
'மேதைகள் நகைச்சுவைகள்' நூலிலிருந்து: கடந்த 1928-ல், கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருந்தார் நேரு. 'சாரதா சட்டம்' கொண்டு வருவது பற்றி ஆதரவு, எதிர்ப்பு என, இரு அணிகள் இருந்தன.
அப்போது, கூட்டத்திற்கு, யார் தலைமை தாங்குவது என்று பிரச்னை எழுந்தது. நேரு பேச எழுந்த போது, 'தலைவர் யார் என்று தீர்மானிக்கப்படாமல் இருக்கும் போது, நேரு பேசக்கூடாது...' என்று ஒரு அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மைக்' முன் வந்தார் நேரு. எல்லாரும் அமைதியாக இருக்கும்படி கூறி, தாம் முதலில் பேசப் போவதாக கூறினார்.
'கூட்டத்தலைவர் தான் முதலில் பேச வேண்டும்; முதலில் தலைவரை முடிவு செய்யுங்கள்...' என்று கூறி, மீண்டும் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
நேரு என்ன நினைத்தாரோ, திடீரென்று மேடையிலிருந்து கீழே குதித்து, எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களை நோக்கி, பாய்ந்தோடினார்.
நேருவின் அந்த திடீர் நடவடிக்கையைக் கண்டு பயந்து, விழுந்தடித்தபடி, ஓடினர் மறுப்பு தெரிவித்தவர்கள்.
கொஞ்ச தூரம் துரத்திச் சென்ற பின், திரும்பி வந்த நேரு, மீண்டும் மேடை ஏறினார். மேடையிலிருந்த வல்லபாய் படேல் சிரித்தபடியே, 'எதற்காக அவர்களை துரத்திக் கொண்டு ஓடினீர்?' என்று கேட்டார்.
'அதுதான் எனக்கும் தெரியல்லை; சரி... அவர்கள் ஏன் அப்படி விழுந்தடித்து ஓடினர்...' என்று சிரித்தபடியே கேட்டார் நேரு.
'ஓடிப் போனவர்கள் திரும்பி வந்தால் தான், அவர்கள் ஏன் ஓடினார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்...' என்றார் பட்டேல். இதைக் கேட்டதும் மேடையில் பெரிய சிரிப்பொலி எழுந்தது; பின், கூட்டம் இடையூறின்றி நடந்தது.
மார்ச், 14, 1948ல், 'கல்கி' இதழில், கல்கி எழுதியது: சென்ற வாரம், சென்னை கடற்கரை சாலையில், உ.வே.சாமிநாத ஐயர் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் நிகழ்ந்த சொற்பொழிவுகளில், சில, 'ஒரு மாதிரி' யாக இருந்தன.
தமிழை, இங்கிலீஷில் பேசித் தீர்த்தார், ருக்மணி தேவி. டாக்டர் லட்சுமணசாமி முதலியாரோ, இங்கிலீஷை, இங்கிலீஷிலேயே பேசினார். அவர், 'இன்னும், இரண்டு வாரத்தில், தமிழ் கற்று விடுவேன்...' என்று வாக்களித்தது பெரிய விசேஷம்!
இன்னும், தமிழை, தமிழில் பேசியவர்களில் ஒருவர், ஆதரவாளர் என்று சொல்வதற்கு பதில், 'ஆதார தாரளவர்' என்று மிகக் குன்றி கஷ்டப்பட்டார். இன்னொருவர், குண்டலகேசி என்பதற்கு, 'குண்டால கேசி மற்றும் குண்டல கேசரி' என்றெல்லாம் கூறி, திண்டாடினார்.
வேறு ஒருவரோ, ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்கத் தெரியாமல், மூச்சு முட்டிப் போனார். மொத்தத்தில், எல்லாரும் தமிழில் அபார அன்பு காட்டினர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
பாரதிதாசன் தன், 'குயில்' பத்திரிகையில், 'தொண்டர் வேண்டும்' என்ற தலைப்பில் எழுதியது: ஏழ்மை நிலையில் இருக்கும், 'குயில்' பத்திரிகை அலுவல்களை பொறுப்பேற்று நடத்த, நல்ல சம்பளம் கொடுத்து ஊழியர்களை அமர்த்தும் நிலை, இன்னும் ஏற்படவில்லை. நம் பெருமன்றத்தில் சேர்ந்துள்ள கவிஞர்கள் யாருக்காவது ஓய்விருந்தால், உதவி செய்யும் உள்ளமிருந்தால், அலுவலகத்தில் வந்து, அதில் ஏதாவது பொறுப்பேற்று, பணி செய்யலாம். எண்ணமிருப்பவர் எழுதுக; அவரது உணவிற்கும், உறையுளுக்கும் அலுவலகம் பொறுப்பேற்கும்.
'அக்பர் தி கிரேட்' நூலிலிருந்து: தன் ஆட்சி காலத்தில், தன் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார் அக்பர். அதில், 'அல்லா ஹூ அக்பர்' என்ற, இறை வாசகம் பொறித்திருந்தார். அந்த வார்த்தை, 'அக்பர் தான் அல்லா என்று சொல்வது போல் உள்ளது...' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர் இஸ்லாமிய மதத் தலைவர்கள். இதனால், அந்த நாணயங்களை, 'செல்லாது...' என்று அறிவித்து, மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் அக்பர்.
நடுத்தெரு நாராயணன்

