PUBLISHED ON : ஆக 21, 2016

நவ., 8, 1926ல், 'ஆனந்த குண போதினி' இதழில், சென்னையின் சிறப்பு குறித்து, பத்திரிகையாளர், எஸ்.ஜி.ராமனுஜுலு நாயுடு எழுதியது:
சிங்காரச் சென்னையை அதிகாலையிலிருந்து அடுக்கடுக்காய் கவனியுங்கள்...
துாங்கி எழுந்து கண்ணை நிமிட்டியபடி வெளியில் வந்தால், வீதியில், இரண்டு எருதுகள் பூட்டப்பட்ட சாரட்டாகிய முனிசிபல் குப்பை வண்டியின் தரிசனம்; இதுதான், பட்டினத்து முதல் கோபுர தரிசனம்.
அதன்பின், சாக்கடையை கிளறி விடும் முனிசிபல் சாக்கடை உத்தியோகஸ்தர்களையும், அவர்களுக்கு ஒரு படி உயர்ந்த அவர்களது மேஸ்திரிகளையும், அடுத்தாற்போல், ஒரு கூடையும், துடைப்பக் கட்டையும் எடுத்துக்கொண்டு, வீடு வீடாய், வீதி வீதியாய் போகும், ஒய்யாரக் கோமளங்களையும், அவர்களின் வண்டிகளையும், அவ்வண்டிகளின் சாரதிகளான, ஆணழகர்களுடைய தரிசனம். இது, காலை, 6:00 மணி சங்கதி!
பின், 7:00 மணியானாலோ, ஆங்காங்கே வேலையாட்கள் கூடைகளையும், தட்டுகளையும் துாக்கியபடி ஆப்பம், ரொட்டி மற்றும் சந்தை கடைச் சாமான்களை வாங்க செல்லும் அவர்களின் வேகநடை, கசங்கிய உடை சென்னபட்டினத்தின் பெரும் சிறப்பு!
அதைத் தொடர்ந்து, 8:00 மணிக்கோ, நாட்டுப்புறங்களிலிருந்து பிழைக்க வந்திருக்கிற காட்டான், மோட்டான், காக்கான், மூக்கான்களாகிய கட்டை வண்டிக்கார கண்றாவி மனிதர்கள், தங்கள் பார வண்டியோடு செட்டு செட்டாய் புறப்படும் வேடிக்கை, வெகு தமாஷ்!
அப்புறம், 9:00 - 10:00 மணியானாலோ, ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள், அடுக்கடுக்காய் புறப்படுவர். அவர்களுடைய டீக்கென்ன, போக்கென்ன, மீசை முறுக்கென்ன, தலைப்பாகையின் பளபளப்பென்ன, கோட்டென்ன, பூட்சென்ன, வெள்ளை வெ ௌரேன்று சுண்ணாம்பு சுவரை போன்ற உடுப்புகளின் ஒய்யாரமென்ன, தாம்பூலம் மெல்லும் தளுக்கு சிங்காரமென்ன, அந்த எச்சிலை துப்பிக் கொண்டே போகும் ஷோக்கு என்ன...
நாமம் - பொட்டு - விபூதி இவைகள் அவர்கள் நெற்றியிலே துலங்கும் சுந்தரமென்ன... வண்டிகள் - ரதங்கள் புறப்படும் வரிசையென்ன, ஜட்கா வண்டிக்காரருடைய கிராக்கி என்ன, பள்ளிச் சிறுவர் - சிறுமியர் அலங்காரமாய் நடந்து செல்லும் ஆனந்தமென்ன, இவைகள் எல்லாம் சிறப்பிலும் மகாச் சிறப்பு!
பின்னரும் ஒரு சிறப்பு இருக்கிறது... அது, ஒரு கிழவன் மேல் ஜட்கா வண்டி ஏறி, அவன் எமலோகம் போய்ச் சேர்ந்துவிட்டானென்ற சிறப்பு! கோச்சு வண்டி, ஒரு பெண்ணின் தலைமேல் ஏறி, மண்டை நொறுங்கிப் போச்சு; கட்டை வண்டி, ஒரு குழந்தை மேல் ஏறியது; ஒரு மோட்டார் வண்டி, ஒரு சைக்கிள் வண்டியுடன் மோதிக் கொண்டது; கடைசியாக, டிராம் வண்டி ஒருவன் மேலேறி, அவனை ஒரு, 'பர்லாங்' தூரம் தரையிலேயே தொங்க தொங்க இழுத்துக் கொண்டு போனது என்ற பெரும் சிறப்புகள்!
இதையெல்லாம் தாண்டி, ஐகோர்ட் மற்றும் சின்னக் கோர்ட்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும், ஜன சந்தடியின் மத்தியிலும், ஜோப்பில் கைபோடும் பிக்பாக்கெட்டுகளின் சிறப்பு!
மேலும், ரயில் வண்டிகளின் கோஷ்டம், பஞ்சாலை எந்திரங்களின் சங்கு நாதம், வீதியில் செல்லும் வண்டிகளின், 'கடகட' சத்தம் இவை போன்ற பலவும் சேர்ந்து தலை நோவெடுத்துக் கொள்ளச் செய்யும் பெரும் சிறப்பு!
இப்படியே மதியம் கழிந்து, மாலை ஆனதும், காபி ஓட்டல்களின் சிறப்பு! அதற்கு மேல், அன்றைய தின பத்திரிகைகளில் வெளியான விஷயங்களின் சிறப்பு; அதை பார்க்க கூட்டம் கூடும் படித்த புள்ளிகள்! இதில், ரொம்ப
அழகான சிறப்பு, பயாஸ்கோப்பு மற்றும் வெளியூர்காரர்களை மயக்க, ஓட்டை பவுண்டன் பேனாவை விற்பது!
பின், பொழுது கொஞ்சம் சாய்ந்தாலோ, வெள்ளை வெளேரென்று உடுப்பு உடுத்தி, தெரு வாசலில் நிற்கும் தேவதைகளின் சிறப்பு! அதன் பின், தீபம் வைத்தாலோ, நாகரிக மதுக் கடைகளின் சிறப்பு! அப்பால், இரவில், உண்டு விட்டு நாடகங்களுக்கு செல்லும் சிறப்பு!
சுமார், 90 ஆண்டுகளுக்கு முன் சென்னை இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் அதிக வித்தியாசமில்லை தானே!
நடுத்தெரு நாராயணன்
