PUBLISHED ON : செப் 13, 2015
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?
விநாயகர், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார். 'ஓம்' எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம் எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள், 'அ' படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், 'உ' காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும், 'ம' அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும். இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின் அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் உள்ளவர் விநாயகர். அதனால், முதலில் இவரை வழிபட்ட பின்பே, மற்ற தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.
விநாயகர் சிலையின் அதிசய தோற்றங்கள்!
சிந்தனைக்கும், அறிவுக்கும் எட்டாத தத்துவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
கன்னியாகுமரியில், கேரளாபுரத்தில் உள்ள மரத்தடி விநாயகர், ஆவணி முதல் தை மாதம் வரை, ஆறு மாதம் கறுமையாகவும்; மாசி முதல் ஆடி வரை, ஆறு மாதம் வெண்மையாகவும் காட்சி தருகிறார்.
வேலூரில் உள்ள தேனாம்பாக்கத்தில், லிங்க உருவில் உள்ள விநாயகரைச் சுற்றி, ௧௦ வித விநாயகர்கள் காட்சி தருகின்றனர். திருச்செங்காட்டான் குடியில் உள்ள விநாயகர் மனித உருவில் எழுந்தருளியுள்ளார்.
சுசீந்திரத்தில், கணேசினி என்ற பெயரில், பெண் உருவமாகத் திகழ்கிறார். புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர், ஆறு முகங்களுடனும், சேலம் சுகவனேசுவரர் கோவிலில் உள்ள விநாயகர், இரு கைகளிலும் கொழுக்கட்டை ஏந்தி காட்சி தருகிறார்.
விநாயகருக்கு கொழுக்கட்டைபடைப்பது ஏன்?
விநாயகருக்கு, பல்வேறு நிவேதனப் பொருட்கள் படைக்கப்பட்டாலும், அதில், கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுவதன் காரணம், பிரம்மம், அண்டத்தின் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறது என்பதை உணர்த்தவே! முட்டை வடிவிலான கொழுக்கட்டையின் மேல்புறம் அண்டமாகவும், அதனுள் உள்ள பூரணம், பிரம்மமாய் இருக்கிறது. இதைத்தான் கொழுக்கட்டையாக விநாயகர் கையில் வைத்துள்ளார்.
நான்கு என்ற எண், விநாயகரை குறிப்பதாக கூறுவது ஏன்?
திதிகளில் வரும் சதுர்த்தி விநாயகருக்கு உரியது. அத்துடன், 444 மந்திரங்களை கொண்ட, 'சதுராவ்ருத்தி தர்ப்பணம்' என்பது விநாயகருக்கு பிடித்தமானது. எனவே, நான்கு என்ற எண், விநாயகரை குறிக்கும் என்பர்.

