PUBLISHED ON : டிச 04, 2016

நீதிபதி எஸ்.மகராஜன் எழுதிய, 'நீதிமன்ற நினைவுகள்' நூலிலிருந்து: சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து, உண்மையை கண்டு பிடிப்பதற்கு குறுக்கு விசாரணை சிறந்த கருவி. அக்கருவியை, திறமையாக பயன்படுத்த, ஏட்டு ஞானமும், சட்ட நுட்பமும் இருந்தால் மட்டும் போதாது; எந்தெந்த சந்தர்ப்பங்களில் மனித மனம், என்னென்ன மாதிரி இயங்கும் என்பதை, அறிந்திருக்க வேண்டும். சாட்சி, கூண்டில் ஏறியவுடனேயே, அவரின் நடை, உடை, முக பாவங்கள் மூலம், அவருடைய யோக்கியதையும், மனப்பாங்கையும் ஏன் முழுத்தன்மையையுமே, கணநேரத்தில் மதித்து, அவருடைய தனிப்பண்புகளுக்கு ஏற்ப, அவரோடு வாதடும் வல்லமை, வழக்கறிஞருக்கு இருக்க வேண்டும்.
குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர், சாட்சியின் கண்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்; விசாரணை முடியும் வரை, எதிரியின் மனம், நம் வசத்திலிருக்க வேண்டுமென்றால், ஊடுருவிப் பாய்கிற கண்கள் மூலம் தான், அதை செய்ய முடியும். ஆகவே தான், பொய் சாட்சி சொல்கிறவர்கள், வழக்கறிஞரை ஏறிட்டு பார்க்காமல், பராக்கு பார்த்தபடியே பதில் சொல்வர். அவர்களை மருட்டியும், வெருட்டியும் வழக்கறிஞர் தம் முகத்தை பார்த்து, பதில் சொல்லும்படி செய்ய வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய மனதில் இருப்பதையெல்லாம், கண்ணாடி போல எடுத்துக்காட்டுவது, கண்கள் தான்.
சாட்சியின் மனதில் உள்ள ரகசியங்களை, அவனுடைய குரலில் தவழும், ஸ்வர பேதங்களை வைத்து அளவிடலாம். கண்ணுக்கு அடுத்தபடியாக, ஒருவனுடைய மனோநிலையை வெளிக்காட்டுவது, அவனுடைய சாரீரமே! அதனால், தன் குற்றத்தை மறைக்கும் படுதாவாக, தன் குரலையே உபயோகிக்கிறான் சாட்சி.
காலஞ்சென்ற ராமானுஜம் போன்ற சிறந்த வழக்கறிஞர்கள், சாட்சியை பம்பரமாக ஆட்டி வைப்பர். தங்களுக்கு சாதகமாக, என்ன பதில் வேண்டுமோ, அதை, அந்த சாட்சியையே சொல்ல வைத்து விடுவர். அப்பாவியிடம், சாதுவாகவும், தந்திரசாலியிடத்தில் ஜாக்கிரதையோடும், யோக்கியனிடத்தில் நம்பிக்கையோடும், பயந்தாங்கொள்ளியிடத்தில் கருணையோடும், அயோக்கியனிடத்தில், 'கடுகடு'ப்போடும், பொய்யனிடத்தில், கோடையிடி போலவும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். இப்படி, விசாரணை நடத்தும் போது, வழக்கறிஞர், தன் திறமையை விளம்பரப்படுத்த நினைக்காமல், கண்ணியத்துடன், உண்மையை துலக்கும் ஆர்வத்தோடு, நடந்து கொள்ள வேண்டும்.
'உலக வினோதங்கள்' நூலிலிருந்து: எகிப்து நாட்டில், மம்மி என கூறப்படும், இறந்த உடல், பல நூற்றாண்டுகளாக எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை பற்றி, ஹிராட்டஸ் என்பவர், (கி.மு., 484 - 425) விரிவாக கூறுயுள்ளார். அது...
சடல பாதுகாப்பு என்பது தனிக் கலை. இதில், மிகவும் உயர்ந்தது, செலவு அதிகமில்லாதது மற்றும் செலவு குறைவானது என, மூன்று வகைகள் உள்ளன.
முதல் வகை: மூக்கின் வழியாக, கொக்கி போட்டு, மூளையின் எல்லா பகுதிகளையும் எடுக்கின்றனர். மீதி ஏதேனும் எஞ்சி இருந்தால், மருந்து செலுத்தி, வெளிக் கொணருகின்றனர். பின், வயிற்றைக் கிழித்து, குடல்களை களைந்து, அந்த வெற்றிடத்தை மருந்துகள் போட்டு, நன்கு கழுவுகின்றனர். அதற்கு, தென்னை மற்றும் பனையிலிருந்து தயாரித்த சாராயத்தை பயன்படுத்துவர்.
அதன்பின், அதில், பலவகை வாசனை பொருட்களை நிரப்புவர். பின், அறுத்த வயிற்றுப் பகுதியை மீண்டும் தைத்து, அவ்வுடலின் மீது மருந்துகள் தடவி, 70 நாட்களுக்கு, எண்ணெய் கொப்பரையில், ஊறப் போடுவர். 70 நாட்கள் ஆனவுடன், அதை எடுத்து கழுவி, துணிகளால் அலங்காரம் செய்து, அதற்கென தனியாக செய்த பெட்டியில், அச்சடலத்தை வைத்து, அடியில், 'கோந்து' போன்ற பிசினால் தடவி, கீழே நழுவி விடாதபடி செய்து விடுகின்றனர். பின், அப்பெட்டியை மூடி, 'சீல்' வைத்து, அதற்குரியவர்களிடம் கொடுத்து விடுவர்.
இரண்டாம் வகை: இம்முறையில், மூக்கின் வழியாக, மூளையையோ, வயிற்றில் உள்ள குடலையோ எடுப்பது கிடையாது. ஆசன வாய் வழியாக, மருந்து ஒன்றை உடலில் ஏற்றி, அத்துவாரத்தை மூடி, எண்ணெய் கொப்பரையில் இட்டு விடுவர். அதற்குரிய நாட்களுக்கு பின், அவ்வுடலை எடுத்து, செலுத்தப்பட்ட மருந்தை வெளியேற்றுவர். இப்போது, மூளை, குடல் மற்றும் சதை யாவும் குழம்பு போல் வெளியேறி, எலும்பு பகுதி மட்டும் தான் இருக்கும். பின், அவ்வுடலை, துணியால் அலங்கரித்து, உரியவரிடம் சேர்த்து விடுகின்றனர்.
மூன்றாம் வகை: இது, வசதி குறைவானர்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட முறை. உடலில் உள்ள பகுதிகளை, மருந்தால் வெளியேற்றி, பின், சில நாட்கள் கொப்பரையில் இட்டு, அதன்பின், உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால், இது நீண்ட நெடுங்காலம் இருப்பதில்லை.
நடுத்தெரு நாராயணன்
