
தபிபாய் என்ற பெண்ணை மணந்த பால கங்காதர திலகர், தலைத் தீபாவளியைக் கொண்டாட, தன் மாமனார் வீட்டுக்கு சென்றார். மராட்டிய மாநிலத்தில், தீபாவளி அன்று, மாப்பிள்ளைகளுக்கு, சீர் வரிசை கொடுப்பர். அதனால், 'உங்களுக்கு சீர்வரிசையாக என்ன வேணும்?' என்று கேட்டார் திலகரின் மாமனார்.
'எனக்கு ஆடை அணிகலன் எதுவும் வேணாம்; அறிவைப் பெருக்கும் புத்தகங்களே வேணும்...' என்றார் திலகர்.
மருமகனின் நற்குணத்தை அறிந்த மாமனார், ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை வாங்கி, தீபாவளி பரிசாக கொடுத்தார்.
'தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,' எனும் நூலிலிருந்து: தீன் தின்கா சுல்தான் என்ற இந்தி படத்தைப் பார்த்தார் அண்ணாதுரை. மூன்று நாட்கள் மட்டுமே, ஒரு நாட்டிற்கு ராஜாவாக இருக்க வாய்ப்பு பெறும் ஒருவன், அந்த குறுகிய காலத்திற்குள் அந்நாட்டை எப்படி செம்மைப்படுத்துகிறான் என்பது தான் அப்படத்தின் கதை!
இப்படம், அண்ணாதுரையை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால், ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'தீன் தின்கா சுல்தான் என்றொரு படம் பார்த்தேன்; மூன்று நாட்கள் மட்டுமே ராஜாவாக இருக்க வாய்ப்பு பெற்ற ஒருவன், அந்நாட்களுக்குள், நாட்டிற்குத் தேவையான நல்ல பல திட்டங்களைத் தீட்டி, அந்த நாட்டை, எப்படி செல்வச் செழிப்படைய வைக்கிறான் என்பது தான் கதை. நான் சொல்கிறேன்... இந்த நாட்டை ஆள, எனக்கு ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள். அதாவது, என்னை, ஏக் தின்கா சுல்தான் ஒரு நாள் ராஜாவாக ஆக்குங்கள்; இந்த தமிழகத்தையே நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன்...' என்று பேசினார்.
இப்பேச்சு, எம்.ஜி.ஆர்., மனதில் பதிந்து போனது. இக்கருத்தை அடிப்படையாக வைத்து உருவானது தான், நாடோடி மன்னன் திரைப்படம். இப்படத்தை, பெரும் பொருட் செலவில், தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும், கடன் வாங்கியும், தயாரித்தார் எம்.ஜி.ஆர்.,
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து தான், எம்.ஜி.ஆரின் எதிர்காலம் என்ற பேச்சு எழுந்த போது, 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்; இல்லையென்றால் நாடோடி...' என்று தன் நிலையைக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
ஆனால், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 'நான் மன்னன் தான்...' என்பதை, நிரூபித்தார் எம்.ஜி.ஆர்.,
பிரபல பெண் எழுத்தாளர் வை.மு.கோதை நாயகியின் கணவர் பார்த்தசாரதி ஒரு பேட்டியில்: பிப்., 1960ல் கோதை உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த போது, 'குளிர்ந்த நெஞ்சம்' என்ற நாவல் பூர்த்தியாகாமலே இருந்தது.
'நான் பிழைத்து வந்து எழுத மாட்டேன் என்று நினைக்கிறீர்களா... அந்நாவல் முழுவதையும் நான் தான் எழுதுவேன்...' என்றாள்.
ஆனால், அந்நாவலை முடிக்கும் முன், அவளை அழைத்துக் கொண்டு விட்டார் ஆண்டவன். பேத்தி வை.மு.விஜயலட்சுமி பாட்டியின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அந்நாவலை எழுதி முடித்தாள்.
தபால்காரர் ஒருவர், அந்த வீட்டில் வசிக்கும் நபரிடம், 'சார்... போஸ்ட்...' என்று குரல் கொடுத்து அழைத்து, அவருக்குரிய தபாலைக் கொடுத்தார்.
'சார்... போஸ்ட் என்ற ஆங்கிலச் சொல்லையோ அல்லது தபால் என்ற உருது சொல்லையோ பயன்படுத்தாமல், 'ஐயா... அஞ்சல்!' என்று தமிழில் கூறி, அஞ்சல்களை கொடுக்கலாமே...' என்றார் வீட்டுக்காரர்.
தபால்காரரும் அவ்வாறே மறுநாள் முதல், 'ஐயா... அஞ்சல்...' என்று குரல் கொடுத்தார். அவரை அப்படி தமிழ்ப்படுத்தியவர், அண்ணல் தங்கோ என்ற தமிழறிஞர்.
நடுத்தெரு நாராயணன்