. துவக்கத்தில் எளிமையாக நடத்தப்பட்ட போட்டி, பின், மிகச் சிக்கலான வகையிலும், நுணுக்கமாகவும் நடத்தப்பட்டது.
நவீன குறுக்கெழுத்து போட்டி, டிச., 21, 1913ல் நியூயார்க்கிலிருந்து வெளி வந்த, 'உலகம்' எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பின், மிகப் பிரபலமடைந்து, அமெரிக்காவின் அனைத்து பத்திரிகைகளிலும் இடம் பெறத் துவங்கியது.
அமெரிக்காவில் புகழ் பெற்ற பின்தான், இங்கிலாந்தில் பரவத் துவங்கியது. நம் நாட்டிலும், பல ஆங்கில பத்திரிகைகளில் இப்போட்டி இடம் பெற்றுள்ளது.
இப்போது, குறுக்கெழுத்து புதிரில் ஏராளமான வகைகள் வந்து விட்டன என்றாலும், அடிப்படை ஒன்று தான். 'நியூயார்க் டைம்ஸ், கார்டியன் மற்றும் நியூ ஸ்டேட்ஸ்மென்' போன்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியானவை, தற்போது புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
கல்லூரிப் படிப்பை முடித்த பின், பொது விவாத கூட்டங்கள் எங்கு நடந்தாலும், வலியச் சென்று, அதில் கலந்து கொண்டு பேசுவார் அண்ணாதுரை.
கூட்டத்தில், அன்று எடுத்துக் கொள்ளப்படும் பொருள் பற்றி குறிப்பிட்டு, 'இதை ஒட்டியோ, வெட்டியோ பேசுவோர் இக்கூட்டத்தில் உண்டா...' என்று கேட்டு விட்டால், உடனே, மேடை ஏறி, தன் கருத்துக்கு இணைந்த பக்கத்தில் நின்று, சொல் அம்புகளை மாற்றார் தடுக்க இயலாத வகையில் தொடுப்பார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ., விவாத மன்றத்தில், 'ஆலயப் பிரவேசத்திற்கு ஆகமத்தின் அனுமதி தேவையா!' என்ற பொருள் பற்றி, ராஜாஜி தலைமையில் விவாதக் கூட்டம் நடந்தது. அண்ணாதுரையும் அக்கூட்டத்திற்கு சென்றிருந்தார். பொருளை ஒட்டியும், வெட்டியும் சிலர் பேசினர்.
பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி, மேடை ஏறி, 'ஆலயப் பிரவேசத்திற்கு ஆகமத்தின் அனுமதி தேவையில்லை' என்ற பொருள் பற்றிப் பேசத் துவங்கினார் அண்ணாதுரை. அவர் பேச்சு காரசாரமாக இருப்பதைக் கண்ட ராஜாஜி, அண்ணாதுரையின் சட்டையைப் பிடித்து இழுத்து, நிறுத்த முயன்றார்.
ஆனால், அண்ணாதுரையோ, அவரிடமிருந்து சற்று விலகி, 'தலைமை வகிக்கும் ஆச்சாரியார் (ராஜாஜி) எந்த ஆகம சாஸ்திர விதியை ஆராய்ந்து, காந்தியார் மகனுக்கு தன் மகளை மணம் செய்து கொடுத்தார்...' என்று பேச, 'சொந்த விஷயம் பற்றிப் பேசாதே...' என்று கோபத்துடன் கூறினார் ராஜாஜி.
உடனே, அண்ணாதுரை, ராஜாஜி பக்கம் திரும்பி, 'நீர் பொதுச்சொத்தாக ஆக்கப்பட்டு விட்டீர்; உமக்கு என்று சொந்த விஷயம் இருப்பதாக யாரும் ஏற்பதற்கில்லை. உம் ஒவ்வொரு நடவடிக்கையையும், பொதுமக்கள் கவனித்தே தீருவர்...' என்று காரசாரமாகப் பேசினார்.
ராஜாஜி, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த டி.செங்கல்வராயனிடம், 'பார்... எப்படி எல்லாம் விஷத்தைக் கக்குகிறான்...' என்று கூறி குறைப்பட்டுக் கொண்டார்.
— ஆதாரம்: நெடுஞ்செழியன் நடத்திய 'மன்றம்' வார ஏடு. (மே 15,1954 இதழ்)
நடுத்தெரு நாராயணன்

