PUBLISHED ON : நவ 27, 2016

'வினோத உலகம்' நூலிலிருந்து: உலகின் மிக உயரமானது, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம்.
எவரெஸ்ட் உச்சியில் ஏறி, சாதனை படைக்க, பல காலமாக போராடினர், மலை ஏறும் வீரர்கள். பலர், இம்முயற்சியில் சோர்ந்து, திரும்ப, சிலர், பகீரதப் பிரயத்தனம் செய்ததில், பாதாளத்தில் வீழ்ந்து, மாண்டனர்.
கடந்த, 1953ல் நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரியும், இந்திய வாழ் நேபாளியான, டென்சிங்கும், முதன் முதலில், எவரெஸ்ட் உச்சியை அடைந்து, அவரவர் தேசிய கொடியை பறக்க விட்டு, சாதனை படைத்தனர்.
பின், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜூங்கோதாபே மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பச்சேந்திரிபால் என்ற இரு பெண்களும் எவரெஸ்ட் உச்சியை அடைந்து, சாதனை படைத்தனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரேடியோ போன்ற எவ்வித தொலை தொடர்பு கருவிகளின் உதவியுமின்றி, மெஸ்னர் என்ற இங்கிலாந்து வீரர், இச்சிகரத்தில் ஏறி, வியக்கத்தகு சாதனை படைத்தார்.
பொதுவாக, 8,000 அடி உயரம் சென்றதும், கடுமையான தட்பவெப்ப நிலை மாற்றத்தை சந்திக்க நேரிடும்; மேலே செல்லச் செல்ல, குளிர் ஆளைக் கொல்லும். 27,000 அடி உயரத்தில் ஆக்சிஜன் குறைவாகவும், பனி மூட்டம் அதிகமாகவும் இருப்பதால், உயிர் வாழ முடியாது.
நியூசிலாந்தை சேர்ந்த மார்க் இங்கிலிஷ், எவரெஸ்ட் உச்சியில் ஏறி நிகழ்த்திய சாதனையே, மாபெரும் சாதனை; ஏனெனில், இவர், இரு கால்களையும் இழந்தவர்!
'சரித்திரம் பேசுகிறது' நூலிலிருந்து:சீசர் கொலையுண்டதும், அவரின் காதலி கிளியோபாட்ராவை, மனைவியாக்கிக் கொண்டான், படை தளபதி மார்க் ஆண்டனி.
ஒருமுறை, ஆண்டனி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட கிளியோபாட்ரா, 'இது என்ன பெரிய விருந்து...' என்றாள் ஏளனத்துடன்!
கோபமடைந்த ஆண்டனி, 'நீ, எத்தனை பவுண்ட் மதிப்புக்கு சாப்பிட்டு விடுவாய்...' என்றான்.
'நான் மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பவுண்ட் மதிப்புக்கு சாப்பிடுவேன்...' என்றதும், 'எங்கே, சாப்பிடு பாக்கலாம்...' என்று, பந்தயம் கட்டினான்.
உடனே, மதுக் கிண்ணத்தை எடுத்து, சிறிது மதுவை ஊற்றி, பின், தன் காதில் இருந்த ஒரு தோட்டை கழற்றி, அதில் இருந்த முத்தை எடுத்து மதுவில் போட்டாள்; சிறிது நேரத்தில், அது கரைய, அதைக் குடித்து விட்டாள். அம்முத்தின் மதிப்பு, 75 ஆயிரம் பவுண்ட்!
மறு காதில் இருந்த தோட்டை, கழற்றப் போனாள். பதறிப் போய்த் தடுத்து, தன் தோல்வியை ஒப்புக் கொண்டான் ஆண்டனி.
'ஆனந்த குணபோதினி' 1929 இதழில், எஸ்.ஜி.ராமானுஜுலு எழுதிய கட்டுரையிலிருந்து: புதுச்சேரியில் இருந்து, 'இந்தியா' வாரப் பத்திரிகையை, மீண்டும் துவங்கி, நடத்தினார், பாரதியார். ஆனால், அப்பத்திரிகையை, சக்கரவர்த்தியின் பெயரால், பறிமுதல் செய்து விட்டதாக, அரசாங்க, 'கெசட்'டில் வெளியிட்டனர், சென்னை பிரிட்டிஷ் அரசாங்கத்தார்.
புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி என்றாலும், அங்குள்ள தபால் ஆபீஸ், பிரிட்டிஷ் அரசுடன் உடன்பாட்டில் இருந்தது. அதனால், 'இந்தியா' பத்திரிகையை, தபால் ஆபீசில் கொண்டு போய்க் கொடுத்ததும், அவற்றை, ஒட்டுமொத்தமாகக் கட்டி, சென்னையில் உள்ள ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவர். சந்தாதாரருக்கு கொடுக்கப்படவில்லை. இதை அறிந்து திகைத்தார், பாரதியார். அத்துடன், அவரது முயற்சி நின்று போனது. பின், வறுமை அவரை பிடித்து ஆட்ட துவங்கியது.
பாரதியார் சென்னையில் இருந்த போது, 'வந்தே மாதரம்' என்ற கீதத்தை, 'இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை...' என்று, தூய தமிழில் மொழிப்பெயர்த்து, 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டு, அதை, 'ஸ்வதேச கீதங்கள்' என்ற நூலிலும் சேர்த்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில், 'கர்மயோகி' பத்திரிகையை துவங்கினார், அரவிந்தர். அதன் முதல் இதழில், வந்தே மாதரத்திற்கான முந்தைய மொழி பெயர்ப்பில் தெளிவும், எளிமையும் இல்லை என்று, 'நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும்' என்று, வேறொரு மொழி பெயர்ப்பை, வெளியிட்டார், பாரதி.
பின், இப்பாடலையும், வேறு சில கீதங்களையும் சேர்த்து, ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகமாக, 'ஜன்மபூமி' என்ற பெயரில் வெளியிட்டார், பாரதியார்.
நடுத்தெரு நாராயணன்
