
கடந்த, 1968ல் தமிழ் வார இதழ் ஒன்றில், 115 நாவல்களை எழுதிய நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி பற்றி, அவர் கணவர் வை.மு. பார்த்தசாரதி நினைவு கூர்கிறார்: திருவல்லிக்கேணி பெரிய தெருவில், ஒரு திருமணத்திற்கு வந்திருந்த கோதையின் சினேகிதி ஒருவர், திருமணம் நின்று விட்டதாக கூறி, அங்கிருந்து, திரும்பி வந்தார்.
மாலை மாற்றி, ஊஞ்சல் சடங்கு முடிந்த நிலையில், மணமக்கள், கைகோர்த்தபடி மாங்கல்ய தாரணத்திற்கு, மணப் பந்தலுக்கு புறப்பட வேண்டிய தருணத்தில், திடீரென்று பரபரப்பு!
மருத்துவம் படித்திருந்த மணமகன், பெண்ணின் கையைப் பிடித்ததும், ஏதேச்சையாக மணமகளின் நாடித் துடிப்பை, பரிசீலிக்க நேரிட்டிருக்கிறது. அப்போது, பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று சந்தேகித்து, அதை வெளியிடவும், உடனே கசமுசா என்று பேச்சு கிளம்பி, பெண்ணை, வேறொரு மருத்துவர் வந்து பரிசோதித்து, மணமகனின் கூற்று உண்மை என்று சொல்ல, கலவரம் ஆகி, திருமணம் நின்று விட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத் தான், 'வீர வசந்தா' என்ற நாவலை எழுதினாள் கோதை.
'ரீடர்ஸ் டைஜஸ்ட்' புத்தகத்திலிருந்து: கிராமத்தில் இருந்த அந்த அரசு நிறுவன கோழிப் பண்ணை, சுற்று வட்டாரத்தில் இருந்த நகரங்களுக்கு ரயில் மூலமாக, முட்டைகளை அனுப்ப வேண்டியிருந்தது. கள்ளிப் பலகைப் பெட்டிக்குள் முட்டைகளை வைத்து, வைக்கோல் நிரப்பி, மேல்புறம், கீழ்புறம் என்றெல்லாம் குறிப்பிட்டு, 'ஜாக்கிரதையாகக் கையாளவும்...' என்ற எச்சரிக்கை வாசகத்தை ஒட்டி அனுப்பினர்.
என்ன பலன்... முட்டைகள், 35 சதவீதம் உடைந்து போயின. ஹாட்போர்டு பெட்டியில், 'பேக்' செய்து பார்த்தனர்; அப்போதும் முட்டைகள் உடைவது குறைந்தபாடில்லை.
நிறுவன ஊழியரொருவர், 'மண் பானையில் வைத்து அனுப்புவோம்...' என்று யோசனை கூறினார்; 'நல்ல கெட்டி, 'பேக்கிங்'கால் முடியாதது, மண் பானையில் ஆகுமா...' என்று எல்லாரும் சிரித்தனர்; இருந்தாலும், அனுப்பிப் பார்த்தனர்.
என்ன ஆச்சரியம்... ஒரு முட்டை கூட உடையவில்லை.
காரணம், எங்கே பானை உடைந்து விடுமோ என்று பயத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாண்டது தான்!
அறிஞர் நார்மன் வின்சென்ட் பீல்ட் எழுதியது: என் பெண், எலிசபெத்துக்கு, 9 வயது; ஒருநாள் அவளிடம், 'நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாயா?' என கேட்டேன். 'ஓ!' என்றாள்.
'எப்போதுமேவா?'
'ஆமாம்...'
'காரணம்?'
'தெரியவில்லை!'
'ஏதோ காரணம் இருப்பதால் தான் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்; சொல்... உனக்கு எது மகிழ்ச்சியை கொடுக்கிறது?'
'என் சினேகிதிகளை, டீச்சர்களை பிடிக்கிறது. கோவிலுக்குப் போகப் பிடிக்கிறது; என் தம்பி, தங்கை, அம்மா, அப்பா எல்லாரையும் பிடிக்கிறது...' என்றாள்.
எலிசபெத்தின் மகிழ்ச்சி ரகசியத்தில், எல்லாமும் அடங்கியிருக்கிறது. சினேகிதிகளை (கூட்டாளிகளை), கோவிலை (மதத்தை), தம்பி, தங்கைகளை (வீட்டை) நேசிக்கக் கற்றுக் கொண்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சி திளைக்கும்!
எம்பார் விஜயராகவாச்சாரியார் சொன்னது: ஏமாற்றுதல் என்பதை, 'நாமம் சாத்துதல்' என்று, வேடிக்கையாக குறிப்பிடுவர். இதில் யாரும் கோபப்பட ஒன்றுமில்லை. ௨௦௦ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சத்குரு தியாகராஜ சுவாமிகளே, தம் குலதெய்வமான ராமனைப் பற்றி பாடியிருக்கிற பாட்டில், 'ராமா தைவமா, ராகலோவமா...' என்ற கரடி ராகப் பாட்டில், நகைச்சுவையோடு இதைக் குறிப்பிட்டுள்ளார்.
'ஸ்ரீ ரங்கநாத மூர்த்தியை, விபீஷணனுக்குக் கொடுத்து, அவன், அதை இலங்கைக்கு எடுத்துப் போக முடியாமல், ஸ்ரீரங்கத்திலேயே வைத்து விடும்படியாகச் செய்து, அவனுக்கு பட்டை நாமம் இட்டாயே...' (ரங்கராஜூ விபீஷணனிகி பங்க நாமமு இடின ரீதி) என்று, ராமனை கேட்பதாக அந்தப் பாடலில் வருகிறது.
நடுத்தெரு நாராயணன்

