தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணி மைந்தன் எழுதிய, 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து: ஏற்காட்டில் உள்ள ஆங்கிலப் பள்ளியில், தன் பிள்ளைகளை சேர்த்தார், மறைந்த இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதன். செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளி அது! அவர்கள், பள்ளி விடுதியில் தங்கி, படித்து வந்தனர்.

அந்த ஆண்டு, பெற்றோர் தினம் கொண்டாடப்பட்ட போது, குழந்தைகளை பார்த்து வர, அவரது மனைவி மற்றும் தாயாருடன் சென்றார், எம்.எஸ்.வி., குழந்தைகளை பார்த்ததுமே, அழ ஆரம்பித்த, எம்.எஸ்.வியின் தாயார், 'விடுதி சாப்பாடு சாப்பிட்டு, பிள்ளைகள் இளைத்து போய் விட்டனர். வாடகைக்கு இங்க ஒரு வீடு பார்; நான் இங்கேயே, தங்கி, இவர்களுக்கு சமைத்துப் போடுறேன்...' என்று வலியுறுத்தினார்.

சரியென்று வீடு பார்த்தார் எம்.எஸ்.வி., அதுவரை அந்த வீட்டில் குடியிருந்தவர், 'நான் குடியிருக்கும் இந்த வீடு, தற்போது, விற்பனைக்கு வருகிறது; வீட்டு சொந்தக்காரர், என்னையே வாங்கி கொள்ளும்படி கூறுகிறார். உங்களுக்கு விருப்பம் என்றால், வாங்கிக் கொள்ளுங்கள்...' என்றார்.

அழகிய, பெரிய பங்களா அது! விலை பேசி வாங்கினார் எம்.எஸ்.வி., அம்மாவையும், தன் பிள்ளைகளையும் அதில் குடியேற்றி, எல்லா வசதிகளையும் செய்து, ஒரு உயர் ரக காரையும் வாங்கிக் கொடுத்தார்.

இச்செய்தி திரையுலகில் பரவ, 'மிகச் சாதாரண நிலையில் இருந்த விஸ்வநாதன், முன்னுக்கு வந்து, தன் பிள்ளைகளை ஏற்காடு, 'கான்வென்ட்'டில் படிக்க வைக்கிறார்; அங்கேயே, ஒரு பங்களா வாங்கியிருக்கிறாராம்...' என்று, திரையுலகில் பலர் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த போது, எம்.ஜி.ஆர்., மட்டும், 'விசு... நீ ஏற்காட்டில் பங்களா வாங்கியது பெரிய தவறு; இப்படி கார், பங்களா என்று பகட்டான வாழ்க்கையின் ருசியை, படிக்கிற வயதில், பிள்ளைகளுக்கு காட்டி விட்டால், அவர்கள் எப்படி படிப்பர்... பிள்ளைகள், விடுதியில் இருந்தால் என்ன தவறு... அந்த வாழ்க்கை, சாப்பாடு, கஷ்டங்கள் எல்லாம், படிக்கிற பிள்ளைக்கு பழக்கமாக வேண்டும்; அப்போது தான் படிப்பு ஏறும்; நீ செய்தது சரியில்லை...' என்றார்.

இது பற்றி பின்னாளில் குறிப்பிட்ட எம்.எஸ்.வி., 'அன்று எம்.ஜி.ஆர்., எனக்கு இப்படியொரு அறிவுரை கூறிய போது, கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், அவர் கூறியது உண்மையாகிப் போனது. என் பையன்களுக்கு, நான் எதிர்பார்த்த அளவு, படிப்பு, ஏறவில்லை; வசதிகள், அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையை பாதித்து விட்டது...' என்றார்.

தி.மு.க., கட்சியைச் சேர்ந்த காரைக்குடி, ராம.சுப்பையா, தன், 'நினைவுகள்' நூலிலிருந்து: ஒருமுறை சோழவந்தானில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேச, அண்ணாதுரை தேதி கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து அண்ணாதுரைக்கு, 'டிரங்கால்' போட்டு, 'சோழவந்தானுக்கு வரும்போதே, சிவகங்கைக்கும் வந்துட்டுப் போகணும்...' என்று கேட்டுக் கொண்டேன்.

'சிவகங்கை, சோழவந்தானுக்குப் பக்கமா...' என்று கேட்டார்; 'ஆமா... குறுக்கு வழியில வந்தா, ரொம்ப பக்கம் தான்'னு ஒரு பொய்யைச் சொல்லி விட்டேன். உடனே, சிவகங்கைக்கு வர சம்மதித்தார்.

அண்ணாதுரையை அழைத்து வர, சோழவந்தானுக்கே சென்று விட்டேன். இரவு கூட்டம் முடிந்த பின், நண்பர்களோட நெடுநேரம் பேசியவர், நடு ராத்திரிக்குப் பின் தான், தூங்கப் போனார்.

பொதுவாகவே, காலையில் நேரங்கழித்து தான் எழுந்திருப்பார், அண்ணாதுரை. காலை, 10:00 மணிக்கு மேல் ஆகிவிட்டது; அண்ணாதுரை எழுந்திரிக்கவில்லை. சிவகங்கை பக்கம் தானேன்னு நினைத்து, அவர் தூங்கலாம்; ஆனா, ரொம்ப தூரம் போகணும்ன்னு எனக்குத் தானே தெரியும்...

காலை, 11:00 மணி; அண்ணாதுரை தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு போனேன். அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை. மேஜை மேல் இருந்த தாம்பாளத்தை, கையிலே எடுத்து, கை தவறி கீழே விழுவது போன்று, கீழே போட்டேன். உடனே, சிரிச்சுக்கிட்டே, 'முழுச்சிக்கிட்டு தான் இருக்கேன்; எப்போ, சிவகங்கைக்கு புறப்படணும்...' என்று கேட்டார்.

போகும் போது தான், அவருக்கு தூரம் தெரிந்தது; நான் சொன்ன பொய்யும் புரிந்தது. பின், அவருக்கே உரிய புன்சிரிப்புடன், 'ஆமாம்... அறையில் அந்த தாம்பாளம், தானாகவா விழுந்தது...' என்று கேட்டார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us