sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மார் 24, 2019

Google News

PUBLISHED ON : மார் 24, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிமேகலை பிரசுரத்தின், 'கல்கண்டு' தமிழ்வாணனின் கேள்வி - பதில்கள் நுாலிலிருந்து:

ராமலிங்க சுவாமிகளின் பாடல்களில், அனேக இடங்களில், கருணாநிதி, கருணாநிதி என்ற சொல் அடிபடுகிறதே?

'வணக்கத்திற்குரிய ஐயா அவர்கள் வாழ்ந்து வந்த அந்த நாட்களிலேயே, தி.மு.க., இருந்திருக்குமேயானால், இந்த வார்த்தையை பயன்படுத்தியே இருக்க மாட்டார்.

மாறன் எழுதிய, 'ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?' என்ற கொள்கை விளக்க நுாலை நீங்கள் படித்தீர்களா?

அதை படித்த பிறகு தானே, 'ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?' என்று, நான் கேட்க ஆரம்பித்தேன்.

அண்ணாதுரை, டில்லி மேல் சபையில் பேசி முடித்ததும், உடனே திரும்பி விட என்ன காரணம்?

மத்தாப்பு கொளுத்துவது என்றால், அதை கையில் பிடித்து அங்கேயே நிற்கலாம்; பட்டாசு என்றால், கொளுத்தி போட்டு, உடனே குடு குடு என்று ஓடி வந்து விட வேண்டியது தானே!

எனக்கு, மயிர் கொட்ட ஆரம்பித்து விட்டது. கொட்டின மயிர் முளைக்குமா?

கொட்டிய மயிர் எப்படி, மறுபடியும் வந்து முளைக்கும்? அது தான் குப்பைக்கு போய் விடுகிறதே!

உடம்புக்குள் ஓடும் ரத்தம், சிவப்பாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு மனிதனும், உள்ளுக்குள், 'டேஞ்சர்' ஆனவன் என்பதை காட்டுவதற்காக இருக்குமோ!

ராஜாஜி, மீண்டும் காங்கிரசில் சேருவாரா?

சுடப்பட்ட தோசை, மறுபடியும் மாவு ஆகுமா?

கவிஞர்களில், மக்கள் திலகம் யார்?

கவிஞர் கண்ணதாசன் தான். கண்ணதாசனுக்கு இருக்கிற மக்கள் செல்வம், யாருக்கு இருக்கிறது... இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், கண்ணதாசனுக்கு, 13 குழந்தைகள். இப்போது, எத்தனை குழந்தைகளோ... தெரியாது!

தமிழரசு கழகத்திலிருந்து விலகிய, கா.மு.ஷெரீபை, 'காய்ந்த சருகு உதிர்ந்து விட்டது' என்று, கட்சியின் தலைவர், ம.பொ.சி., சொல்கிறாரே?

பின்னே, பட்டு போன மரத்திலிருந்து பச்சை இலையா உதிரும்?

'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்!' எனும் நுாலிலிருந்து:தென் ஆப்ரிக்காவில், நீண்ட நாட்களாக, படுத்த படுக்கையாக இருந்தார், காந்திஜியின் மனைவி கஸ்துாரிபாய். அவரின் நிலைமை கவலையை தந்தது.

உப்பு, பருப்பு வகைகளை சாப்பாட்டிலிருந்து நீக்கி விட்டால், உடல்நிலை சரியாகி விடும் என்று தோன்றியது, காந்திஜிக்கு. ஆனால், அதற்கு உடன்படவில்லை, கஸ்துாரிபாய்.

'அப்படியே, உயிர் போனாலும் போகட்டும். உப்பு இல்லாமல், ஒருநாள் கூட என்னால் சாப்பிட முடியாது. உங்களால், உப்பு இல்லாமல் சாப்பிட முடியுமா...' என, கேட்டார், கஸ்துாரிபாய்.

'என்னால் சாப்பிட முடியும் என்பது மட்டுமில்லை, உனக்கு துணையாக, ஓர் ஆண்டிற்கு, உப்பு இல்லாமல் நான் சாப்பிட போகிறேன்; இது சத்தியம்...' என்றார், காந்திஜி.

ஏதோ ஒன்று சொல்ல, மற்றொன்று நடக்கிறதே என்ற கவலை வாட்டியது, கஸ்துாரிபாயை.

'நான், உப்பை நீக்கி சாப்பிடுகிறேன். அதற்காக, நீங்களும் அப்படி செய்ய வேண்டாம். எப்போதும் போல, நீங்கள் சாப்பிடுங்கள்...' என்றார்.

அதற்கு, ஒப்புக்கொள்ளவில்லை, காந்திஜி.

'சொன்னது சொன்னது தான்; அந்த வாக்கை காப்பாற்றியே தீருவேன்...' என்றார், காந்திஜி.

டாக்டர்.மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' எனும் நுாலிலிருந்து: அமெரிக்காவை சேர்ந்த, கோடீஸ்வரர், ராக்பெல்லரிடம், நன்கொடை வாங்க, சில கல்லுாரி மாணவர்கள் சென்றனர். கல்லுாரியில் ஒரு வகுப்பறை கட்டுவதற்கு, பணம் கேட்டு சென்றபோது, ஒரு விளக்கின் ஒளியில் படித்துக் கொண்டிருந்தார், ராக்பெல்லர்.

மாணவர்களை கண்டதும், விளக்கை அணைத்து, அவர்களிடம் பேசினார்.

விளக்கை அணைத்ததும், இவ்வளவு கருமியாக இருக்கும், ராக்பெல்லர், பணம் தரப்போவதில்லை என்று, மாணவர்கள் நினைத்தனர்.

ஆனால், அவர்களிடம் பேசிய பின், ஒரு வகுப்பறை கட்ட தேவையான, மூன்று லட்ச ரூபாயை கொடுத்தார், ராக்பெல்லர்.

ஆச்சரியப்பட்ட மாணவர்கள், விளக்கை அணைத்தது பற்றி கேட்டனர்.

'நான், உங்களோடு பேச வேண்டிய நேரத்தில், விளக்கு தேவையில்லை. அதன் எரிபொருளை சேமிப்பது, நல்லது தானே... சிக்கனமாக இருக்க வேண்டியதில் கவனமாக இருந்தால் தான், தேவைக்கு பணம் கிடைக்கும்...' என்று அறிவுரை கூறினார், ராக்பெல்லர்.

நடுத்தெருநாராயணன்






      Dinamalar
      Follow us