
டாக்டர்.மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' எனும் நுாலிலிருந்து: ஜவஹர்லால் நேரு, தேர்தல் பிரசாரத்திற்காக, அசாம் மாநிலத்திற்கு பயணம் செய்தார். அவரை எதிர்த்து, கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர், முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள்.
ரயில் நிலையம் ஒன்றில், புகைவண்டி வந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கூச்சல் அதிகமானது. நேருவுடன் இருந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தை பற்றி கூறி, 'வெளியே செல்ல வேண்டாம்; பாதுகாப்பில்லை...' என்று எச்சரித்தனர்.
அவர்கள் சொல்வதை காதில் வாங்காமல், ரயிலை விட்டு இறங்கி, வேகமாக வெளியில் வந்தார், நேரு.
கறுப்பு கொடி வைத்திருந்த ஒருவரிடம் சென்று, கொடியை வாங்கிக் கொண்டார்.
'உங்கள் கருத்தை சொல்ல, உங்களுக்கு உரிமை உள்ளது. அதே போல, என் கருத்தை சொல்லவும், எனக்கு உரிமை உண்டு...' எனக் கூறி, தன் பிரசாரத்தை தொடர்ந்தார்.
போராட்டம் செய்தவர்கள், நேருவின் துணிவையும், அணுகுமுறையையும் கண்டு ஆச்சரியப்பட்டு, கலைந்து சென்றனர்.
வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது: 'நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு செல்லும்போது, உங்களுக்கு எப்படி இருக்கும்?'
அதற்கு நாகேஷ், 'நான் கவலையே படமாட்டேன் சார்... ஒரு கட்டடம் கட்டும்போது, சவுக்கு மரத்தை வச்சு சாரம் கட்டி, குறுக்கே பலகைகள் போட்டு, அதன் மேல், பல சித்தாள்கள் நின்னு, கட்டட வேலை செய்வர். பல ஆண்டுகளுக்கு பின், கட்டடம் கட்டி முடித்த பிறகு, வர்ணங்கள் பூசி, கீழே இறங்கும்போது, ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்தபடி வருவர்.
'கிரஹப்பிரவேசத்தன்று, கட்டடம் கட்டுவதற்கு, எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்த சவுக்கு மரத்தை, யார் கண்ணிலும் படாமல் எங்கேயோ மறைத்து வைத்து, வேறெங்கோ வளர்ந்த வாழை மரத்தை, இல்லம் முன் நட்டு வைத்து, விழா நடத்தி, அனைவரையும் வரவேற்பர். அத்தனை பெருமையும், வாழை மரத்துக்கே போய் சேரும்.
'இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரத்துக்கு, மூன்று நாள் தான் வாழ்க்கை. ஆடு, மாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பர், பிறகு, குப்பை வண்டியில் போய் சேரும்.
'மறைந்து கிடக்கிறதே, அந்த சவுக்கு மரம், கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில், என்றைக்கும் சிரித்தபடியே இருக்கும்!'
'கல்வி உலகம்' பதிப்பகம், த.வ.சிவசுப்பிரமணியன் எழுதிய, 'சிந்தனை சிறகுகள்' எனும் நுாலிலிருந்து: புதுடில்லி, ராஜ்காட்டில், காந்திஜி நினைவிடம் உள்ளது. இதன் அருகே பதிக்கப்பட்ட கல்லில், காந்திஜியின் கீழ்கண்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன...
சுதந்திரமான, வலுவான இந்தியாவை காண விரும்புகிறேன். உலக நன்மைக்காக, துாய்மையான தியாகத்தையும், உறுதியான எண்ணத்தையும், அது சுயமாகவே கொண்டிருக்க வேண்டும்.
தனி நபர், துாய்மையாக இருந்து, குடும்பத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். இது, பின்னர், கிராமத்திற்காகவும், கிராமம், மாவட்டத்திற்காகவும், தியாகம் செய்வதாய் அமையும். இப்புவியுலகில், கடவுளின் ராஜ்யத்தை நான் விரும்புகிறேன்... என்று உள்ளது.
இந்திய மக்கள் எதிர்பார்ப்பதும், இது தானா?
நடுத்தெரு நாராயணன்