தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி ராம.சுப்பையாவின், 'என் திராவிட இயக்க நினைவுகள்' நூலிலிருந்து: ஈ.வெ.ரா.,விடம் தேதி வாங்கி, சிவகங்கையில், ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம். அவர் பேசி முடித்த போது, ரயில் புறப்பட்டு சென்று விட்டது.

'அதனாலே என்னப்பா... உன் கார்ல கொண்டு போய் காரைக்குடியில விட்டுடு... அங்கே ரயிலை பிடிச்சிடலாம்...' என்றார் ஈ.வெ.ரா.,

உடனே, அவரை காரில் ஏற்றி, வேகமாக காரைக்குடி புறப்பட்டேன். நாங்கள், போய்ச் சேரும் முன்பே, ரயில் காரைக்குடியை தாண்டி விட்டது. 'சரி... புதுக்கோட்டைக்கு விடு...' என்றார் ஈ.வெ.ரா.,

புதுக்கோட்டைக்கு பறந்தோம்; அதுவும் பலனில்லாமல் போய் விட்டது. 'ரயில் புதுக்கோட்டையை தாண்டிருச்சு; திருச்சிக்குப் போனா, எப்படியும் பிடிச்சிடலாம். போகட்டுமா...' என்று கேட்டேன்; 'சரி...' என்றார்.

கார் திருச்சியை நெருங்கியது; திருச்சிக்கு, கொஞ்சம் முன்னால், 'டோல்கேட்' இருந்தது. 'அங்கே நிறுத்தினா, நிச்சயம் திருச்சியிலேயும் ரயிலை விட்டுடுவோம்; என்ன செய்யலாம்...' என்று ஈ.வெ.ரா.,வை கேட்டேன்.

'இப்போ ரயிலைப் பிடிக்கறது தான் முக்கியம்; டோல்கேட்டைப் பத்தி கவலைப்படாதே... மூங்கில் கம்பு தான் தடுப்புக்கு வைச்சிருப்பானுங்க. அடிச்சு நொறுக்கிட்டு போயிடு. திரும்பி வரும் போது பார்த்துக்க...' என்றார். 'ஸ்டியரிங்'கைக் கெட்டியாகப் பிடித்து, ஆக்சிலேட்டரை வேகமா அழுத்தினேன். 'டபார்' என்று ஒரு சத்தம்; மூங்கில் கம்பு ரெண்டா உடைந்து விழுந்தது. 'ஆய்... ஊய்...' என்று சத்தம் போட்டபடி, ஒரு ஆள் ஓடி வந்தான்; நாங்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டோம்.

'பண்டிதமணி' நூலிலிருந்து: பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ஒருநாள், நீலாம்பிகை என்பவரது வீட்டில், விருந்து சாப்பிட்டார். அப்போது, 'ரசம் எடுத்து வாருங்கள்...' என்றார், பண்டிதமணி. 'ரசம், வடமொழி சொல் அல்லவா... சாறு என்று கூறலாமே...' என்றார் நீலாம்பிகை. உடனே, பண்டிதமணி, 'கருப்பாயி... சாறு எடுத்து வா...' என்றார்.

தன்னை, கருப்பாயி என்று அழைத்ததை கேட்டு, திடுக்கிட்டார், நீலாம்பிகை. அதை புரிந்து கொண்ட பண்டிதமணி, 'நீலாம்பிகை என்பது, வடமொழி சொல்; அதனால், தனித்தமிழில் கூறினேன். இதில் என்ன வியப்பு... நீலம் என்றால் கறுப்பு என்றும் பொருள் உண்டு; அம்பிகை என்றால் தாய். அதனால், கருப்பாயி என்றேன்...' என்றார்.

ஒரு பட்டிமன்றத்தில், 'தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்...' என்று கூறிய அறிஞர் ஒருவர், 'ஆங்கிலத்தில் பயிலும் குழந்தைகள், அம்மாவை, 'மம்மி' என்றும், சில சமயம் மழலையில், 'அம்மி' என்றும் அழைக்கின்றனர்...' என்றார்.

உடனே பட்டிமன்ற நடுவர், 'மம்மியை, 'அம்மி' என்பதில் தவறில்லை; அம்மி என்பது, பொருத்தமான பதம் தான். ஏனென்றால், அம்மியிடம் தானே குழவி - குழந்தை இருக்கும்...' என்றார்.

பழைய, 'மேட்' இதழில் படித்தது: 'நான் ஆராய்ச்சிக்காக செல்லும் இடம், மனித சஞ்சாரமே இல்லாதது...' என்ற புரொபசர் ஒருவர், 'என்னுடன் ரேடியோவோ, கடிகாரமோ, காலண்டரோ எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டேன்; சமையலுக்காக சகிக்க முடியாத தோற்றத்துடனான ஒரு கிழவி

என்னுடன் இருப்பாள்...' என்றார்.

'காலண்டர், ரேடியோ எதுவும் இல்லை என்றால், ஊருக்கு திரும்ப வேண்டிய சமயத்தை எப்படி தெரிந்து கொள்வீர்கள்?' என்று கேட்டார் நண்பர்.

'என்றைக்கு, சமையல்காரக் கிழவி அழகாகவும், இளமையாகவும் தோன்ற ஆரம்பிக்கிறாளோ, அன்றைக்கு, ஊர் திரும்ப வேண்டிய நாள் வந்து விட்டது என்று புரிந்து கொள்வேன்...' என்றார் புரொபசர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us