தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1957ல் நடந்த தேர்தலில், கண்ணதாசன் செட்டி நாட்டில் தன் ஊர் இருந்த திருக்கோஷ்டியூர் சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராகப் போட்டியிட்ட போது, அவருக்கு, அவரது சமூகத்திலிருந்தே ஒரு பிரச்னை எழுந்தது.

அதாவது, நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில் ஒரு பழக்கம் இருந்தது. தேர்தல் நேரத்தில், நகரத்தார் தங்களுக்கெனத் தனியாக ஒரு கூட்டம் போடுவர். போட்டியிடும் தங்கள் ஜாதி வேட்பாளர்களை அழைத்து, அதில் பேச சொல்வர்.

அப்படி ஓட்டு கேட்க வேண்டியவர் யாராக இருந்தாலும், சபையின் முன்னே, கீழே விழுந்து வணங்கி, தங்களுக்காக ஓட்டளிக்கும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். செட்டிநாட்டு அரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார் கூட, அப்படித்தான் செய்தார். ஆனால், யாருக்கும் தலை வணங்காத கவிஞர் கண்ணதாசன், இந்த விஷயத்திலும் வணங்கா முடியாக நின்றார். கீழே விழுந்து கும்பிட மறுத்து விட்டார்.

நகரத்தார் ஓட்டு தனக்குக் கிடைக்காது என்ற எண்ணம் வந்தபோது, மேலும் ஒரு தவறைச் செய்தார். நாட்டுக்கோட்டை நகரத்தாரையே கடுமையாகத் தாக்கி, கூட்டங்களில் பேசினார். இதன் விளைவாக, அவருக்குக் கிடைக்கவிருந்த ஓட்டுக்களும், கிட்டாமல் போய் விட்டன.

— கண்ணதாசன் நினைவுகள் நூலிலிருந்து...

***

பர்மியர்களுக்குக் கடவுளிடத் தில் இருக்கும் பக்தியை விட, துறவியரிடத்தில் இருக்கும் பக்தி அதிகம். பெரிய கோவிலில் எங்கும் புத்த பிட்சுகள் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

புத்த முனிவர்களை, 'பொங்கி கள்' என்று சொல்கின்றனர். மஞ்சள் நிறமுள்ள நீண்ட ஆடையை அணிகின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர்.

சின்னஞ்சிறிய பையன், பத்து வயது இருக்கும். தலை மொட்டையாக, பிட்சுகளுக்குரிய ஆடையுடன் நடந்து வந்தான். அவன், 'துறவி' என்று, என்னால் நம்ப முடியவில்லை.

'இந்த பையனுக்கு இந்த வேஷம் போட்டிருக்கின்றனரே... ஏன்?' என்று கேட்டேன். 'இவன் ஒரு பொங்கி' என்று கூறினர். 'ஐயோ, பாவம்... இந்த பிராயத்தில் உலகைத் துறந்து விட்டானே... பருவம் முதிர, முதிர இவன் தன் துறவொழுக்கத்தை இறுதி வரை கொண்டு செலுத்த வேண்டுமே!' என்றேன்; நண்பர்கள் சிரித்தனர். பிறகு, உண்மை தெரிந்தது.

பர்மிய குடும்பத்தில், மூத்த மகன் துறவியாக வேண்டுமாம். துறவியாவதென்றால், அஞ்ச வேண்டியதில்லை. வாழ்நாள் முழுவதும் துறவியாக இருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. மொட்டைத் தலை, மஞ்சள் உடை, பிட்சா பாத்திரம் இவற்றைத் தாங்கினால், யாரும் பிட்சு ஆகிவிடலாம். சில மாதங்களோ, சில நாட்களோ பிட்சுவாக இருந்து, மறுபடியும் பழைய வாழ்க்கைக்கு வந்து விடலாம்.

துறவுக் கோலம் பூண்டவன், எந்த பருவத்தினன் ஆயினும், வீட்டில் தங்க மாட்டான்; மடத்தில்தான் தங்குவான். பொங்கியைக் கண்டால், யாவரும் வணங்குகின்றனர். தாம் பெற்ற பிள்ளை பொங்கியானால், தந்தையும், தாயும் அவனை வணங்குகின்றனர். பொங்கி எப்போதும் கையில் பிட்சா பாத்திரம் வைத்திருக்கிறான். பிச்சை வாங்கித்தான் உண்ண வேண்டும். அவர்கள் வாங்குவது பிச்சையா? பொங்கிகளுக்கு, அறுசுவை உண்டியும், அளிக்கின்றனர் மக்கள். அவர்களை எங்கே கண்டாலும் ஆண்களும், பெண்களும் வணங்குகின்றனர்.

பொங்கியாக இருப்பவர், அந்த கோலத்தில் இருக்கும் வரை, தீய செயல் எதுவும் செய்வதில்லை. ஒரு நண்பர் இதை வேடிக்கையாக, 'யாரையாவது, உதைக்க வேண்டும், கொல்ல வேண்டுமென்று ஒரு பொங்கி நினைத்தால், அவன் தன் ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு, வேறு ஆடை அணிந்து, கையில் கத்தியை எடுத்துக் கொள்வான்...' என்று கூறினார்.

— பர்மியப் பயணக் கட்டுரையில், கி.வா.ஜகந்நாதன்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us